பாமக வேளாண் நிழல் பட்ஜெட் முக்கிய அம்சங்கள்: மணல் குவாரிகள் மூடல் முதல் நெல் தொழில்நுடப் பூங்கா வரை

சென்னை: பாமக சார்பில் 2025-26ம் ஆண்டுக்கான வேளாண் நிழல் நிதிநிலை அறிக்கையை அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று (மார்ச் 1) வெளியிட்டார். அதன் முக்கிய அம்சங்கள்:

> அனைத்து விளைபொருட்களையும் அரசே கொள்முதல் செய்யும் திட்டத்தை செயல்படுத்துவதற்கு வசதியாக, வேளாண் வணிகம் மற்றும் சந்தைப்படுத்துதல் என்ற புதிய அமைச்சகம் உருவாக்கப்படும்.

> அனைத்து விளைபொருட்களையும் அரசே கொள்முதல் செய்வதை கட்டாயமாக்கும் வகையில் வேளாண் விளைபொருட்கள் (கொள்முதல் விலை நிர்ணயம் மற்றும் கொள்முதல்) சட்டம் 2025 நிறைவேற்றப்படும்.

> காய்கறிகள், பழங்கள் ஆகியவற்றுக்கு 3 மாதங்களுக்கு ஒருமுறை விலை நிர்ணயிக்கப்படும்.

> நெல் கொள்முதல் விலை குவிண்டாலுக்கு ரூ.3,500, கரும்புக்கு டன்னுக்கு ரூ.5,000 ஆக உயர்த்தப்படும்.

> 30,000 காவிரி பல்பொருள் அங்காடிகளை நிர்வகிக்க ஒரு லட்சம் புதிய பணியாளர்கள் நியமிக்கப்படுவார்கள்.

> தமிழகத்தின் சாகுபடி பரப்பு அடுத்த 5 ஆண்டுகளில் 40 லட்சம் ஏக்கர் அதிகரிக்கப்படும்.

> தமிழகத்தில் கடந்த சில பத்தாண்டுகளில் 15,000 ஏரிகள் காணாமல் போய்விட்டன. 27,000 ஏரிகளின் கொள்ளளவு ஆக்கிரமிப்பால் குறைந்துவிட்டது. காணாமல்போன ஏரிகளில் சாத்தியமானவற்றை மீட்டெடுக்கவும், ஆக்கிரமிக்கப்பட்ட ஏரிகளை மீட்டெடுக்கவும் ஏரிகள் மேலாண்மை வாரியம் என்ற அமைப்பு உருவாக்கப்படும்.

> விலங்குகள் தாக்கி உயிரிழப்போருக்கு ரூ.25 லட்சம், முடங்கும் அளவுக்கு காயமடைவோருக்கு ரூ.15 லட்சம், லேசான காயமடைவோருக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்கப்படும்.

> தமிழகத்தில் இயற்கை சீற்றங்களால் பாதிக்கப்படும் பயிர்களுக்கு நியாயமான இழப்பீடு கிடைப்பதை உறுதி செய்ய புதிய பயிர்க்காப்பீட்டு நிறுவனத்தை தமிழக அரசே தொடங்கும்.

> இயற்கை சீற்றங்களால் பாதிக்கப்படும் பயிர்களுக்கு அரசின் சார்பில் நிவாரணம் வழங்க நிலையான நிவாரணத் திட்டம் வகுக்கப்படும்.

> காவிரி டெல்டா மாவட்டங்களில் சராசரி உற்பத்தித் திறன் 5 டன்னாகவும், விழுப்புரம், திருவள்ளூர், திருவண்ணாமலை, திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்களில் 7 டன்னாகவும் உயர்த்தப்படும்.

> மத்திய அரசால் வழங்கப்படும் உழவர் மூலதன மானிய திட்டத்தின் பயனாளிகள் எண்ணிக்கை 37.81 லட்சமாக குறைந்துவிட்டது. இதை 60 லட்சமாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும்.

> காய்கறிகள், பழங்கள், மலர்கள் உள்ளிட்ட வேளாண் விளைபொருட்களை வீணாகாமல் பாதுகாத்து வைக்க அனைத்து வட்டங்களிலும் குளிர்ப்பதனக் கிடங்கு அமைக்கப்படும்.

> காவிரி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், அரியலூர், மயிலாடுதுறை, கடலூர், திருச்சி, கரூர், புதுக்கோட்டை ஆகிய 9 மாவட்டங்களையும் உள்ளடக்கியதாக விரிவாக்கப்படும். இதற்கான சட்டத்திருத்தம் நடப்பு தொடரில் நிறைவேற்றப்படும்.

> என்எல்சி 3-வது சுரங்கம் திட்டம், முதல் இரு சுரங்கங்களை விரிவாக்கும் திட்டம் ஆகியவற்றுக்கு தடைவிதிக்கப்படும். இதற்காக 25,000 ஏக்கர் நிலம் எடுக்க அனுமதிக்கப்படாது.

> செய்யாறு சிப்காட் விரிவாக்கத்துக்காக மேல்மா உள்ளிட்ட கிராமங்களில் 3,000 ஏக்கர் நிலம் கையகப்படுத்தும் திட்டம் கைவிடப்படும். அரசு நிலங்களில் இந்த விரிவாக்கம் செய்யப்படும்.

> சிப்காட் உள்ளிட்ட எந்த தொழில் திட்டத்துக்கும் வேளாண் விளை நிலங்கள் கையகப்படுத்தப்படாது.

> சென்னை அருகே அறிவு நகரம் அமைக்க 870 ஏக்கர் நிலம் எடுக்கும் திட்டம் கைவிடப்படும்.

> கிழக்குக் கடற்கரை சாலைப் பகுதி பாதுகாக்கப்பட்ட பறவைகள் வாழிடமாக அறிவிக்கப்படும்.

> இந்தியாவில் ஒட்டுமொத்தமாக காய்கறி பயிரிடப்படும் பரப்பில் 3.36%, பழங்கள் பயிரிடப்படும் பரப்பில் 4.59% மட்டுமே தமிழகத்தில் உள்ளது. அடுத்த 3 ஆண்டுகளில் இந்தப் பரப்பை 50% அதிகரிக்க சிறப்புத் திட்டம் செயல்படுத்தப்படும். இதன் மூலம் உழவர்களின் வருமானம் உயரும்.

> மதுராந்தகம் ஏரியை ரூ.120 கோடியில் தூர்வாரி சீரமைக்கும் திட்டம் நிறைவேற்றப்படும்.

> தமிழகத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள தமிழ்நாடு நீர்ப்பாசனத் திட்ட செயலாக்க ஆணையத்தின் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் ரூ.20,000 கோடி மதிப்பில் பாசனத் திட்டங்கள் செயல்படுத்தப்படும். அடுத்த 5 ஆண்டுகளில் தமிழகத்தில் பாசனப் பரப்பை 40 லட்சம் ஏக்கர் அதிகரிக்கும் நோக்குடன் பாசனத் திட்டங்கள் செயல்படுத்தப்படும்.

> தமிழகத்தில் 25 இடங்களில் மணல் குவாரிகளும், 40-க்கும் மேற்பட்ட இடங்களில் மாட்டு வண்டி மணல் குவாரிகளும் செயல்பட்டு வருகின்றன. உழவுக்கும், சுற்றுச் சூழலுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் இந்த மணல் குவாரிகள் அனைத்தும் மூடப்படும்.

> தமிழகத்தை 4 மண்டலங்களாக பிரித்து ஒவ்வொரு மண்டலத்திலும் ஒரு வேளாண் பல்கலைக் கழகம் அமைக்கப்படும். கோவையில் ஏற்கெனவே வேளாண் பல்கலைக் கழகம் உள்ள நிலையில், தஞ்சாவூர், வேலூர், நெல்லை ஆகிய நகரங்களில் புதியப் பல்கலைக் கழகங்கள் அமைக்கப்படும்.

> தஞ்சாவூரில் நெல் உற்பத்தியைப் பெருக்க நெல் தொழில்நுட்பப் பூங்கா (Rice Technology Park) அமைக்கப்படும். இதன் மூலம் நவீன தொழில்நுட்பங்கள் விவசாயிகளுக்கு பயிற்றுவிக்கப்படும்.

> கூட்டுறவு வங்கிகள் மூலம் வழங்கப்படும் கடனுக்கு வட்டி கிடையாது மாறாக, 10% மானியம் வழங்கப்படும். ரூ.1 லட்சம் கடன் பெறும் விவசாயி, ரூ.90,000 திருப்பி செலுத்தினால் போதுமானது.

> எருமை வகைகளில் அதிகப்படியாக பால் கொடுக்கும் முர்ரா வகை இனங்கள் உற்பத்தி செய்யப்பட்டு உழவர்களுக்கு வழங்கப்படும். இதன் மூலம் தமிழகத்தின் பால் உற்பத்தி அடுத்த 5 ஆண்டுகளில் இரு மடங்காக்கப்படும்.

> மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்டம் மூலம் வேலை வழங்கப்படும் நாட்களின் எண்ணிக்கை 150 ஆக உயர்த்தப்படும். வேளாண் பணிகளுக்கும் இத்திட்டம் நீட்டிக்கப்படும் என்பது உள்ளிட்ட 115 திட்ட அறிவிப்புகள் அதில் இடம்பெற்றுள்ளன.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.