புனேயில் கடந்த செவ்வாய்க் கிழமை அதிகாலையில் பேருந்திற்கு டெப்போவில் காத்து நின்ற மருத்துவமனை பெண் ஊழியர் பேருந்திற்குள் வைத்து பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். அப்பெண்ணிடம் தத்தாத்ரேயா ராமதாஸ் என்பவர் அப்பெண் செல்ல வேண்டிய பஸ் வேறு இடத்தில் நிறுத்தப்பட்டு இருப்பதாகக் கூறி, பேருந்திற்குள் அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு இருட்டுக்குள் தப்பிச் சென்றுவிட்டார்.
தத்தாத்ரேயாவின் புகைப்படம் கண்காணிப்பு கேமரா பதிவு மூலம் கண்டுபிடிக்கப்பட்டது. அவரைப் பற்றி தகவல் கொடுத்தால் ரூ.1 லட்சம் சன்மானம் வழங்கப்படும் என்று போலீஸார் தெரிவித்திருந்தனர். அவரைப் பிடிக்கத் தனிப்படைகள் அமைக்கப்பட்டன. தத்தாத்ரேயாவின் மொபைல் போனை ஆய்வு செய்தபோது புனேயிலிருந்து 100 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள அவரது சொந்த ஊரான குனத் என்ற இடத்திலிருப்பது தெரிய வந்தது.

உடனே 100 சிறப்பு போலீஸார் மோப்ப நாய்கள், ட்ரோன்கள் துணையோடு அங்குச் சென்றனர். ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கான போலீஸார் வந்தவுடன் கிராமத்து மக்களும் அதிர்ச்சியடைந்தனர். கிராமத்து மக்கள் 500 பேர் போலீஸாருடன் சேர்ந்து கிராமம் முழுக்க இருக்கும் கரும்பு தோட்டத்தில் தேடினர். இரவில் டார்ச் லைட் துணையோடு 100 போலீஸார் உட்பட 600 பேர் சல்லடைப் போட்டுத் தேடினர். இறுதியில் அதிகாலை 1.30 மணிக்குக் கரும்பு தோட்டத்திற்குள் பதுங்கி இருந்த தத்தாத்ரேயாவைக் கைது செய்தனர்.
அவரிடம் விசாரித்த போது தலைமறைவாக இருந்த காலத்தில் சாப்பிடச் சாப்பாடு இல்லாமல் கரும்பு மற்றும் தக்காளியைச் சாப்பிட்டு வாழ்ந்ததாகத் தெரிவித்துள்ளார். அதோடு போலீஸாரிடம் பிடிபடாமல் இருக்க மூன்று முறை தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். பதுங்கி இருந்த தோட்டத்திலிருந்த மரத்தில் தற்கொலைக்கு முயன்றபோது கயிறு அறுந்துவிட்டதாக தத்தாத்ரேயா தெரிவித்துள்ளார்.
இது குறித்து புனே போலீஸ் கமிஷனர் அமிதேஷ் குமார் கூறுகையில், “தத்தாதரேயாவைக் கண்டுபிடிக்க உதவிய குனத் கிராம மக்களுக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும். 500 அதிகாரிகள் 3 நாட்கள் இரவு, பகலாக வேலை செய்து தத்தாத்ரேயாவை அதிகாலை 1.30 மணிக்குக் கைது செய்துள்ளனர். இந்த தேடுதலில் கிராம மக்கள் 500 பேர் மிகவும் ஆர்வத்தோடு பங்கெடுத்தனர். தத்தாத்ரேயாவின் நடமாட்டத்தைக் கண்காணிக்க ட்ரோன்கள் பயன்படுத்தப்பட்டது. அதோடு மோப்ப நாய்களும் பயன்படுத்தப்பட்டது. தத்தாத்ரேயா குறித்து தகவல் கொடுத்தால் ஒரு லட்சம் கொடுக்கப்படும் என்று தெரிவித்திருந்தோம். தத்தாத்ரேயா தனது கிராமத்தில் உள்ள ஒருவர் வீட்டிற்குச் சென்று தண்ணீர் குடித்துள்ளார்.
அந்த நபர் எங்களுக்கு உடனே போன் செய்து தகவல் கொடுத்தார். அதனைத் தொடர்ந்தே அங்குத் தேடி தத்தாத்ரேயாவைக் கைது செய்தோம். எனவே தத்தாத்ரேயாவிற்குக் குடிக்கத் தண்ணீர் கொடுத்த நபருக்கு அறிவிக்கப்பட்ட ஒரு லட்சம் சன்மானம் வழங்கப்படும். இக்காரியத்தில் ஒட்டுமொத்த கிராமமும் எங்களுக்கு உதவி செய்தது. சிலர் தங்களது இரு சக்கர வாகனத்தைக் கொடுத்து உதவினர். அவர்களும் இரு சக்கர வாகனத்தில் சென்று தேடினர்” என்று தெரிவித்தார்.

பொருளாதார ரீதியில் மிகவும் பலவீனமாக இருக்கும் தத்தாத்ரேயா மீது 6 வழக்குகள் நிலுவையில் இருக்கிறது. அவரது மனைவி ஒரு விளையாட்டு வீராங்கனையாகும்.
பகல் முழுவதும் கிராமத்திலிருந்துவிட்டு இரவில் புனே வருவதைத் தத்தாத்ரேயா வழக்கமாகக் கொண்டிருந்தார் என்பது அவரது மொபைல் போனை ஆய்வு செய்ததில் தெரிய வந்தது. தத்தாத்ரேயாவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியபோது அவர் சார்பாக ஆஜரான வழக்கறிஞர்கள், பேருந்து நிலையத்தில் இருவரும் பேசி பழகிக்கொண்டதால் இருவரும் விருப்பப்பட்டுத்தான் பேருந்திற்குள் உறவு வைத்துக்கொண்டனர். இது பாலியல் வன்கொடுமை கிடையாது என்று வாதிட்டனர். ஆனால் தத்தாத்ரேயாவை 14 நாட்கள் போலீஸ் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வணக்கம் வாசகர்களே விகடனின் லேட்டஸ்ட் செய்தி அப்டேட்கள், எக்ஸ்க்ளூசிவ் வீடியோக்கள், சுட சுட சுவாரஸ்யமான கட்டுரைகள் என உங்களை எப்போதும் ட்ரெண்டியாக வைத்திருக்க விகடன் வாட்ஸ்அப் சேனலில் இணைந்திருங்கள்.
Click here: https://bit.ly/VikatanWAChannel