பார்வை குறைபாடு உடையவர்கள் நீதிபதியாக தகுதியானவர்கள்தான் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.
மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த பார்வைக் குறைபாடு உடைய ஒருவர் நீதிபதி பணிக்கு விண்ணப்பிக்க விரும்பி உள்ளார். ஆனால், பார்வை குறைபாடு உடையவர்கள் நீதிபதி பணியிடத்துக்கான தேர்வில் பங்கேற்க முடியாது என மத்திய பிரதேச நீதித் துறை சேவை விதிகள் (6ஏ) கூறுகின்றன. இந்த விதிகளை ரத்து செய்யக் கோரி, பார்வைக் குறைபாடு உடையவரின் தாய் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இதுகுறித்து உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் அவர்களுக்கும் அந்தப் பெண் ஒரு கடிதம் எழுதி இருந்தார். இதையடுத்து, உச்ச நீதிமன்றம் இந்த விவகாரத்தை பொதுநல வழக்காக விசாரணைக்கு ஏற்றுக் கொண்டது.
இந்த மனுவை விசாரித்து வந்த நீதிபதிகள் ஜே.பி.பர்திவாலா மற்றும் ஆர்.மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு நேற்று தீர்ப்பு வழங்கியது. அந்த தீர்ப்பில் கூறியிருப்பதாவது:
மாற்றுத் திறனாளிகள் நீதித் துறை சேவைகளில் எவ்வித பாகுபாட்டையும் எதிர்கொள்ளக் கூடாது. எந்தவொரு விண்ணப்பதாரரையும் அவர்களின் இயலாமையை காரணமாகக் கூறி நீதித்துறை பணியாளர் தேர்வில் பங்கேற்பதற்கான வாய்ப்பை மறுக்கக்கூடாது. பார்வை குறைபாடு உடையவர்கள் நீதிபதியாக தகுதியானவர்கள்தான்.
எனவே மத்திய பிரதேச நீதித் துறை சேவை விதிகள் ரத்து செய்யப்படுகின்றன. அனைத்து குடிமக்களுக்கும் அடிப்படை சம உரிமை கிடைப்பதை உறுதி செய்ய, மாற்றுத் திறனாளிகளை விலக்கி வைக்க வகை செய்யும் எந்த ஒரு பாகுபாட்டையும் தடை செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
பார்வை குறைபாடு உடையவர்களும் நீதிபதியாகலாம் என உச்ச நீதிமன்றம் இதற்கு முன்பும் தீர்ப்பு வழங்கி உள்ளது. இதன் அடிப்படையில், தமிழ்நாடு மற்றும் ராஜஸ்தானில் பார்வைக் குறைபாடு உடையவர்கள் நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக, கடந்த 2009-ம் ஆண்டு தமிழ்நாட்டில் முதல் நபராக டி.சக்கரவர்த்தி நீதித் துறை அதிகாரியாக நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.