மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜெ.பி.நட்டாவை சந்தித்த, தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தமிழகத்துக்கு நீட் விலக்கு, கோவையில் எய்ம்ஸ் மருத்துவமனை உள்ளிட்ட கோரிக்கைகளை வைத்தார்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி, அரசு முறை பயணமாக டெல்லி சென்றுள்ள தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று டெல்லியில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜெ.பி. நட்டா சந்தித்தார். அப்போது, தமிழக சுகாதாரத்துறை தொடர்பான கோரிக்கைகள் அடங்கிய மனுவை வழங்கினார். சுகாதாரத்துறை செயலாளர் ப.செந்தில்குமார். தமிழ்நாடு இல்லம் உள்ளுரை ஆணையர் ஆஷிஷ் குமார், தேசிய நலவாழ்வு குழும இயக்குநர் அருண் தம்புராஜ் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
பின்னர், டெல்லியில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களுக்கு அளித்தப் பேட்டி: தமிழகத்தில் 36 அரசு மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. இன்னும் மயிலாடுதுறை, தென்காசி, காஞ்சிபுரம், பெரம்பலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய 6 மாவட்டங்களில் அரசு மருத்துவ கல்லூரிகள் இல்லை. இந்த 6 மாவட்டங்களில் அரசு மருத்துவ கல்லூரிகள் அமைக்க வேண்டும். ஏற்கெனவே உள்ள நாமக்கல், திருப்பூர், விருதுநகர் ஆகிய மூன்று கல்லூரிகளில் 150 மாணவர்கள் படிக்க தேவையான பேராசிரியர்கள், உபகரணங்கள் உள்ளிட்ட அனைத்து மருத்துவ கட்டமைப்பு உள்ளது. ஆனால், தலா 100 மருத்துவ இடங்கள் மட்டுமே இருப்பதால், கூடுதலாக தலா 50 இடங்களை அதிகரிக்க வேண்டும்.
தமிழகத்தில் 2,286 ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள், 8713 துணை சுகாதார நிலையங்கள் உள்ளன. மக்கள் தொகை அடிப்படையில் அவசியத்தை கருதி, தமிழகத்தில் கூடுதலாக 24 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள், 26 ஊரக ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் 500 துணை சுகாதார நிலையங்கள் வேண்டும். உலக அளவில் புற்றுநோய் பாதிப்பு அதிகரித்து வருவதால், தமிழகத்தில் புற்றுநோய் பாதிப்பு அதிகமுள்ள ஈரோடு, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்களில் புற்றுநோய் பரிசோதனை நடைபெற்று வருகிறது. அதேபோல், தமிழகம் முழுவதும் ரூ.27 கோடியில் புற்றுநோய் பரிசோதனை பணிகளும் நடைபெறுகிறது. காஞ்சிபுரத்தில் 750 படுக்கைகளுடன் புற்றுநோய்க்காக மிகப்பெரிய ஆராய்ச்சி மையம் ரூ.250 கோடியில் கட்டும் பணிகள் நிறைவடையும் நிலையில் உள்ளது. தமிழகம் முழுவதும் புற்றுநோய் கட்டமைப்புகளை மேம்படுத்த, ரூ.447.94 கோடியில் புற்றுநோய் பராமரிப்பு சிகிச்சை மற்றும் சேவைகளை மேம்படுத்த வேண்டும்.
தமிழகத்தில் 22 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளுக்கு ரூ. 603.45 கோடியில் நரம்பியல் அறுவை சிகிச்சை பிரிவுகளை மேம்படுத்தி திறன் ஆய்வகங்கள் அமைக்க வேண்டும். மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டும்பணி நடைபெற்று வருகிறது. கோயம்புத்தூரில் புதிய எய்ம்ஸ் மருத்துவமனை தொடங்க வேண்டும். தமிழகத்துக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும். நெக்ஸ் தேர்வை நடைமுறைப்படுத்தக்கூடாது. பொது கலந்தாய்வு தொடர்பாக தேசிய மருத்துவ ஆணையத்தின் பட்டப்படிப்பு மருத்துவக் கல்வி விதிமுறைகள் திரும்பப்பெற வேண்டும். தேசிய மருத்துவ ஆணையத்தின் புதிய மருத்துவ நிறுவனங்களை நிறுவுதல். புதிய மருத்துவப் படிப்புகளைத் தொடங்குதல், தற்போதுள்ள படிப்புகளுக்கான இருக்கைகள் அதிகரிப்பு – மதிப்பீடு மற்றும் மதிப்பீட்டு விதிமுறைகள் திரும்பப்பெற வேண்டும் என மொத்தம் 11 கோரிக்கைகளை தெரிவித்தோம். அனைத்தையும் கேட்டு கொண்ட மத்திய அமைச்சர், பரிசீலனை செய்து முடிந்தவற்றை செய்து தருவதாக தெரிவித்துள்ளார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.