திருப்பூர்: “ஊராட்சி தலைவர்களை மதிக்கிறேன், அதேசமயம் உதயநிதி ஸ்டாலினை தலைவராக மதிக்கவில்லை” என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
அவிநாசி அருகே பழங்கரையில் நடந்த ‘வனத்துக்குள் திருப்பூர்’ அமைப்பின், 11-ம் ஆண்டு துவக்க விழாவில் இன்று (மார்ச் 1) பங்கேற்ற பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை ‘சூழலியல் மாற்றத்தில் தொழில் முனைவோர் பங்கு’ எனும் தலைப்பில் பேசினார். பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியது: “மும்மொழிக் கொள்ளையை வலியுறுத்தி வரும் 5-ம் தேதி தமிழகத்தில் கையெழுத்தை இயக்கத்தை துவங்குகிறோம். வரும் மே மாதம் வரை 1 கோடி கையெழுத்து பெற்று, குடியரசுத் தலைவரிடம் அளிக்க உள்ளோம்.
தொகுதி மறுசீரமைப்பு விஷயத்தில் தமிழக மக்களை குழப்ப வேண்டாம். அது விகிதாச்சார அடிப்படையில்தான் உயரப் போகிறது. இந்நிலையில் எதற்கு தமிழகத்தில் அனைத்துக் கட்சி கூட்டம்? தமிழகத்தில் நடக்கும் பிரச்சினைகளை பேசாமல் திசை திருப்பும் வேலைதான் இது. மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் விழா பெயரில் அனைவரும் பாஜகவை திட்டி உள்ளனர். அரசியல் நாகரிகம் குறித்து அமைச்சர் கீதாஜீவன் பேசும் நேரத்தில் குழந்தைகளுக்கு நல்ல சத்துணவு கிடைக்கிறதா என பார்க்க வேண்டும்.
சீமான் வீட்டில் சம்மன் ஒட்டியது, கிழித்தது என தமிழக காவல் துறை தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்துகிறதோ என்ற சந்தேகம் எழுகிறது. வீட்டில் இருப்பவர்களிடம் சம்மன் கொடுக்கலாம். தேடப்படும் குற்றவாளி வீட்டில் வாசலில்தான் சம்மன் ஒட்டுவார்கள். ஆனால், தமிழக காவல் துறை நடந்துகொண்ட விதம் ஏற்புடையதல்ல.
தங்கம் தென்னரசு டெல்லி செல்லும்போது, அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்திக்கும்போது, ஜிஎஸ்டி கூட்டத்துக்கு செல்லும்போது நிதி குறைப்பு விஷயத்தை பற்றி பேசமாட்டார். மொழிக் கொள்கைக்கு ஆதரவாக திருமாவளவன் இருந்தால், எதற்காக சிபிஎஸ்இ பள்ளி நிர்வாக குழு தலைவராக இருக்க வேண்டும்? மாவட்ட ஆட்சியராக இருப்பவர், மூன்றரை வயது குழந்தை விஷயத்தில் நடந்துகொண்டது சரியில்லை என உடனடியாக மாநில அரசு மாற்றியது வரவேற்தக்க விஷயம்.
விரிசல் விழுந்தால்தான் தலையில் மண் விழும். அடுத்த 8 மாதங்களில் முதல்வர் தனியாகத்தான் இருப்பார். திமுகவினர் குறுநில மன்னர்கள் போல செயல்படுகின்றனர். ஊராட்சி தலைவர்களை நான் மதிக்கிறேன். உதயநிதி ஸ்டாலினை நான் தலைவராக மதிக்கவில்லை.
திருப்பூரில் பள்ளிகள் அருகே கஞ்சா விற்பனை அதிகரித்துள்ளது. பள்ளிக்கூடங்கள், கஞ்சாக்காடாக மாறி உள்ளன. பல்லடம் அருகே 3 பேர் வெட்டி கொலை செய்யப்பட்டதில், வரும் 15-ம் தேதிக்கு பிறகு கையெழுத்து இயக்கம் நடத்திய கையெழுத்துடன் சிபிஐ விசாரணை கோரி பாஜகவினர் ஆளுநரை சந்திக்க உள்ளோம். வேங்கைவயல் போன்று இந்த பிரச்சினையையும் கையாண்டால், அதை விடப்போவதில்லை. சாதாரண நபர்களை பிடித்து வழக்கை முடிக்க நினைக்கிறார்கள். சிபிஐ விசாரணை தான் ஒரே தீர்வு,” என்று அவர் கூறினார்.