டெல்லி பெண்களுக்கு மாதம் 2,500 உதவித் தொகை வழங்கும் திட்டத்துக்கான பதிவு சர்வதேச மகளிர் தினமான மார்ச் 8 முதல் தொடங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லி சட்டப்பேரவைக்கு அண்மையில் நடைபெற்ற தேர்தலின்போது பாஜக சார்பில் வெளியிடப்பட்ட வாக்குறுதிகளில் மிக முக்கியமானது மகளிருக்கு மாதம் ரூ.2,500 உதவித் தொகை வழங்கும் திட்டம். தேர்தலில் வெற்றி பெற்று பாஜக ஆட்சி அமைக்கும்பட்சத்தில் மகிளா சம்ருதி யோஜனா திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின்தங்கிய மகளிருக்கு இந்த உதவித் தொகை அளிக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டது. இதையடுத்து, அந்த தேர்தலில் பாஜக பெரும்பான்மை பெற்று டெல்லியில் ஆட்சியமைத்தது.
இதுகுறித்து பாஜக எம்பி மனோஜ் திவாரி கூறுகையில், “ டெல்லியில் உள்ள ஏழை மகளிருக்கு மாதம் ரூ.2,500 வழங்கப்படும் என டெல்லி தேர்தலின் போது வாக்குறுதி அளிக்கப்பட்டது. இதனை நிறைவேற்றும் வகையில் அந்த திட்டத்துக்கான பதிவு நடைமுறைகள் மார்ச் 8 முதல் தொடங்க உள்ளது. ஏற்கெனவே இதற்கான பயனாளிகளின் பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளது. ஒன்றரை மாதத்தில் இந்த பதிவு நடைமுறைகளை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. எனவே, இந்த திட்டத்தில் பயன்பெற பெண்கள் தவறாது தங்களது விவரங்களை பதிவு செய்து கொள்ள வேண்டும்” என்றார்.
இதனிடையே ஆம் ஆத்மி செய்தித் தொடர்பாளர் பிரியங்காா காக்கர் கூறுகையில், “ பாஜக தனது தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்ற வேண்டும். பெண்களுக்கு மாதம் ரூ.2,500 நிதியுதவி மட்டுமல்லாமல் ரூ.500-க்கு சமையல் எரிவாயு சிலிண்டர், ஒவ்வொரு குடும்பத்துக்கும் தீபாவளி, ஹோலி பண்டிகையின் போது இலவச சிலிண்டர் போன்ற வாக்குறுதிகளையும் சேர்த்து நிறைவேற்ற வேண்டும். முதல்வர் ரேகா குப்தா இதற்கான நடவடிக்கையை எடுக்க வேண்டும்” என்றார்.