சென்னை: மக்களவைத் தொகுதிகள் மறுசீரமைப்பு விவகாரம் குறித்து விவாதிக்க தமிழக அரசு நாளை (மார்ச் 5) அனைத்துக் கட்சி கூட்டத்தை நடத்துகிறது. இதற்காக 45 கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பதிவு பெற்ற தேசிய மக்கள் சக்தி கட்சிக்கு அழைப்பு விடுக்கவில்லை என்றும் அதனால் இந்த கூட்டத்துக்கு தடை விதிக்க கோரியும் அக்கட்சியின் தலைவர் வழக்கறிஞர் எம்.எல்.ரவி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
அதில், தமிழகத்தில் மொத்தம் 183 அரசியல் கட்சிகள் உள்ளன. தமிழக அரசு தங்களுக்கு ஏதுவாக 45 அரசியல் கட்சிகளை மட்டும் அழைத்துள்ளது ஏற்புடையதல்ல. எனவே எங்களது கட்சியையும் அழைக்க உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தார்.
இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதி டி.பரத சக்ரவர்த்தி முன்பாக நேற்று விசாரணைக்கு வந்தது. அரசு தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் ஆஜராகி, பதிவு பெற்ற அனைத்து கட்சிகளும் கூட்டத்தில் பங்கேற்கலாம். இதற்காக அரசின் பொதுத்துறைச் செயலருக்கு மனுதாரர் விண்ணப்பித்தால் பரிசீலிக்கப்படும் என்றார்.
அதையடுத்து நீதிபதி, பதிவுபெற்ற கட்சி என்பதற்கான ஆதாரத்துடன் மனுதாரர் விண்ணப்பிக்க வேண்டும் என்றும் அவரது கட்சியை கூட்டத்துக்கு அழைப்பது தொடர்பாக அரசு பரிசீலிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.