போபால்: மத்திய பிரதேசத்தில் பறவைக் காய்சல் ஏற்பட்டுள்ளதால் அங்குள்ள சிந்த்வாரா பகுதி சந்தையானது 21 நாட்களுக்கு மூடப்பட்டுள்ளது.
மத்திய பிரதேச மாநிலம் சிந்த்வாரா பகுதியிலுள்ள சந்தையில் பறவைக் காய்ச்சல் ஏற்பட்டதாகத் தெரியவந்துள்ளது. இதையடுத்து அங்கிருந்த பறவைகள், பூனைகளின் மாதிரி சேகரிக்கப்பட்டு ஆய்வுக்கு அனுப்பப்பட்டது.
அந்த ஆய்வின் முடிவில் அங்கிருந்த 3 பூனைகள், பறவைக்கு ஏவியன் இன்ப்ளூயன்சா (எச்பிஏஐ) எனப்படும் பறவைக் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இந்த வகை காய்ச்சலானது கடந்த 2022-ல் அமெரிக்காவில் தோன்றி உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளுக்கு பரவி வருகிறது.
இதைத் தொடர்ந்து சிந்த்வாரா சந்தையானது அடுத்த 21 நாட்களுக்கு மூடப்படும் என்று மத்திய சுகாதாரத்துரை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சிந்த்வாரா பகுதி கால்நடைத்துறை அமைச்சகத்தின் துணை இயக்குநர் டாக்டர் எச்ஜிஎஸ் பக்ஸ்வார் கூறும்போது, “கடந்த ஜனவரி இறுதியில் அந்த பூனைகள், பறவைகள் பறவைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. போபாலில் உள்ள ஆய்வக சோதனைகள் இதை உறுதி செய்கின்றன.
இதையடுத்து சிந்த்வாரா பகுதி சந்தையை மூடுவதற்கு உத்தரவிட்டோம். பறவைக் காய்ச்சல் அறிகுறியுடன் இருந்த பறவைகள், பூனைகள் குழிதோண்டி புதைக்கப்பட்டன” என்றார்.