போதை அழிவின் பாதை என்பது நாம் அனைவரும் அறிந்த உண்மை. போதைப்பழக்கம் ஒரு தனிநபரை மட்டுமல்ல அவரின் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் என அவரைச் சார்ந்த அனைவருக்குமே பாதிப்பு ஏற்படுத்தும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. போதைப்பொருள் உடல் ஆரோக்கியத்தை மட்டுமல்ல மன ஆரோக்கியத்திற்கும் கேடு விளைவிக்கும். சம்பந்தப்பட்டவர்களை மீள முடியாத துயரத்தில் ஆழ்த்திவிடும்.

இதற்கு உதாரணம் சிகாகோவைச் சேர்ந்த 38 வயதான கெல்லி கொய்ரா (Kelly kozyra) என்ற பெண். 2017-ம் ஆண்டு தனது நண்பர்களுடன் இசை நிகழ்ச்சிக்குச் சென்றுள்ளார். அப்பொழுது அவரது நண்பர் ஒருவர் கொக்கேன் பயன்படுத்துமாறு கூறியுள்ளார். கெல்லியும் பயன்படுத்தியிருக்கிறார். விளைவு, சில மாதங்களிலேயே தினமும் கொக்கெயின் எடுக்க ஆரம்பித்தவர், ஒருகட்டத்தில் அதற்கு அடிமையாகியிருக்கிறார்.
ஒரு கட்டத்தில் சாப்பாடு, தூக்கம் என அனைத்தையும் மறந்து எந்நேரமும் கொக்கெய்னை எடுத்துக்கொண்டிருக்கிறார். ஒன்றரை வருடத்தில் 70 லட்சம் ரூபாய் வரை தனது போதைப் பழக்கத்திற்காகவே செலவழித்துள்ளார் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.

ஒருகட்டத்தில் கெல்லியின் மூக்கிலிருந்து ரத்தம் கசிய ஆரம்பித்துள்ளது. பின்பு அந்த நிலை மோசமாகி ரத்தத்துடன் தசைகளும் சேர்ந்து வெளிவர ஆரம்பித்துள்ளது. இதனால் அவரது மூக்கில் பெரிய ஓட்டை ஒன்று உருவானது. இது தானாகச் சரியாகிவிடும் என அலட்சியமாக இருந்திருக்கிறார். ஆனால், கொக்கெயின் பயன்பாட்டால் அவரது மூக்கு மிகவும் பாதிக்கப்பட்டு, முகத்தில் ஓட்டை ஒன்று உருவாகியிருக்கிறது. கெல்லியின் குடும்பத்தினர் அவர் போதைப் பழக்கத்திலிருந்து மீள உதவ, கெல்லியும் மனம் மாறியிருக்கிறார்.
கொகெய்னால் ஏற்பட்ட பாதிப்பினைச் சரி செய்ய, கெல்லியில் முகத்தில் 15-க்கும் மேற்பட்ட அறுவை சிகிச்சைகளை மருத்துவர்கள் செய்திருக்கிறார்கள். அந்த அறுவை சிகிச்சைகளில், கெல்லியின் முன் நெற்றியிலிருந்து தசைகளை எடுத்து மூக்கில் வைத்துப் பொருத்தியுள்ளனர். ரத்த ஓட்டத்திற்காக அவரது கையிலிருந்த ரத்தக்குழாயினை எடுத்து மூக்கில் பொருத்தியுள்ளனர். அறுவை சிகிச்சைக்குப் பிறகு கெல்லி உடல்நிலை சீராகத் தொடங்கியிருக்கிறது. தற்போது, கெல்லி போதைப்பொருள் பற்றிய விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தி வருகிறார்.
Vikatan WhatsApp Channel
இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்… CLICK BELOW LINK
https://bit.ly/VikatanWAChannel
