பதவி இல்லை என்றதும் கட்சிக்கே துரோகம் செய்தவர்தான் ஓ.பன்னீர்செல்வம்: பழனிசாமி குற்றச்சாட்டு

பதவி இல்லை என்றதும் கட்சிக்கே துரோகம் செய்தவர்தான் ஓ.பன்னீர்செல்வம் என்று அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி கூறினார்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாள் விழாப் பொதுக்கூட்டம் தேனி மாவட்டம் பெரியகுளம் அருகேயுள்ள மதுராபுரியில் நடைபெற்றது. இதில், நலத்திட்ட உதவிகளை வழங்கி பழனிசாமி பேசியதாவது:

எம்ஜிஆர், ஜெயலலிதா என இரு தலைவர்களை முதல்வர்களாக உயர்த்தியது தேனி மாவட்டம்தான். இதனால், தேனி மாவட்டத்தில் பல்வேறு திட்டங்களை அதிமுக அரசு செயல்படுத்தியது. ஆனால், கடந்த 4 ஆண்டுகளாக தேனி மாவட்டத்துக்கு ஒரு திட்டம்கூட கொண்டு வரப்படவில்லை. அதிமுக ஆட்சியை பொற்கால ஆட்சி என்று மக்கள் பாராட்டுகிறார்கள். அவ்வளவு திட்டங்களை கொடுத்து இருக்கிறோம். ஆனால், முதல்வர் ஸ்டாலின் எப்போதும் போட்டோ ஷுட்டிங் நடத்திக் கொண்டிருக்கிறார்.

அதிமுக அரசு தற்போது பொறுப்பில் இருந்திருந்தால், முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் 142 அடியில் இருந்து 152 அடியாக உயர்த்தப்பட்டிருக்கும்.

திராவிட மாடல் அரசு என்று ஸ்டாலின் அடிக்கடி கூறுகிறார். இது திராவிட மாடல் அரசு இல்லை. ஸ்டாலின் மாடல் அரசு. திமுக ஆட்சியில் போதைப் பொருட்கள் புழக்கம் மிகவும் அதிகரித்துவிட்டது. இதனால் தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துவிட்டது. சிறுமி முதல் மூதாட்டி வரை அச்சப்படும் அளவுக்கு பாலியல் குற்றங்கள் அதிகரித்து விட்டன. கடந்த 2 மாதங்களில் தமிழகம் முழுவதும் 184 கொலைகள் நடந்துள்ளன. அதேபோல, 273 பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் பதிவாகி உள்ளன. காவல் துறை பெண் அதிகாரிக்குகூட பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது. தேர்தல் வாக்குறுதிகளில் 15 சதவீதத்தைக்கூட திமுக நிறைவேற்றவில்லை.

பெரியகுளத்தைச் சேர்ந்த ஒருவர் (ஓபிஎஸ்), நாங்கள் துரோகம் செய்தோம் என்று கூறியுள்ளார். ஜெயலலிதா இறந்து பதவி பறிபோனதும் தர்மயுத்தம் செய்தது யார்? சட்டப்பேரவையில் அதிமுக ஆட்சியை கவிழ்க்க எதிர்த்து வாக்களித்தது யார்? கட்சி சின்னத்தை முடக்க, கட்சியை வீழ்த்த செயல்பட்டுக் கொண்டிருப்பது யார்? அதிமுக மூழ்கும் கப்பல் என்று அவர் சொல்லிக் கொண்டிருக்கிறார். அதிமுக கரைசேரும் கப்பல், துரோகம் இழைத்த நீங்கள்தான் தற்போது கடலில் தத்தளிக் கொண்டிருக்கிறீர்கள். எப்போதும் சீனியர் என்று சொல்லிக் கொண்டிருக்கிறீர்கள். உங்களைவிட நான்தான் சீனியர். 1989-ல் சட்டப்பேரவை உறுப்பினர் ஆனவன். பதவி இல்லை என்றதும் துரோகம் செய்யத் தொடங்கி விட்டீர்கள். நீங்களா விசுவாசி? வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக வெற்றி பெறும். இவ்வாறு அவர் பேசினார்.

முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வரவேற்றார். முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன், செல்லூர் ராஜூ, மதுரை புறநகர் கிழக்கு மாவட்டச் செயலாளர் ராஜன் செல்லப்பா மற்றும் கட்சி நிர்வாகிகள் உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.