டேராடூன்: உத்தராகண்ட் மாநிலம் சமோலியில் கடந்த வெள்ளிக்கிழமை ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது.
பத்ரிநாத் கோயில் அமைந்துள்ள பகுதியிலிருந்து சுமார் 5 கி.மீ. தொலைவில் உள்ள மனா கிராமத்தில் கடந்த வெள்ளிக்கிழமை திடீரென பனிச்சரிவு ஏற்பட்டது. இதில், அப்பகுதியில் சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த 54 தொழிலாளர்கள் தங்கியிருந்த 8 கண்டெய்னர்களும் சிக்கிக் கொண்டன.
இதையடுத்து, பேரிடர் மீட்பு குழு மீட்பு பணிகளை தீவிரமாக மேற்கொண்டுள்ளது. நேற்று மேலும் ஒருவரது உடல் கைப்பற்றப்பட்டதையடுத்து பனிச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7 ஆக அதிகரித்துள்ளது. மேலும், ஒருவரை தேடும் பணி நடைபெற்று வருகிறது.
பிரதமர் உறுதி: இதனிடையே, உத்தராகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமியை பிரதமர் மோடி நேற்று முன்தினம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது பனிச்சரிவில் சிக்கிய தொழிலாளர்களின் நிலை குறித்து கேட்டறிந்தார். மத்திய அரசு சார்பில் தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என்று பிரதமர் உறுதியளித்தார். அதிக பனிப்பொழிவு காரணமாக துண்டிக்கப்பட்டுள்ள சாலையை சீரமைக்கவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான உணவு மற்றும் மருந்துகளை உடனடியாக அனுப்பி வைக்கவும் புஷ்கர் சிங் தாமி உத்தரவிட்டார்.