மும்பை: மகாராஷ்டிராவின் ஜல்கானில் நடந்த சந்த் முக்தாய் யாத்திரையின் போது தனது மைனர் மகளும் அவரது தோழிகளும் சில ஆண்களால் துன்புறுத்தப்பட்டதாக குற்றம்சாட்டி, பாஜகவைச் சேர்ந்த மத்திய அமைச்சர் ரக்ஷா காட்சே ஞாயிற்றுக்கிழமை (மார்ச்.03) வழக்கு பதிவு செய்துள்ளார். அதற்கு குற்றவாளிகள் கடுமையாக தண்டிக்கப்படுவர் என முதல்வர் பட்னாவிஸ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து காவல்துறையில் புகார் அளித்து வழக்கு பதிவு செய்த பின்பு செய்தியாளர்களிடம் பேசிய காட்சே, “ஒவ்வொரு ஆண்டும் மகாசிவராத்திரியின் போது, இந்தத் பகுதியில் சந்த் முக்தாய் யாத்திரை நடைபெறும். இரண்டு நாட்களுக்கு எனது மகளும் அந்த யாத்திரையில் பங்கேற்றார். அப்போது சில இளைஞர்கள் அவரை துன்புறுத்தலுக்கு உள்ளாக்கியுள்ளனர். அவர்களுக்கு எதிராக வழக்கு பதிவு செய்ய நான் காவல்நிலையம் வந்தேன்” என்று தெரிவித்தார்.
இந்த சம்பவத்தின் போது, குற்றம்சாட்டப்பட்டிருப்பவர்கள் அமைச்சரின் பாதுகாப்பு பணியாளரின் சட்டையைப் பிடித்து அவரை மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து விபரம் அறிந்தவர்கள் கூறுகையில், “குற்றம்சாட்டப்பட்டவர்களில் சிலர் குற்றப்பின்னணி உள்ளவர்கள், மேலும் சிவசேனா (ஏக்நாத் ஷிண்டே அணி) எம்எல்ஏ சந்திரகாந்த் பாட்டீலுடன் தொடர்புடையவர்கள்” என்றனர்.
பட்னாவில் பதில்: மத்திய அமைச்சரின் குற்றச்சாட்டுக்கு பதில் அளித்துள்ள மகாராஷ்டிரா மாநில முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் குற்றம்சாட்டப்பட்டவர்கள் தப்பிக்க மாட்டார்கள் என்றார். அவர் கூறுகையில், “மத்திய அமைச்சரின் மகளை துன்புறுத்தியதாக குற்றம்சாட்டப்பட்டவர்கள் ஒரு அரசியல் கட்சியைச் சேர்ந்தவர்கள். இது ஒரு இழிவான செயல், அவர்கள் மீது போலீஸார் வழக்குபதிவு செய்துள்ளனர். சிலர் கைதும் செய்யப்பட்டுள்ளனர். அவர்களை மன்னிக்க முடியாது, அவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்தார்.
இந்த வழக்கை விசாரிக்கும் காவல்துறை அதிகாரி கூறுகையில், “பிப்.28ம் தேதி முக்தைநகர் தாலுகாவின் கோதலி கிராமத்தில் ஒரு யாத்திரை நடந்தது. அதில் முக்தைநகரைச் சேர்ந்த அனிகேத் கூய் மற்றும் அவரது 6 நண்பர்களும் பங்கேற்றனர். அப்போது அவர்கள் மூன்று நான்கு சிறுமிகளைப் பின்தொடர்ந்து சென்று பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கினர்.
நாங்கள், அவர்கள் மீது பின்தொடர்தல், துன்புறுத்துதல், போக்சோ சட்டம் மற்றும் ஐடி சட்டபிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளோம். குற்றம்சாட்டப்பட்டவர்களில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மற்றவர்களை கைது செய்ய குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.” என்றார்.