சென்னை: “மத்திய தொழில் பாதுகாப்பு படை தினத்தை முன்னிட்டு, கடல் வளத்தை பாதுகாப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நடைபெறும் சைக்கிள் பேரணியை மத்திய உள்துறை அமைச்சர் தொடங்கி வைக்கிறார். இதில், பொதுமக்கள் அதிகளவில் பங்கேற்க வேண்டும்” என தென்மண்டல தலைமையக ஐ.ஜி. எஸ்.ஆர்.சரவணன் அழைப்பு விடுத்துள்ளார்.
இது குறித்து, மத்திய தொழில்பாதுகாப்பு படை தென்மண்டல தலைமையக ஐ.ஜி. எஸ்.ஆர்.சரவணன் சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் கூறியது: “மத்திய தொழில் பாதுகாப்பு படை (சிஐஎஸ்எஃப்) உருவாக்கப்பட்டு 56 ஆண்டுகள் ஆவதை ஒட்டி, வரும் 7-ம் தேதி சிஐஎஸ்எஃப் தினம் கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு, ராணிப்பேட்டை மாவட்டம், தக்கோலத்தில் உள்ள மத்திய தொழில் பாதுகாப்பு படையின் மண்டல பயிற்சி மையத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பங்கேற்று கடற்கரை சைக்கிள் பேரணியை தொடங்கி வைக்கிறார்.
குஜராத் மாநிலம், லக்பத் கோட்டை மற்றும் மேற்குவங்க மாநிலம் பக்காளி கடற்கரையில் இருந்தும் இரு பிரிவுகளாக இந்த சைக்கிள் பேரணி தொடங்குகிறது. ‘பாதுகாப்பான கடல்வளம், செழிப்பான இந்தியா’ என்ற கருப்பொருளுடன் நடத்தப்படும் இப்பேரணியில், 14 பெண் வீரர்கள் உட்பட 125 வீரர்கள் பங்கேற்கின்றனர். 11 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 6,553 கி.மீட்டர் தூரத்தை 25 நாட்களில் கடந்து வரும் 31-ம் தேதியன்று கன்னியாகுமரி உள்ள விவேகானந்தர் நினைவிடத்தில் வந்து தங்களது பேரணியை நிறைவு செய்ய உள்ளனர்.
இப்பேரணியின் முக்கிய நோக்கம் என்னவென்றால், நாட்டின் கடல் எல்லை பாதுகாப்பு, போதைப் பொருள் இல்லாத சமூகம், கடல் பாதுகாப்பில் மீனவர்களின் பங்களிப்பு உள்ளிட்டவை குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவதுதான். மேலும், இப்பேரணியின் போது கலை நிகழ்ச்சிகள், பொதுமக்களை சந்தித்தல் ஆகியவை நடைபெறுவதோடு, தூய்மைப் பணி மற்றும் மரம் நடுதல் உள்ளிட்டவையும் மேற்கொள்ளப்படும்.
இதன்படி, இப்பேரணி வருகையை முன்னிட்டு சென்னையில் வரும் 25-ம் தேதி சென்னை துறைமுகத்திலும், 26-ம் தேதி புதுச்சேரியிலும் இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெறும். இவை தவிர, மத்திய தொழில் பாதுகாப்பு படையினரின் பேண்டு வாத்திய இசை நிகழ்ச்சி, நாடகங்கள், சாகச நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளும் நடைபெறும். இப்பேரணியில் பொதுமக்களும் பங்கேற்று வீரர்களுடன் சைக்கிள் பேரணி சென்று அவர்களை உற்சாகப்படுத்தலாம்.
இதில் பங்கேற்க விரும்பும் பொதுமக்களுக்கு போதிய உடற்தகுதி இருக்க வேண்டும். மற்றபடி வயது வரம்பு உள்ளிட்ட எவ்வித தகுதிகளும் கிடையாது. பேரணியில் பங்கேற்கும் பொதுமக்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும். இப்பேரணியில் பங்கேற்க விரும்பும் பொதுமக்கள் www.cisfcyclothon.com