பாரம்பர்ய பகுதிகளில் மீன்பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை சிறைபிடிப்பதுடன், அவர்களது படகுகளை பறிமுதல் செய்து நாட்டுடமை ஆக்கி வருகிறது. கடந்த வாரத்தில் மட்டும் 42 மீனவர்களையும், அவர்களுக்கு சொந்தமான 8 படகுகளையும் இலங்கை கடற்படையினர் சிறைபிடித்துள்ளனர். மீனவர்கள் சிறைபிடிக்கப்படுவதை தடுக்க கோரி மாநில அரசு, மத்திய அரசுக்கு தொடர்ந்து கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை ஏதும் எடுக்கப்படவில்லை.
இதையடுத்து இலங்கை கடற்படையினரின் அத்துமீறலை தடுக்கக் கோரியும், இலங்கை சிறைகளில் உள்ள மீனவர்களை விடுவிக்கவும், பறிமுதல் செய்யப்பட்ட படகுகளை மீட்கவும் நடவடிக்கை எடுக்க மத்திய அரசை வலியுறுத்தி தங்கச்சிமடத்தில் மீனவர்கள் குடும்பத்துடன் பல கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.



கடந்த வெள்ளிக்கிழமை உண்ணாவிரதத்துடன் துவங்கிய இந்தப் போராட்டம் நேற்று காத்திருப்பு போராட்டமாக மாறியது. நேற்று காலை துவங்கிய இந்தப் போராட்டம் இரவு முழுவதும் தொடர்ந்தது. அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியும் மீனவர்கள் தங்கள் போராட்டத்தைக் கைவிடவில்லை. இதையடுத்து போராட்ட பந்தலிலேயே மீனவர்கள் தங்கள் குடும்பத்தினருடன் போராட்டத்தை தொடர்கின்றனர்.
இந்நிலையில் போரட்டத்தின் 3-வது நாளான இன்று கறுப்பு சட்டை மற்றும் கறுப்பு பேட்ஜ் அணிந்து போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். மேலும் போராட்ட களத்தில் கஞ்சி தொட்டி திறக்கவும் திட்டமிட்டுள்ளனர். இதனிடையே தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி ராமேஸ்வரம் வருகிறார். மீனவர்கள் போராட்டம் நடத்தும் பகுதியின் வழியாக ஆளுநர் செல்ல உள்ளதால் அசம்பாவித சம்பவம் ஏதும் நடந்து விடுமோ என்ற அச்சம் நிலவுகிறது. இதனால் அப்பகுதியில் ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும் இரும்பு தடுப்புகளை கொண்டு பாதுகாப்பு அரணும் அமைத்துள்ளனர். இதனால் தங்கச்சிமடத்தில் பதற்றம் தொடர்கிறது.