மும்பை: மகாராஷ்டிராவின் புனே பேருந்து நிலையத்தில் இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் நீதியை நிலைநாட்ட விசாரணை நடைபெற்று வருகிறது. விசாரணைக்கு பின்பு உண்மை தெரியவரும் என்று மகாராஷ்டிரா துணை முதல்வர் அஜித் பவார் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அஜித் பவார் கூறுகையில், “நேற்று முன்தினம் வரை மக்கள் புனே பாலியல் வன்கொடுமையில் தொடர்புடைய நபர் ஏன் கைது செய்யப்படவில்லை என கேள்வி எழுப்பினர். குற்றம்சாட்டப்பட்டவர் ஒரு கரும்பு காட்டில் ஒளிந்திருந்தார். அவரைப் பிடிக்க அரசு ட்ரோன்களைப் பயன்படுத்தியுள்ளது. தற்கொலைக்கு முயற்சி செய்யும் அளவுக்கு அவரின் நிலைமை இருந்தது. இதுபோன்ற சம்பவங்கள் (பாலியல் வன்கொடுமை) எங்கும் நடக்கக்கூடாது என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன். இப்போது முறையான விசாரணை நடப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. விரிவான விசாரணைக்கு பின்பு உண்மைகள் வெளியே வரும்.” என்று தெரிவித்தார்.
முன்னதாக, மகாராஷ்டிர மாநிலம் புனே நகரின் ஸ்வர்கேட் பேருந்து நிலையத்தில் 26 வயது பெண் ஒருவர் பேருந்துக்காக காத்திருந்தபோது இளம்பெண்ணை அணுகிய மர்ம நபர் ஒருவர், மற்றொரு பிளாட்பாரத்தில் பேருந்து நிற்பதாகக் கூறி தன்னுடன் அழைத்துச் சென்றுள்ளார். ஆள் நடமாட்டம் இல்லாத பிளாட்பாரத்தில் நின்றிருந்த பேருந்தில் இளம்பெண் ஏறி அமர்ந்ததும் அவரை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு தப்பியோடிவிட்டார்.
இது தொடர்பான புகாரின் பேரில் சிசிடிவி பதிவுகளை புனே போலீஸார் ஆய்வு செய்து குற்றவாளியின் புகைப்படத்தை வெளியிட்டனர். 8 தனிப்படைகள் அமைத்து விரிவான தேடுதல் வேட்டை மேற்கொண்டனர். இந்நிலையில் புனே மாவட்டத்தின் ஷிரூர் தாலுகா குணாட் கிராமத்தில் குற்றம்சாட்டப்பட்ட தத்தாத்ரே ராம்தாஸ் கடேவை (37) போலீஸார் வியாழக்கிழமை இரவு கைது செய்தனர். ஒரு வயலில் ராம்தாஸ் கடேவை சுற்றிவளைத்து பிடித்தனர். வெள்ளிக்கிழமை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட தத்தாத்ரேவை 12 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டது.