திருப்பத்தூர் மாவட்டம், புதுப்பேட்டை ரோடு பகுதியைச் சேர்ந்த 50 வயது நபர், திருப்பத்தூர் தலைமை அஞ்சலகத்தில் கண்காணிப்பாளராகப் பணியாற்றி வருகிறார்.
உடல்நலம் பாதிப்புக்குள்ளான தனது வயதான தாயை பராமரிப்பதற்காக தருமபுரி மாவட்டம் பாலக்கோடு பகுதியிலுள்ள `சன் லைட் ஹோம்கேர்’ என்கிற வீட்டு சுகாதார சேவைத் தொடர்பான தனியார் நிறுவனத்தை தொடர்புகொண்டிருக்கிறார். ஹோம்கேர் நிர்வாகியான செல்வி என்கிற சூசையம்மாள் (35), கிருஷ்ணகிரி மாவட்டம் மூகண்டஹள்ளி பகுதியைச் சேர்ந்த நளினி (38) என்ற பெண்ணை அஞ்சலக அதிகாரியின் வீட்டுக்கு அனுப்பி வைத்திருக்கிறார். நளினி அடிக்கடி அதிகாரியின் வீட்டுக்குச் சென்று அவரின் தாயாரை சுத்தப்படுத்தி நோய்த் தடுப்பு பராமரிப்பு சேவையில் ஈடுபட்டு வந்திருக்கிறார்.

நாள்கள் செல்லச் செல்ல… அதிகாரியுடன் நளினி நெருக்கம் காட்டியிருக்கிறார். தனது வலையில் விழச் செய்து, அதிகாரியுடன் தனிமையிலும் இருந்திருக்கிறார். அந்த சமயத்தில், அதிகாரி நிர்வாணமாக இருக்கும் அந்தரங்க காட்சிகளை தனது செல்போனில் வீடியோவாக பதிவு செய்துகொண்ட நளினி, அந்த வீடியோவை ஹோம்கேர் நிர்வாகி சூசையம்மாளுக்கு வாட்ஸ் அப்பில் பகிர்ந்திருக்கிறார்.
இதையடுத்து, அந்த வீடியோவை அஞ்சலக அதிகாரிக்கே அனுப்பி வைத்து “ரூ.5 லட்சம் கொடுக்கலைன்னா, இந்த வீடியோவை சோஷியல் மீடியோவுல போட்டுடுவேன். இந்த வயசுல உனக்கு அசிங்கம் தேவையா..?’’ என்று மிரட்டல் விடுத்திருக்கிறார் சூசையம்மாள்.
அதிகாரியும் பயந்து போய் ரூ.2.30 லட்சத்தை முதற்கட்டமாக கொடுத்து அனுப்பியிருக்கிறார். மீதித் தொகையை கேட்டும் சூசையம்மாள் தரப்பினர் அதிகாரியை தொடர்ந்து நச்சரித்து பகிரங்கமாகவே தொல்லைக் கொடுத்து வந்திருக்கின்றனர். இதனால் மன வேதனைக்குள்ளான அதிகாரி, சமீபமாக ஹோம்கேர் சூசையம்மாளின் செல்போன் அழைப்புகளை எடுக்காமல் தவிர்த்து வந்திருக்கிறார்.
ஆத்திரமடைந்த சூசையம்மாள் தனது நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரைச் சேர்ந்த விமல்ராஜ் (30) என்பவருக்கு அந்தரங்க வீடியோவை அனுப்பி, அதிகாரியை நேரில் சந்தித்து மீதி பணத்தை வாங்கிவரச் சொல்லியிருக்கிறார்.

இதையடுத்து, விமல்ராஜ் அதிகாரியின் வீட்டுக்கே சென்று பணம் கேட்டு மிரட்டல் விடுத்திருக்கிறார். அதுவரை எல்லாவற்றையும் பொறுத்துக்கொண்டு பணம் கொடுத்து வந்த அதிகாரி, “காவல்துறையில் புகாரளிப்பதே சரியான நடவடிக்கையாக இருக்கும்’’ என முடிவெடுத்திருக்கிறார். அதன் பிறகே, திருப்பத்தூர் நகரக் காவல் நிலையம் சென்று ஹோம்கேர் கும்பல் மீது புகாரளித்தார். தீர விசாரித்த போலீஸார் உடனடியாக வழக்குப் பதிவு செய்து ஹோம்கேர் நிர்வாகி சூசையம்மாள், நளினி, விமல்ராஜ் என சம்பவத்தில் தொடர்புடைய 3 பேரையும் அதிரடியாக கைது செய்தனர். இதையடுத்து, திருப்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வேலூர் மத்திய சிறைச்சாலையில் அவர்களை அடைத்தனர். இந்த கும்பல் ஹோம்கேர் என்கிற பெயரில், வேறு எங்கெல்லாம் அந்தரங்க அத்துமீறலில் ஈடுபட்டிருக்கின்றனர் என்பது குறித்தும் காவல் துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
Vikatan WhatsApp Channel
இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்… CLICK BELOW LINK
https://bit.ly/VikatanWAChannel
