வாஷிங்டன்: சீனா, கனடா, மெக்சிகோ நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு கூடுதல் வரி விதிக்கப்படும் என்று அமெரிக்காவின் புதிய அதிபராக பொறுப்பேற்ற போது அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்திருந்தார்.
இந்த வரி விதிப்பு கடந்த பிப்ரவரி மாதமே அமல்படுத்த திட்டமிட்டிருந்தது. இந்த நிலையில், போதைப் பொருள் அமெரிக்காவுக்குள் வருவதை தடுக்க அந்த நாடுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்காக, இந்த கூடுதல் வரி விதிப்பு திட்டம் 30 நாட்களுக்கு நிறுத்திவைக்கப்படுவதாக ட்ரம்ப் அறிவித்திருந்தார்.
இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை நள்ளிரவு முதல் சீனா, கனடா, மெக்சிகோ நாடுகளின் இறக்குமதிக்கு கூடுதல் வரி விதிக்கும் நடைமுறை அமலுக்கு வந்துள்ளது. இதையடுத்து, இந்த வரி விதிப்பு தொடர்பாக நிலவி வந்த ஊகங்களுக்கு முற்றுப் புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
குடியரசு கட்சியினர் திங்கள்கிழமை கூறுகையில், “ வரி விதிப்பு தொடர்பாக கனடா, மெக்சிகோவிடம் சமரசம் செய்து கொள்ளும் வகையில் ஒப்பந்தங்களை ஏற்படுத்த வாய்ப்பில்லை. திட்டமிட்டபடி செவ்வாய்க்கிழமை முதல் இறக்குமதி பொருட்களுக்கு கூடுதல் வரி விதிப்பு நடைமுறைக்கு வரும்.
கனடா, மெக்சிகோவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 25 சதவீத வரி விதிக்க முன்னொழியப்பட்டது. சீனாவின் பொருட்களுக்கு ஏற்கெனவே நடைமுறையில் உள்ள 10 சதவீதத்துடன் சேர்த்து கூடுதலாக 10 சதவீத வரி விதிக்கப்பட்டுள்ளது” என்றனர்.
எதிர்ப்பு: அமெரிக்காவின் இந்த முடிவுக்கு மெக்சிகோ, கனடா, சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, அமெரிக்காவிலிருந்து இறக்குமதியாகும் 30 பில்லியன் கனடியன் டாலர் மதிப்பிலான பொருட்களுக்கு 25 சதவீதம் வரி விதிக்கப்படுவதாகவும், இது செவ்வாய்க்கிழமையிலிருந்து அமலுக்கு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
சீனாவின் நிதி அமைச்சகமும், அமெரிக்காவிலிருந்து இறக்குமதியாகும் சோயாபீன்ஸ், மக்காச்சோளம், மாட்டிறைச்சி உள்ளிட்ட வேளாண் பொருட்களுக்கு 10-15 சதவீதம் கூடுதல் வரி விதிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.
மெக்சிகோ அதிபர் கிளவுடியா ஷீன்பாம், அமெரிக்கா எங்கள் மீது வரி விதித்தால் அதற்கு பதிலடி தரும் விதமாக தாங்களும் கைவசம் திட்டங்களை தயாராக வைத்திருப்பதாக தெரிவித்துள்ளார்.