‘இந்தித் திணிப்பை என்றும் எதிர்ப்போம்’ – 72-வது பிறந்தநாளில் முதல்வர் ஸ்டாலின் முழக்கம்

சென்னை: 72-வது பிறந்தநாளை கொண்டாடும் தமிழக முதல்வர் ஸ்டாலின் அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் மலர்தூவி மரியாதை செலுத்தினார். அப்போது அவர் ”அண்ணா வழியில் அயராது உழைப்போம்; இந்தித் திணிப்பை என்றும் எதிர்ப்போம்.” என்று முழங்கினார். துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள், தொண்டர்கள் அதனை வழிமொழிந்து கோஷம் எழுப்பினர். அண்ணா, கருணாநிதி நினைவிடங்களைத் தொடர்ந்து சென்னை வேப்பேரியில் உள்ள பெரியார் திடலில், தந்தை பெரியார் நினைவிடத்திலும் முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.

முன்னதாக, “தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். அவர் நீண்ட ஆயுளுடன் ஆரோக்கியமாக வாழ வேண்டும்” என்று பிரதமர் மோடி தனது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டிருந்தார். அதேபோல் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி, தமிழில் கையெழுத்திட்டு தமிழிலேயே வாழ்த்து கூறியுள்ள ஆளுநர் ஆர்.என்.ரவி, “தாங்கள் இன்று தங்களுடைய 72-வது பிறந்தநாளை கொண்டாடுவதை அறிந்து மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். தங்களுடைய தலைமையின் கீழ் தமிழ்நாட்டு மக்கள் எல்லா நலன்களையும் பெற்று மகிழ்ச்சியுடன் வாழ வாழ்த்துகிறேன்.எல்லாம் வல்ல இறைவன் அருளால் தாங்கள் பூரண உடல் ஆரோக்கியத்துடனும், சந்தோஷத்துடனும் தமிழ்நாட்டு மக்களுக்கு சேவை ஆற்றிடவும் இந்த நாளில் தங்களை வாழ்த்துகிறேன்” என்று கூறியிருந்தார். நடிகர் ரஜினிகாந்த் தொலைபேசியில் முதல்வர் ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்தார். தவெக தலைவர் விஜய் ட்விட்டர் பக்கத்தில் “முதல்வருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் இன்று காலை முதல்வர் ஸ்டாலின் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அரசுப் பள்ளியில் 2025-26 கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கையைத் தொடங்கிவைத்தார். குழந்தைகளுக்கு இனிப்புகள், பரிசுகள் வழங்கி அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

பின்னர் அங்கிருந்து சென்னை மெரினாவில் உள்ள அண்ணா, கருணாநிதி நினைவிடங்களுக்குச் சென்றார். அங்கு மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். அப்போது. அவர் ”அண்ணா வழியில் அயராது உழைப்போம். இந்தித் திணிப்பை என்றும் எதிர்ப்போம்.” என்று முழங்க துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள், தொண்டர்கள் அதனை வழிமொழிந்து கோஷம் எழுப்பினர்.

தனது பிறந்தநாளை ஒட்டி முதல்வர் ஸ்டாலின் கோபாலபுரத்தில் உள்ள இல்லத்தில் தாயார் தயாளு அம்மாவை சந்தித்து ஆசி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.