IND vs AUS: மறக்க முடியாத இந்தியா vs ஆஸி., நாக்அவுட் போட்டிகள்; உங்கள் ஃபேவரைட்? – #கருத்துக்களம்

ஐசிசி நாக்அவுட் போட்டிகளில் இந்தியா vs ஆஸ்திரேலியா

இந்தியா vs பாகிஸ்தான் ரிவல்ரிக்கு சற்றும் குறைவில்லாததுதான் இந்தியா vs ஆஸ்திரேலியா ஐ.சி.சி நாக்அவுட் போட்டிகள். இதுவரை இரண்டு அணிகளும், 7 முறை ஐ.சி.சி நாக்அவுட் போட்டிகளில் மோதியிருக்கின்றன. இதில், மூன்று முறை இந்தியாவும், நான்கு முறை ஆஸ்திரேலியாவும் வெற்றி பெற்றிருக்கின்றன.

Aus v Ind

ஒருநாள் உலகக் கோப்பை

2003 – சச்சினின் அபார இன்னிங்ஸ்களால் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது இந்தியா. ரிக்கி பாண்டிங்கின் 140 நாட் அவுட்டால் வெறும் 2 விக்கெட் இழப்புக்கு 359 ரன்கள் குவித்த ஆஸ்திரேலியா, 40 ஓவர்களில் 234 ரன்களுக்கு இந்தியாவைச் சுருட்டி உலகக் கோப்பையை வென்றது. இத்தனைக்கும் அந்த உலகக் கோப்பையில் சச்சின்தான் தொடர் நாயகன் விருது வென்றார்.

சச்சின் டெண்டுல்கர்

2011 – ஒரு அணியாக அனைவரின் பங்களிப்புகளாலும் நாக் அவுட் சுற்றில் நுழைந்த இந்திய அணி காலிறுதியில் ஆஸ்திரேலியாவை எதிர்கொண்டது. இதிலும் ரிக்கி பாண்டிங் சதத்தால் 260 ரன்கள் குவித்தது ஆஸ்திரேலியா. பின்னர், சச்சின் மற்றும் கம்பீர் அரைசதத்தால் பாதி வெற்றியைப் பெற்ற இந்திய அணி யுவராஜ் – ரெய்னா ஜோடியின் பதட்டமல்லாத இன்னிங்ஸால் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது. அதோடு, அரையிறுதியில் பாகிஸ்தானை வென்று, இறுதிப்போட்டியில் இலங்கையை வீழ்த்தி 28 ஆண்டுகளுக்குப் பிறகு ஒருநாள் உலகக் கோப்பையை வென்று சச்சின் கனவை நிறைவேற்றியது இந்திய அணி.

2015 – தோனி தலைமையில் இந்திய அணி விளையாடிய கடைசி ஒருநாள் உலகக் கோப்பை. லீக் சுற்றின் அனைத்து போட்டிகளிலும் வென்ற இந்தியா அரையிறுதியில் ஆஸ்திரேலியாவை எதிர்கொண்டது. ஸ்டீவ் ஸ்மித்தின் சதம் மற்றும் ஆரோன் ஃபின்ச்சின் அரைசதத்தால் 328 ரன்கள் குவித்த ஆஸ்திரேலியா, இந்தியாவை 47 ஓவர்களில் 233 ரன்களுக்கு ஆல் அவுட்டாக்கி பைனலுக்கு சென்று கோப்பையையும் வென்றது.

2023 – 2015 உலகக் கோப்பையை போல அனைத்து லீக் சுற்றுகளிலும் வென்று அரையிறுதியில் நியூசிலாந்தை வீழ்த்தி பைனலில் ஆஸ்திரேலியாவை எதிர்கொண்டது. ஒட்டுமொத்த இந்திய ரசிகர்களையும் அமைதியாக்குவேன் என்று போட்டிக்கு முன்பு பேட்டியளித்த ஆஸ்திரேலிய கேப்டன் பேட் கம்மின்ஸ், உண்மையில் அகமதாபாத் மோடி ஸ்டேடியத்தில் இந்திய ரசிகர்களை அமைதியாக்கி கோப்பையை வென்று காட்டினார்.

பேட் கம்மின்ஸ்

டி20 உலகக் கோப்பை

2007 – முதல் டி20 உலகக் கோப்பையில் தோனியின் முதல் கேப்டன்சியில் இந்திய இளம் படை இறங்கியது. ஒவ்வொரு போட்டியையும் எளிதில் மறக்க முடியாத அளவுக்கு ஆடிக்கொண்டிருந்த இந்திய அணி அரையிறுதியில் அனுபவ வீரர்களால் நிறைந்த ஆஸ்திரேலியாவை எதிர்கொண்டது. 30 பந்துகளில் 70 ரன்கள் அடித்த யுவராஜின் மிரட்டல் இன்னிங்ஸால் 188 ரன்கள் குவித்த இந்தியா, 15 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி, இறுதிப்போட்டியில் பாகிஸ்தானுக்கெதிராக த்ரில் வெற்றி பெற்று உலகக் கோப்பையை வென்றது.

டிராவிஸ் ஹெட்

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்

2023 – முதல்முறையாக பேட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியை ஐ.சி.சி இறுதிப்போட்டியில் சந்தித்த இந்திய அணி, டிராவில் ஹெட் மற்றும் ஸ்டீவ் ஸ்மித்தின் அபார இன்னிங்ஸ் முன் பணிந்து 209 ரன்கள் வித்தியாசத்தில் மிகப்பெரிய தோல்வியைப் பதிவு செய்தது.

சாம்பியன்ஸ் டிராபி

2000 – ஐ.சி.சி தொடர்களின் நாக்அவுட் போட்டிகளில் இந்தியா vs ஆஸ்திரேலியா முதல் ரிவால்ரியே 2000 சாம்பியன்ஸ் டிராபி காலிறுதியில்தான் தொடங்கியது. முதலில் பேட்டிங் செய்த கங்குலி தலைமையிலான இந்த அணி, இளம் யுவராஜின் 84 ரன்கள் அதிரடியுடன் 265 ரன்கள் குவித்தது. அதைத்தொடர்ந்து, 245 ரன்களில் ஆஸ்திரேலியாவைச் சுருட்டி அரையிறுதிக்கு முன்னேறியது. அங்கு தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி பைனலுக்குச் சென்ற இந்திய அணி நியூசிலாந்திடம் தோற்று கோப்பையைத் தவறவிட்டது.

ரோஹித்

இப்போது மீண்டும் இந்த சாம்பியன்ஸ் டிராபி அரையிறுதி மூலம் 8-வது முறையாக ஐ.சி.சி நாக்அவுட் போட்டியில் ஆஸ்திரேலியாவை சந்திக்கிறது இந்தியா. இதில் யார் வெல்கிறார்கள் என்று பொருத்திருந்து பார்க்கும் அதேவேளையில், உங்களால் மறக்க முடியாத இந்தியா vs ஆஸ்திரேலியா ஐசிசி நாக்அவுட் போட்டிகளை கமெண்ட் பகுதியில் குறிப்பிடுங்கள்.!

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.