புதுடெல்லி: ரம்ஜான் நோன்பு இன்று (மார்ச் 2) தொடங்கியுள்ள நிலையில் இஸ்லாமியர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பிரதமர் மோடி தனது எக்ஸ் சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “ஆசிர்வதிக்கப்பட்ட ரம்ஜான் மாதம் தொடங்கியுள்ள நிலையில் அது நம் சமூகத்தில் அமைதியையும் நல்லிணக்கத்தையும் கொண்டு வரட்டும். இந்த புனித மாதம் நன்றியுணர்வு மற்றும் பக்திக்கு அடையாளமாக இருக்கிறது. மேலும் இரக்கம், கருணை மற்றும் சேவை செய்யும் மனபான்மையை நமக்கு நினைவூட்டுகிறது.” என்று கூறியுள்ளார்.
இஸ்லாமிய ஆண்டின் ஒன்பதாவது மாதம் ரமலான். இந்த அரபிச் சொல்லுக்கு ‘கரித்தல்’ என்று பொருள். நல்லடியார்களின் பாவங்கள் இம்மாதத்தில் கரிக்கப்படுவதால், இப்பெயர் பெற்றுள்ளது.
இஸ்லாமிய மார்க்கத்தின் 5 கடமைகளில் ஒன்றான நோன்பை இம்மாதம் முழுவதும் முஸ்லிம்கள் நோற்க வேண்டுமென குர்ஆனில் கூறப்பட்டுள்ளது. அதன்படி இன்று (மார்ச் 2) ரம்ஜான் நோன்பு தொடங்கியுள்ளது. இப்புனித ரமலான் மாதத்தில் முழுமையாக அனைத்து நோன்புகளையும் நோற்று, அருள்மறையை அதிகமாக ஓதி, நிறைய வணக்க வழிபாடுகளை புரிந்து, ஏழைகளுக்கு தர்மம் செய்து, நிறைவான இறையருளை பெறக் கூடிய பாக்கியத்தை அருள்வான் என்பது இஸ்லாமியர்களின் நம்பிக்கையாக இருக்கிறது.