நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவரான ஜெயக்குமார், கடந்த 2024-ம் ஆண்டு மே மாதம் 2-ம் தேதி மாயமானார். பின்னர் மே 4-ம் தேதி திசையன்விளை அருகிலுள்ள கரைசுத்துப் புதூரில் உள்ள அவரது வீட்டிற்கு அருகேயுள்ள தோட்டத்தில் அவரது உடல் கருகிய நிலையில் மீட்கப்பட்டது. இது குறித்து உவரி காவல் நிலைய போலீஸார் , 10 தனிப்படைகள் அமைத்து விசாரணை நடத்தியும் குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியவில்லை. இதனையடுத்து இந்த வழக்கு கடந்த ஆண்டு ஜூன் மாதம் சிபிசிஐடி போலீஸாருக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கினை சிபிசிஐடி போலீஸார் இரண்டு குழுக்களாக விசாரணை நடத்தினர்.

அவர் எழுதிய மரண வாக்குமூலம் கடிதத்தின் அடிப்படையில் அரசியல் தலைவர்கள், உறவினர்கள், நண்பர்களிடம் இரண்டு முறை விசாரணை நடத்தப்பட்டது. அந்தப் பகுதியிலுள்ள செல்போன் டவர்களில் 75 ஆயிரத்திற்கும் மேற்பட்ட செல்போன் எண்கள் பதிவாகி உள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த எண்கள் அனைத்தையும் போலீஸார் ஆய்வுக்கு உட்படுத்தி வந்தனர். இந்த நிலையில் சம்பவம் நடந்த அன்று திசையன்விளையிலுள்ள ஒரு கடைக்கு வந்து சென்றதால் அது தொடர்பாக கடையின் உரிமையாளர், மேலாளர், ஊழியர்களிடமும் இரு முறை விசாரணை நடத்தினர்.
அங்குள்ள சிசிடிவி கேமரா காட்சிகளையும் ஆய்வு செய்தனர். இதற்கிடையில் உவரி, குட்டம், சுரைசுத்துப்புதூர் ஆகிய பகுதிகளிலுள்ள செல்போன் டவர்களில் இருந்து வந்த அழைப்புகள் குறித்து இரண்டாவது முறையாக விசாரணை நடத்தினர். மேலும், ஜெயக்குமார் அடிக்கடி வந்து செல்லும் ஹோட்டல்கள், டீ கடைகள், பெட்டிக்கடைகளுக்கும் நேரில் சென்று விசாரணை நடத்தினர்.

ஆனாலும் சரியான முகாந்திரம் கிடைக்கவில்லை. கடந்த ஆண்டு அப்போதைய சிபிசிஐடி ஏடிஜிபி வெங்கட்ராமன் நேரில் வந்தும் விசாரணை நடத்தினார். ஆனாலும், சம்பவம் நடந்து 10 மாதங்கள் ஆன நிலையிலும் துப்பு துலங்காமல் போலீஸார் திணறி வந்ததனர். இந்த நிலையில், கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக தீவிர விசாரணை மேற்கொண்டனர். 75 ஆயிரத்திற்கும் மேற்பட்ட செல்போன் அழைப்புகளை 3 குழுக்குகளாகப் பிரிந்து 24 மணி நேர ஆய்வு நடத்தினர்.
இதன் பயனாக 3 பேரின் செல்போன் அழைப்புகள் சந்தேகத்திற்கு இடமாக உள்ளதாக கிடைத்துள்ளது. இதனை முன்பாக அறிந்து கொண்ட அந்த 3 பேரும், கடந்த 2 மாதங்களாக தலைமறைவாகியுள்ளது தெரிய வந்துள்ளது. அவர்கள் வட மாநிலங்களில் பதுங்கிக் கொண்டு அவர்களது செல்போன் மற்றும் சிம்கார்டுகளை மாற்றியிருக்கலாம் எனவும் போலீஸாருக்கு சந்தேகம் வலுத்துள்ளது.

அவரது குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்களிடம் ஏற்கெனவே இரண்டு முறை விசாரணை நடத்தப்பட்ட நிலையில், தற்போது மூன்றாவது முறையாக விசாரணையை தொடங்கியுள்ளனர். அதேபோல விசாரணைக்கு நேரில் ஆஜராகாதவர்களிடமும் விசாரணை நடத்துமாறு சிபிசிஐடி உயரதிகாரிகள் உத்தரவிட்டுள்ளதால் கடந்த 2 நாள்களாக விசாரணை நடந்து வருகிறது. பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருவதால் இவ்வழக்கு வேகம் எடுத்துள்ளது.