சென்னை: சிறு வியாபாரிகளுக்கான தொழில் உரிம கட்டணத்தை தமிழக அரசு குறைத்திருப்பதற்கு தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் வி்க்கிரமராஜா நன்றி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழக அரசு திடீரென தொழில், வணிக உரிமக்கட்டணங்களை பன்மடங்கு உயர்த்தியது, வணிகர்களுக்கு அதிர்ச்சி அளித்தது. இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு ஆகியோரிடம் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் கோரிக்கை மனு அளித்து பல்முனை அழுத்தம் கொடுக்கப்பட்டது.
அடித்தட்டு வணிகர்கள் பாதிக்கப்படுவதை தவிர்க்க குறைந்தபட்சம் 1000 சதுரஅடி பரப்பளவுக்கான உரிமக்கட்டணத்தை 500 சதுரஅடி பரப்பளவாக குறைக்க வேண்டும். பெட்டிக்கடை, டீக்கடை, சிறு, குறு கடைகள், துரித உணவகங்கள் போன்ற 500 சதுரஅடிக்கு குறைவானவற்றுக்கு வணிக உரிமக்கட்டணம் ஆண்டுக்கு ரூ.1000 ஆக அறிவிக்க வேண்டும் என அரசிடம் வலியுறுத்தி இருந்தோம்.
அதை ஏற்று, தமிழக அரசு 500 சதுரஅடி பரப்பளவுக்கு குறைவான தொழில், வணிக உரிமக்கட்டணம் ஆண்டுக்கு ரூ.1200 என குறைத்து அறிவித்திருக்கின்றது. அரசின் இந்த அறிவிப்புக்கு தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் நன்றி தெரிவித்துக்கொள்கின்றது.
அதே சமயம் வணிக உரிமக்கட்டணத்தை செலுத்தி, உரிமம் புதுப்பித்துக்கொள்வதற்கு குறுகிய காலமே இருப்பதால், 45 நாட்கள் கூடுதலாக அதாவது வரும் மே 15-ம் தேதி வரை வணிக உரிமங்கள் எந்தவித கூடுதல் கட்டணமும், அபராதமும் இன்றி செலுத்திட கால நீட்டிப்பு அளிக்க வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.