புதுடெல்லி: குஜராத் நகரசபை தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட்ட முஸ்லிம்களில் 63 சதவிகிதம் பேருக்கு வெற்றி கிடைத்துள்ளது. இதனால், ஆளும் கட்சி பாஜகவுக்கு முஸ்லிம்கள் ஆதரவு திரும்புவதாகக் கருதப்படுகிறது.
இந்தியாவில் கடந்த 1980 வரை முஸ்லிம்கள் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு அளித்தனர். பிறகு பிராந்தியக் கட்சிகளுக்கு ஆதரவாக அவர்களது வாக்குகள் மாற தொடங்கின. குஜராத்தில் பிப்ரவரி 2002 மதக்கலவரத்துக்கு பின் பாஜகவுக்கு வுக்கு எதிராக முஸ்லிம்கள் வாக்களித்தனர்.
இந்நிலையில், கடந்த 2007 முதல் குஜராத்தில் நிலைமை மெல்ல மாறி மீண்டும் முஸ்லிகள் ஆதரவு பாஜகவுக்கு கிடைக்க தொடங்கியது. சமீபத்தில் முடிந்த நகரசபை தேர்தலில், பாஜகவுக்கு முஸ்லிம்கள் வாக்களித்துள்ளது தெரிய வந்துள்ளது.
பாஜக ஆளும் குஜராத்தில் 66 நகர சபைகளுக்கானத் தேர்தல் சமீபத்தில் முடிந்தது. இதன் நிர்வாகிகள் 2,171 இடங்களுக்கான தேர்தலில் பாஜக. வை சேர்ந்த 1,608 பேர் வெற்றி பெற்றுள்ளனர். இவற்றில் போட்டியிட்ட 103 முஸ்லிம்களில் 82 பேர் வெற்றி பெற்றுள்ளனர். இவர்களில் 21 முஸ்லிம்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர். கடந்த 2018 நகர சபை தேர்தலில் 43 முஸ்லிம்கள் பாஜக.வில் போட்டியிட்டு வெற்றி பெற்றனர். எனவே, 2018-ஐ விட அதிகமாக 2025-ல் பாஜகவில் முஸ்லிம்களின் வெற்றி 63 சதவீதமாக அதிகரித்துள்ளது.
இதுகுறித்து ‘இந்து தமிழ் திசை’ நாளிதழிடம் குஜராத் பாஜக ஊடக பிரிவு அமைப்பாளர் யக்னேஷ் தாவே கூறும்போது, “கடந்த 2007-ல் நாம் முஸ்லிம்கள் வாழும் பகுதியிலும் வளர்ச்சிப் பணிகளில் அதிக கவனம் செலுத்தினோம். இதன் பலனாக 2008-ல் முஸ்லிம் வேட்பாளர்களுக்கு படிப்படியாக வாய்ப்பளித்து வருகிறோம். பொது சிவில் சட்டம், முத்தலாக், வக்பு வாரிய திருத்தச் சட்டம் போன்றவற்றால் எதிர்க்கட்சிகள் முஸ்லிம் வாக்குகளை பாஜக.வுக்கு எதிராகத் திருப்ப முயல்கின்றனர். இது பலன் தராது என்பது நகர சபை தேர்தல் முடிவுகள் காட்டி விட்டன. இந்த ஆதரவு வரும் நாட்களில் பாஜக.வுக்கு அதிகரிக்கும். எனவே, எதிர்காலத்தில் முஸ்லிம் வாக்குகள் அதிகம் உள்ள பகுதிகளில் அவர்கள் மதத்திலேயே வேட்பாளர்களை நிறுத்த தலைமைக்கு பரிந்துரைப்போம்” என்றார்.
குஜராத் காங்கிரஸில் 2018 நகரசபை தேர்தலில் 133 முஸ்லிம்கள் வெற்றி பெற்றனர். இந்த எண்ணிக்கை 2025-ல் 109 எனக் குறைந்துள்ளது. குஜராத் மதக்கலவரத்துக்கு பிறகு 2022-ல் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸுக்கு 17 முஸ்லிம் எம்எல்ஏக்கள் கிடைத்தனர். தற்போது ஒரே ஒரு எம்எல்ஏ காங்கிரஸில் உள்ளார். எனவே, பாஜகவுக்கு பெருகும் முஸ்லிம் களின் களி ஆதரவு, வரும் நாட்களில் குஜராத்தில் காங்கிரஸுக்கு பெரும் சவாலாகி விடும் எனக் கருதப்படுகிறது.