Jiiva: “அயன் படத்துல நான்தான் முதல்ல நடிக்க வேண்டியது..!'' – விகடன் பிரஸ் மீட் வித் ஜீவா

ஜீவா நடிப்பில் உருவாகியிருக்கிற `அகத்தியா’ திரைப்படம் கடந்த வாரம் திரையரங்குகளில் வெளியானது. அவருடைய கரியரின் அனைத்துப் பக்கங்களைப் பற்றியும் பேசுவதற்கு விகடன் நிரூபர்களுடனான விகடன் பிரஸ் மீட்டில் இணைந்திருந்தார் ஜீவா. நிருபர்களின் கேள்விகள் அத்தனைக்கும் ஜீவா பொறுமையாக பதில்களை எடுத்துரைக்க தொடங்கினார்.

“உங்களுடைய கரியரின் தொடக்கத்திலேயே நல்ல நடிகர், சவாலான கதைகளை தேர்வு செய்து நடிப்பவர்னு பெயர் கிடைச்சது. இந்த கமென்ட் உங்க கரியர் சார்ந்து நீங்க எடுக்ககூடிய முடிவுகளுக்கு பிரஷரைக் கொடுத்துச்சா?”

“இல்ல, நீங்க சொல்ற மாதிரியான பாராட்டுகள் வந்ததுனே அப்போ தெரியாது. இப்போதான் அதெல்லாம் எனக்கு தெரியுது. சாதரணமாக படங்கள் நடிச்சிட்டு வர்றோம்னுதான் எண்ணம் இருக்கும். `83′ படத்துக்கு நமக்கு பயங்கரமான பாராட்டுகளெல்லாம் கிடைக்கும்னு நான் நினைச்சேன். ஆனா, சென்னையில எனக்கு அப்படியான பாராட்டுகளெல்லாம் எனக்கு கிடைக்கல. அதே சமயம் வெளியூர்ல நல்ல பாராட்டுகள் கிடைக்கும். தெலுங்கு மக்களுக்கு நான் `கோ’, `யாத்ரா’ மாதிரியான படங்கள் மூலமாக பரிச்சயமாகி இருக்கேன். `ராம்’ படத்துக்கு நான்கு வருடங்களுக்குப் பிறகுதான் பாராட்டுகள் கிடைச்சது. அதே சமயம் `கற்றது தமிழ்’ படத்துக்கு எனக்கு 10 வருஷத்துக்குப் பிறகுதான் பாராட்டுகள் கிடைச்சது. பெரியவங்களுக்கு `சிவா மனசுல சக்தி’ திரைப்படம் ஒரு வகையிலான டாக்சிக் திரைப்படமாகதான் பார்ப்பாங்க. தாமதமாகதான் இதெல்லாம் புரிஞ்சது. அப்பாவுக்கு `சிவா மனசுல சக்தி’, `ராம்’, `கற்றது தமிழ்’ மாதிரியான திரைப்படங்கள் பிடிக்காது. அவருக்கு `திருபாச்சி’ மாதிரியான படங்கள்தான் ரொம்ப பிடிக்கும். அவருக்கு அதுதான் குடும்ப திரைப்படங்கள்தான் பிடிக்கும். நான் நடிச்சிருந்த `ஆசை ஆசையாய்’ படத்தின் கதை முதல்ல பிரசாந்த் சாருக்கு சொன்னதுதான். அப்புறம் எங்க அப்பாகிட்ட `உங்கப் பையனை வச்சே பண்ணிடலாம்’னு இயக்குநர் சொன்னாரு. நான் முதல்ல ஒத்துக்கவே இல்ல. விபத்தாகதான் நான் நடிகனானேன்.”

Actor Jiiva – Vikatan Press Meet

`ராம்’, `கற்றது தமிழ்’ மாதிரியான கல்ட் திரைப்படங்களிலும் நடிச்சிருக்கீங்க, `சிவா மனசுல சக்தி’ மாதிரியான காமெடி படத்திலையும் நடிச்சிருக்கீங்க. நடிகராக நீங்க எந்த ஏரியாவுல கவனம் செலுத்த விரும்புறீங்க?”

“இது இரவு, பகல் மாதிரிதான். ஒரே ஹாப்பி படங்களாக பண்ணினாலும் மக்கள் சீரியஸாக எடுத்துக்கமாட்டாங்க. அதே சமயம் சோகமாக தொடர்ந்து படம் பண்ணினாலும் மக்கள் ஒத்துக்கமாட்டாங்க. எனக்குமே `சும்மா சோகமான படங்கள் பண்ணீட்டு இருக்கார்’னு கமென்ட் வந்தது. என்னுடைய படங்கள்ல கல்ட்னு பேசப்படுகிற படங்களெல்லாம் குடும்பங்கள் மற்றும் கிட்ஸ் மத்தியில பேசப்படவே இல்லை. இப்போ நான் எதாவாது ஒரு பள்ளிக்குப் போனால் `ஈ’ , `கச்சேரி’ பட நடிகர் வர்றாருனுதான் சொல்வாங்க. எனக்கு `கோ’ படம் கிடைச்சதுக்குக் காரணமே `கற்றது தமிழ்’ திரைப்படம்தான். `அயன்’ நான் நடிக்க வேண்டிய திரைப்படம்தான். `கற்றது தமிழ்’ படம் பார்த்துட்டு உடனே எனக்கு கால் பண்ணி பேசினாரு. நான் கே.வி. ஆனந்த் சாருக்கு மிகப்பெரிய ரசிகன்.”

“`யாத்ரா – 2′ படத்துல ஜெகன் மோகன் ரெட்டியாக நடிச்ச அனுபவம் பற்றி சொல்லுங்க? அந்தப் படம் பார்த்துட்டு அவர் எதுவும் பேசினாரா?”

“அந்தப் படத்தைப் பற்றி முதல்ல தயாரிப்பாளர் ஞானவேல்ராஜாதான் என்கிட்ட சொன்னாரு. நான் அந்தப் படம் முதல்ல வேண்டாம்னு சொன்னேன். அதன் பிறகு கதையை மட்டுமாவது கேட்கச் சொல்லி இரண்டு மூன்று தடவைக் கேட்டாங்க. நானும் தமிழ்நாட்டுல வாங்குறதைவிட மூன்று மடங்கு அதிகமான சம்பளத்தைச் சொல்லிட்டேன். அதுக்கும் ஒத்துக்கிட்டாங்க. அதன் பிறகுதான் கதையைக் கேட்டேன். தெலுங்குலையும் மார்கெட் உருவாகும்னு அந்தப் படத்துக்கு நான் ஓகே சொல்லிட்டேன். பாட்டு படிக்கிற மாதிரிதான் அந்தப் படத்தோட வசனங்களை நான் படிச்சிட்டு இருப்பேன். திடீர்னு அந்தப் படத்துக்கு ஷூட்னு சொல்லிட்டாங்க. 20 நாள்ல அந்தப் படத்துக்காக நான் தயாராகினேன். வசனங்களையெல்லாம் வீட்டுல இருந்து படிச்சிட்டு இருப்பேன். என் மனைவிகூட நீ இந்தளவுக்கு அர்பணிப்போட இருந்து நான் பார்த்தது இல்லைனு சொன்னாங்க. அப்படிதான் அந்தப் படத்துக்கு தயாராகினேன். நடிகரகாக எனக்கு அந்த தயாராகுற முறையெல்லாம் எனக்கு புதுவிதமான அனுபவம் இருந்தது. ஜெகன் மோகன் ரெட்டிகிட்ட இருந்த எந்த போன் காலும் இந்தப் படத்துக்காக வரல.”

Yatra 2

“மம்மூட்டி, மோகன் லால்னு மலையாளத்தோட ரெண்டு சூப்பர் ஸ்டார்ஸோடவும் சேர்ந்து நடிச்சிட்டீங்க. அவங்களோட தனித்தன்மைகள் பற்றி….”

“அவங்க ரெண்டு பேரும் வாழ்க்கையை ரொம்ப சாதரணமாக எடுத்துகிறாங்க. அவங்க ரெண்டு பேர்கிட்டையும் நான் ஹிட் படம் கொடுக்கணும்னு ஒரு பிரஷர் இல்ல. அதை கையாள்கிற பக்குவம் அவங்களுக்கு இருக்கும். மோகன் லால் சார் ரொம்பவே ஜாலியாக இருப்பாரு. அவர் நடிச்ச ஆனந்தம் படத்தை தயாரிச்சது எங்களுடைய `சூப்பர் குட் பிலிம்ஸ்’தான். வசனங்களை தப்பா பேசிட்டால் வாயில குத்துவார்னு கேள்விப்பட்டிருக்கோம். இப்போ `யாத்ரா 2′ ஷூட்டிங் போனப்போ நான் அவர் கால்ல விழுந்துட்டேன். அதே மாதிரி இரண்டாவது நாளும் நான் அவர் கால்ல விழுந்துட்டேன். அவர் என் கால்ல விழுந்துட்டு `போதும் சார். வாழ்க்கை ரொம்ப ஜாலியானது சார்’னு சொன்னாரு. இந்தப் படம் பண்ணீட்டு இருக்கும்போதுதான் `யாத்ரா 2′ படப்பிடிப்பு நடந்தது. அவர் அதைப் பற்றி ` எனக்கு ஜெயிலர் ரொம்ப பிடிச்சிருக்கு. ரஜினி இந்த மாதிரியான படங்கள் பண்ணனும். நெல்சன் ரொம்ப நல்ல வேலையை பண்ணியிருக்கார்’னு சொன்னாரு. `ஜில்லா’ படத்துல `ஜீவாகூட சேர்ந்து நடிச்சிருக்கோம். அவர் வந்தால் நல்ல இருக்கும்’னு சின்னதாக பாடல்ல வரச் சொல்லி விஜய் சாரும், மோகன் லால் சாரும்தான் கேட்டாங்க. என்னுடைய `யான்’ திரைப்படம் வெளியாகி சரியாகப் போகல. எனக்கு வெளில வரவும் வெட்கமாக இருந்துச்சு. அப்போ சினிமாவுல துறையில எங்களுக்கு கொஞ்சம் நஷ்டமும் ஆகிடுச்சு. அதன் பிறகு `ஜில்லா’ படத்துல ஒரு நாள் நடிச்சேன். அன்னைக்கு டின்னர்ல உட்கார்ந்து நாங்க பழைய கதைகளெல்லாம் பேசினோம். அதெல்லாம் ஒரு கனா காலம் மாதிரிதான். ”

முழுக் காணொளியைப் பார்க்க கீழே க்ளிக் செய்யவும்!

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.