தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு பாடுபட்ட 38 பேருக்கு 2023-ம் ஆண்டுக்கான தமிழ்ச் செம்மல் விருதுகளை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் வழங்கினார். 2024-ம் ஆண்டுக்கான விருதாளர்கள் விரைவில் தேர்வு செய்யப்பட உள்ளதாக தெரிவித்தார்.
தமிழ் மொழி மற்றும் அதன் பண்பாட்டு வளர்ச்சிக்காக பாடுபடும் அறிஞர்கள், ஆர்வலர்களின் தமிழ் பணியை பாராட்டும் விதமாக தமிழக தமிழ் வளர்ச்சி துறை சார்பில் கடந்த 2015-ம் ஆண்டு முதல் மாவட்டத்துக்கு ஒருவர் வீதம் தமிழ்ச் செம்மல் விருது வழங்கப்பட்டு வருகிறது.
அதன்படி, 2023-ம் ஆண்டுக்கான தமிழ்ச் செம்மல் விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட 38 பேருக்கு விருது வழங்கும் விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. தமிழ் வளர்ச்சி, செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, 38 பேருக்கும் தலா ரூ.25,000 பரிசுத் தொகைக்கான காசோலையுடன் விருதுகளை வழங்கினார்.
விழாவில் அமைச்சர் பேசியதாவது: தமிழ் வளர்ச்சி துறையில் பல்வேறு முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த வகையில், அறிஞர்களின் தமிழ் பணியை கவுரவித்தும், அவர்களுக்கு ஊக்கம் அளிக்கும் விதமாகவும் அரசு இந்த விருதுகளை வழங்குகிறது. இதன் தொடர்ச்சியாக, 2024-ம் ஆண்டுக்கான தமிழ்ச் செம்மல் விருது பெற தகுதியானவர்கள் விரைவில் தேர்வு செய்யப்பட உள்ளனர். முறையாக குழு அமைத்து, அதன் மூலமாக விருதாளர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
பல்வேறு வடிவங்களில் நம் மீது இந்தி திணிக்கப்பட்டு வருகிறது. முதல்வர் ஸ்டாலின் உத்தரவுப்படி, இந்தி திணிப்பை எந்த காலத்திலும் ஏற்கமாட்டோம். கல்லூரி படிப்பை முடித்திருந்த நான், இந்தி ஆதிக்கத்துக்கு எதிரான போராட்டத்தில் கலந்துகொண்டு, 45 நாட்கள் வரை கோவை சிறையில் இருந்தேன். இவ்வாறு அவர் பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் தமிழ் வளர்ச்சி, செய்தித் துறை செயலர் வே.ராஜாராமன், தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் ந.அருள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.