புதுடெல்லி: உ.பி. ராஜஸ்தான் மற்றும் ம.பி. ஆகிய மாநிலங்களில் பரவியுள்ள பகுதி சம்பல் பள்ளத்தாக்கு. இந்த பள்ளத்தாக்கு கொள்ளை கும்பலின் கேந்திரமாக விளங்கியது. ஜலோனின் டிக்ரி கிராமத்தில் இருந்து சம்பல் கொள்ளை கும்பலுக்கு மாறிய குசுமா நைனின் வாழ்க்கை மர்மம் நிறைந்தது.
சமாஜ்வாதி கட்சியில் இணைந்து எம்.பி.யான கொள்ளை கும்பல் தலைவி பூலன் தேவியை அடுத்து குசுமா நைனின் பெயரும் பொதுமக்களுக்கு பயத்தை ஏற்படுத்தியது. குசுமா நைன் 7 ஆண்டாக ஆயுள் தண்டனை அனுபவித்து வந்தார். எட்டாவா சிறையில் காசநோய் முற்றிய நிலையில் லக்னோவில் உள்ள கிங்ஜார்ஜ்மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் குசுமா கடந்த ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார்.
தனது 13 வயதில் வகுப்பு தோழன் மாதவ் மல்லாவுடன் குசுமா டெல்லிக்கு ஓடிவிட்டார். குசுமாவை கண்டுபிடித்து அழைத்து வந்த அவரது தந்தை, கேதார் என்பவருக்கு கட்டாயத் திருமணம் செய்து வைத்தார். இதற்கிடையில், சம்பல் பள்ளத்தாக்கு கொள்ளை கும்பல் தலைவன் விக்ரம் மல்லாவுடன் இணைந்தார் மாதவ். பின்னர் மல்லாவுடன் குதிரைகளில் சென்று குசுமாவை சம்பலுக்கு கடத்தி வந்தார் மாதவ். அதன்பின் ஆயுதமேந்திய குசுமா, விக்ரம் மல்லா கும்பலில் முக்கிய இடம்பெற்றிருந்த பூலன்தேவிக்கு போட்டியாக வளர்ந்தார். ஒரு கட்டத்தில் எதிரி லல்லன் ராமை கொலை செய்ய மல்லா கூறியதன்படி குசுமா சென்றார். ஆனால், லல்லன் கொள்ளை கும்பலில் சேர்ந்து அவரை காதலிக்கவும் தொடங்கி விட்டார் குசுமா. அவருடன் சேர்ந்து விக்ரம் மல்லாவை சுட்டுக் கொன்றார்.
அப்போது முதல் சம்பலின் பிரபல கொள்ளை கும்பலில் முக்கிய நபராக மாறினார் குசுமா. கடந்த 1981-ல் ஆயுதமேந்திய பூலன்தேவி, தன்னை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய 22 தாக்கூர்களை பேமாய் கிராமத்தில் சுட்டுக் கொன்றார். இதற்கு பழி வாங்க லல்லனுடன் சென்று அவுரய்யாவின் ஆஸ்தா கிராமம் சென்றார். அங்கிருந்த 15 படகோட்டிகளை வரிசையாக நிற்கவைத்து குசுமா சுட்டுக் கொன்றார். பின்னர் கொள்ளைக் கும்பல் சகா பக்கட் பாபாவின் உறவினரை சுட்டுக் கொன்ற 2 படகோட்டிகளை கடத்தி வந்து அவர்களது கண்களை மட்டும் பறித்துவிட்டு அனுப்பி வைத்தார். இதுபோல், கொலை, கொள்ளை என குசுமா மீது 200 வழக்குகள் உள்ளன. சுமார் 47 ஆண்டுகளுக்கு பின்னர், முதல் கணவர் கேதார் வீட்டில் குசுமா உடலுக்கு இறுதிச் சடங்குகள் நடைபெற்றன.