தொகுதி மறுசீரமைப்பு: `தமிழ்நாட்டின் குரல்வளை முழுமையாக நசுக்கப்படும்' – எதிர்ப்பு கிளப்புவது ஏன்?

மத்திய பா.ஜ.க அரசு பதவியேற்றது முதல் தொகுதி மறுசீரமைப்பு, `ஒரே நாடு, ஒரே தேர்தல்’ நடைமுறையை கொண்டுவர தீவிரம் காட்டி வருகிறது. புதிய நாடாளுமன்ற கட்டடம் திறப்பு விழாவில் பேசிய பிரதமர் மோடி, “நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை எதிர்காலத்தில் அதிகரிக்கும். அதற்கு ஏற்ற வகையில்தான் புதிய நாடாளுமன்றம் வடிவமைக்கப்பட்டுள்ளது” என்றார்.

அதன்படி புதிய நாடாளுமன்றத்தில் மக்களவையில் 888 பேரும், மாநிலங்களவையில் 384 பேரும் அமரும் வகையில் வசதி செய்யப்பட்டுள்ளது. தற்போது 543 மக்களவை உறுப்பினர்களும், 245 மாநிலங்களவை உறுப்பினர்களும் இருக்கிறார்கள். இவ்வாறு மத்திய அரசு தீவிரம் காட்டி வரும் சூழலில் ‘மாநில அரசுகளின் உரிமை பறிபோகும்’ என, மறுபக்கம் எதிர்க்கட்சிகள், தென்னிந்திய மாநில முதல்வர்கள் குற்றம்சாட்டி வருகின்றன.

பாஜக

`அனைத்துக் கட்சிக் கூட்டத்தை அறிவித்த ஸ்டாலின்’

இந்த சூழலில் கடந்த 25.2.2025 அன்று செய்தியாளர்களிடம் பேசிய தமிழக முதல்வர் ஸ்டாலின், “தமிழகம் இன்று மிகப்பெரிய உரிமைப் போராட்டத்தை நடத்த வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளது. ஆகவே வரும் 5.3.2025 அன்று அனைத்துக் கட்சிக் கூட்டத்தை நடத்துவதாக அறிவிக்கிறோம். இந்தக் கூட்டத்தில் தொகுதி மறுசீரமைப்பு பற்றி ஆலோசிக்கப்படும். தொகுதி மறுசீரமைப்பு என்ற பெயரில் தென்னிந்தியாவின் தலைக்கு மேல் ஒரு கத்தி தொங்கிக் கொண்டிருக்கிறது. எல்லா வளர்ச்சிக் குறியீடுகளிலும் தமிழகம் முதன்மை மாநிலமாக இருந்தும் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் தற்போது 39 மக்களவை தொகுதிகள் உள்ளன.

இதனை குறைக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மத்திய அரசு இதற்காக முயற்சித்து வருகிறது. தமிழகத்தில் இருக்கக்கூடிய 8 தொகுதிகளை இழக்கக்கூடிய சூழல் ஏற்பட்டுள்ளது. இனி தமிழகத்தில் 31 தொகுதிகள் தான் இருக்கும் என்ற சூழல் உருவாகும். அதிக மக்கள்தொகை கொண்ட மாநிலங்களில் இருந்து அதிக பிரதிநிதிகள் இருப்பார்கள். இதனால் நாடாளுமன்றத்தில் நமக்கான பிரதிநிதித்துவம் குறைந்துவிடும். தமிழகத்தின் குரல் நசுக்கப்படும். இது வெறும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை சார்ந்த கவலை மட்டும் அல்ல. இது மாநிலத்தின் உரிமை சார்ந்த கவலை என்பதை மறந்துவிடக் கூடாது” என்றார்.

ஸ்டாலின்

இந்த கருத்து தமிழக அரசியல் களத்தில் புயலைக்கிளப்பியது. பின்னர் இதுதொடர்பாக அரசியல்கட்சி தலைவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் எழுதியிருக்கும் கடிதத்தில், “தற்போதைய மக்களவைத் தொகுதிகளின் அடிப்படையிலேயே தமிழ்நாட்டின் பல நியாயமான கோரிக்கைகளைப் பெற இயலவில்லை. மத்திய அரசின் திட்டங்களுக்கு தமிழ்நாட்டிற்கான நிதி குறைக்கப்படுகிறது. இந்தச் சூழ்நிலையில் தொகுதிகளின் எண்ணிக்கை மேலும் குறைக்கப்பட்டால், தமிழ்நாட்டின் குரல்வளை முழுமையாக நசுக்கப்படும்” என்றார்.

கர்நாடகா மாநில முதல்வர் சித்தராமையா, தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி உள்ளிட்டோரும் மத்திய அரசுக்கு எதிராக கருத்து தெரிவித்துள்ளார்கள்.

அமித் ஷா பதில்..!

இதற்கு கோவையில் எதிர்வினையாற்றிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, “தொகுதி மறுசீரமைப்பு குறித்து நாடாளுமன்றத்தில் பிரதமர் தெளிவாகக் கூறியுள்ளார். தொகுதி மறுசீரமைப்பு, விகிதாச்சார அடிப்படையில் மேற்கொள்ளப்படும். எனவே நாட்டில் எந்த மாநிலத்துக்கும் பாதிப்பு ஏற்படாது. குறிப்பாக தென்னிந்திய மாநிலங்களில் பாதிப்பு இருக்காது. மேலும் இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் மக்களிடத்தில் தவறான தகவல்களைத் தெரிவித்து துரோகம் செய்து வருகிறார்” என்றார்.

அமித்ஷா

`மக்கள் தொகை அடிப்படையில் கூடாது..!’

இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய தி.மு.கவின் துணைப் பொதுச் செயலாளர் ஆ.ராசா, “அரசியல் அமைப்பு சட்டத்தின்படி 1971-ம் ஆண்டு தொகுதி மறுசீரமைப்பு செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டது. இதை அப்போது நாடாளுமன்றத்தில் தனி சட்டத் திருத்தம் இயற்றி, தள்ளி வைத்தது. அப்போது இருந்த ஒன்றிய அரசு. குடும்பக் கட்டுப்பாட்டுத் திட்டத்தை அமல்படுத்தியதன் காரணமாக, வடமாநிலங்களுக்கும் தென் மாநிலங்களுக்கும் சம்மமன்ற நிலை நிலவுகின்றது. அதனால் தொகுதி மறுசீரமைப்பு 25 ஆண்டு தள்ளி வைக்கலாம் என்று தள்ளி வைக்கப்பட்டது. இதன் மூலம் மக்கள்தொகைக் கட்டுப்பாடு திட்டத்தை ஊக்குவிக்கப்பட்டது. பிறகு 2004-ம் ஆண்டு வாஜ்பாய் பிரதமராக இருந்தபோதும் தள்ளிவைக்கப்பட்டது.

மறுசீரமைப்பு என்பது மக்கள் தொகை அடிப்படையில் மட்டுமே செய்ய முடியாது என்பதை ஏற்றுக்கொண்டதன் அடிப்படையில்தான் நாடாளுமன்றம் சட்டம் இயற்றி தள்ளி வைத்தது. இதற்கு மக்கள்தொகையை அடிப்படையாகக் கொண்டு மறுசீரமைப்பு செய்ய முடியாது என்பதை நாடாளுமன்ற ஒப்புக்கொண்டதாகத்தான் பொருள் கொள்ள வேண்டும். இப்போது அப்படிப்பட்ட எந்த நிபந்தனைகளையும் இல்லாத நேரத்தில், மக்கள்தொகை அடிப்படையில் மட்டுமே தொகுதிகளை மறுசீரமைப்பு செய்தால், மக்கள்தொகை கட்டுப்பாட்டுத் திட்டங்களை செம்மையாக நிறைவேற்றி இருக்கிற தமிழ்நாடு உள்ளிட்ட தென்மாநிலங்கள் ஜனநாயகரீதியாக தங்களின் பிரதிநிதித்துவத்தை நாடாளுமன்றத்திலும் சட்டமன்றத்திலும் இழக்கும்.

இந்திய மக்கள் தொகை

ஒன்றிய உள்துறை அமைச்சர், “விகிதாசார அடிப்படையில்தான் மறுசீரமைப்பு அமையும், அப்படி விகிதாசார அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பு செய்யும் போது தமிழ்நாட்டிற்கு ஒரு தொகுதி கூட குறையாது” என இந்தியில் அறிவித்து இருக்கிறார். அது ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு, ஒன்றிய அரசின் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் pro-rata என சொல்லப்பட்டு இருக்கிறது. அந்த pro-rata என்பது இப்போது இருக்கும் தொகுதிகளின் அடிப்படையில் உயருமா, அல்லது மக்கள் தொகை அடிப்படையில் உயருமா என்பதற்கு, எந்த பதிலும் இல்லை. அந்த குழப்பதைத் தீர்ப்பதாக எண்ணிக் கொண்டு அண்ணாமலை திடீரென நாடாளுமன்றத் தொகுதிகளின் விகித அடிப்படையில் எண்ணிக்கை உயரும் என்று உறுதியாக தெரிவித்து இருக்கிறார். இவ்வாறு உள்துறை அமைச்சர் சொல்லவில்லை; உள்துறை அமைச்சரின் பேச்சுக்கு அண்ணாமலை புதியதாக விளக்கம் கூறியுள்ளார். இந்த கருத்து தவறு.

எனவேதான், மக்கள்தொகை அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பு தமிழ்நாட்டு மக்கள் உடன்பாடு அல்ல, தமிழக அரசிற்கு ஏற்புடையது அல்ல என்பதை முதலமைச்சர் அவர்கள் தெள்ளதெளிவாகக் கடிதம் எழுதியுள்ளார். அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கும் அழைப்பு விடுத்துள்ளார். எங்களின் எண்ணிக்கைக் குறைய கூடாது என்பது மட்டுமல்ல; நீங்கள் கொண்டு வருகிற எந்தவொரு திட்டத்திலும் எங்களுக்கு அதே எண்ணிக்கையை வைத்துக்கொண்டு வடமாநிலங்களுக்கு மக்கள்தொகை அடிப்படையில் அதிகமாக கொடுத்தாலும், அது அநீதிதான் என்பதில் நாங்கள் மிக தெளிவாக இருக்கிறோம். pro-rata என்பது 1971ல் எடுக்கப்பட்ட சென்செஸ் அடிப்படையில் இப்போது இருக்கிற நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையில் அப்படியே உயர வேண்டும்.

தமிழ்நாடு அரசு

848 இருக்கைகளை நாடாளுமன்றத்தில் போட்டுள்ளனர், இதில் மக்கள் தொகை அடிப்படையில் என்றால் எங்கள் எண்ணிக்கை குறையும். pro-rata அடிப்படை என்றாலும் எண்ணிக்கை குறையும். எனவே 1971ல் என்ன சொன்னார்களோ, அதன் அடிப்படையில் இப்போது இருக்கிற 39 தொகுதி எண்ணிக்கையை pro-rata-வாக எல்லோருக்கும் உயர்த்தினால் எங்களுக்கும் உயர்த்த வேண்டும். மக்கள்தொகையை குறைக்க வேண்டும் என சொன்னது ஒன்றிய அரசாங்கம். அதைச் செய்த எங்களுக்கு மட்டும் ஏன் தண்டனை? என்கிற கேள்வி எழுகின்றது. மக்கள் தொகையை கட்டுபடுத்தியிருக்கிறோம். திட்டங்கள் மூலம் முன்னேறி இருக்கிறோம். தமிழ்நாடு முதன்மை மாநிலமாக வந்துள்ளது. இதற்காக நமது பிரதிநிதித்துவம் குறைக்கப்பட்டால், அது தண்டனை அல்லவா?

தமிழகத்தின் மக்கள் தொகை எண்ணிக்கை குறைந்துள்ளதால், அதன் அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பு நடந்தால், நமது குரல் நெறிக்கப்படும். தமிழ்நாட்டிற்கு குறையாது, மற்ற மாநிலங்களுக்கு கூடினால், அதுவும் பிரச்சனை தானே. Pro-rata என்பதும் பிரச்சனைதான். புதிய பாராளுமன்றத்தை திறக்கும்போது இருக்கைகள் 848 அதிகமாக்கப்படும் என தெரிவித்து இருந்தனர். தமிழ்நாட்டு உணர்வு எதிரான போக்கு பா.ஜ.க-வுக்கு இருக்கிறது; ஒரே மொழி, ஒரே தேர்தல், ஒரே இந்தியா என்ற கருத்து தமிழ்நாட்டிற்கும் – மாநிலங்களுக்கும் எதிரான அரசியல் போக்குதான். இவ்வாறான அரசியலை பா.ஜ.க வைத்து கொண்டு, நாங்கள் தனியாக இருக்கோம் என்றால் என்ன அர்த்தம். பா.ஜ.க, எதனையும் வெளிப்படையாகச் சொல்வதில்லை, அவர்கள் அரசியல் நேர்மையற்றவர்கள். அதனால்தான் பா.ஜ.க-வை நம்ப முடியாது என்று சொல்கிறோம்” என கொதித்தார்.

பாராளுமன்றம்

இதுகுறித்து நம்மிடம் பேசிய அரசியல் நோக்கர்கள், “இந்திய அரசமைப்புச் சட்டத்தின் பிரிவு 82ன் படி ஒவ்வொரு பத்தாண்டிற்குப் பிறகும் நாட்டில் உள்ள நாடாளுமன்றத் தொகுதிகள் மறுசீரமைப்பு செய்யப்பட்டு வந்தது. 1975-ம் ஆண்டில் அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி மக்கள் தொகை கட்டுப்பட்டுத் திட்டங்களை தீவிரமாக முன்னெடுத்தார். அப்போது தொகுதிகள் மறுசீரமைப்பை அடுத்த 25 ஆண்டுகளுக்கு மேற்கொள்ளக்கூடாது என திருத்தம் கொண்டுவரப்பட்டது. இதன் நோக்கம் மக்கள் தொகைக் கட்டுப்பாட்டை ஒழுங்காகச் செயல்படுத்திய மாநிலங்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதாகும். கடந்த 2001-ல் இந்த 25 ஆண்டு காலம் நிறைவடைந்தது. அப்போது பிரதமராக இருந்த வாஜ்பாய், தொகுதி மறுசீரமைப்பை முன்னெடுத்தார். அதற்கு கடுமையான எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்து மேலும் 25 ஆண்டுகளுக்கு தள்ளிப் போனது, தொகுதி மறுசீரமைப்பு. தற்போது இந்த 25 ஆண்டுகாலம் வரும் 2026-ம் ஆண்டில் நிறைவு பெறுகிறது.

எனவே மக்கள் தொகையை கணக்கெடுப்பு நடத்தி தொகுதி மறுசீரமைப்புச் செய்யலாம் என மத்திய அரசு முடிவு செய்திருக்கிறது. இதில்தான் சிக்கலே இருக்கிறது. தமிழகம், கேரளா, ஆந்திராவில் மக்கள் தொகைக் கட்டுப்பாட்டை ஒழுங்காகச் செயல்படுத்தின. ஆனால் உத்தர பிரதேசம், மகாராஷ்டிரா, பிகார், மேற்கு வங்கம், மத்திய பிரதேசம் ஆகிய ஐந்து மாநிலங்கள் மக்கள் தொகை மிகவும் அதிகமாக இருக்கிறது. அந்த மாநிலங்களில் மட்டுமே இந்திய மக்கள் தொகையில் பாதிப் பேர் இருக்கிறார்கள். இந்தசூழலில் மக்கள் தொகை அடிப்படையில் இடங்களை அதிகரித்தால், சம்பத்தப்பட்ட மாநிலங்களுக்கு அதிக மக்களவை இடங்கள் கிடைக்கும். மக்கள் தொகை குறைவாக இருக்கும் தென் மாநிலங்கள் பாதிப்பை சந்திக்கும். எனவேதான் எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது” என்றனர்.

நாராயணன் திருப்பதி

இறுதியாக இதுகுறித்து விளக்கம் கேட்டு பா.ஜ.க துணைத்தலைவர் நாராயணன் திருப்பதியிடம் பேசினோம், “இந்தியா கூட்டணியை சேர்ந்த ராகுல் காந்திதான், ‘தொகுதி மறுசீரமைப்பை மக்கள் தொகை அடிப்படையில் செய்ய வேண்டும்’ என்றார். இதற்கு பிரதமர் மோடி, ‘மக்கள் தொகை அடிப்படையில் மக்கள் தொகை அடிப்படையில் செய்தால் தென்னிந்தியா கடுமையாக பாதிக்கப்படும். எனவே அப்படி செய்ய மாட்டேன்’ என, தெரிவித்துவிட்டார். மேலும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, ‘மக்கள் தொகை அடிப்படையில் இல்லாமல் விகிதாச்சார அடிப்படையில்தான் தொகுதி மறுசீரமைப்பு செய்யப்படும்’ என தெரிவித்துள்ளார். இதன்படி பார்த்தால் தமிழக பாராளுமன்ற தொகுதிகளின் எண்ணிக்கை உயரும் என்பதுதான் தெளிவாகிறது. ஆனால் தமிழகத்தில் நிலவும் சட்டம் ஒழுங்கு சீர்கேடு, பெண்கள், குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமைகளை மறைப்பதற்காக மொழி போன்ற தேவையில்லாத பிரச்னைகளை கிளப்பி விடுவதை வழக்கமாக கொண்டிருக்கிறார், முதல்வர் ஸ்டாலின். இதை தமிழக பா.ஜ.க சார்பில் வன்மையாக கண்டிக்கிறோம். அவர் மக்கள் பிரச்னைகளில் கவனம் செலுத்த வேண்டும். அதைவிடுத்து மக்களை தூண்டி விட்டு மலிவான அரசியல் செய்வது தவறான செயல்” எனக் கொதித்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.