துபாயில் சாம்பியன்ஸ் டிராபி தொடரின் முதல் அரை இறுதி போட்டி நேற்று (மார்ச் 04) இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைபெற்றது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன் படி ஆஸ்திரேலியா அணியும் பேட்டிங் செய்தது.
264 ரன்கள் எடுத்து ஆஸ்திரேலியா அணி ஆல் அவுட் ஆனது. இதில் அந்த அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் 73 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இதனைத் தொடர்ந்து பேட்டிங் செய்த இந்திய அணி இந்த இலக்கை 48.1 ஓவர்களில் எட்டி அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் இந்திய அணி சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதி போட்டிக்கு முன்னேறியது.
ஸ்டீவ் ஸ்மித் ஓய்வு
முன்னணி வீரர்கள் கேப்டன் கம்மின்ஸ், பந்து வீச்சாளர்கள் ஸ்டார்க், ஜோஸ் ஹேசில்வுட் மற்றும் ஆல்-ரவுண்டர் மிட்செல் மார்ஷ் ஆகியோர் இல்லாமல் ஆஸ்திரேலியா அணி சாம்பியன்ஸ் டிராபி விளையாடி அரை இறுதி வரை முன்னேறி இந்தியாவிடம் தோல்வியை தழுவி வெளியேறியது. இந்த நிலையில்தான் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
மேலும் படிங்க: அழியும் ஓடிஐ கிரிக்கெட்…!? அஸ்வினிடம் வருத்தப்பட்ட தோனி – என்ன மேட்டர்?
நல்ல ஃபார்மில் இருக்கும் போது அவர் இந்த முடிவை எடுத்துள்ளார். 35 வயதான ஸ்டீவ் ஸ்மித் ஆஸ்திரேலியா அணிக்காக 170 ஒருநாள் போட்டிகளில் விளையாடி உள்ளார். அதில் அவர் 12 சதங்கள் மற்றும் 35 அரை சதங்களுடன் 5,800 ரன்கள் குவித்துள்ளார். அதிகபட்சமாக 2016ஆம் ஆண்டு நியூசிலாந்து அணிக்கு எதிராக 164 ரன்கள் எடுத்துள்ளார். நன்றாக ஃபில்டிங் செய்யும் அவர் 90 கேட்ச்களை பிடித்துள்ளார்.
டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் தொடர்ந்து விளையாடுவார்
ஒருநாள் போட்டிகளில் இருந்து தனது ஓய்வை அறிவித்திருந்தாலும், அவர் டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவார். அவர் 116 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 10,271 ரன்கள் குவித்துள்ளார். இதில் 36 சதங்கள் மற்றும் 41 அரைசதங்கள் அடங்கும். அதிகபட்சமாக 239 ரன்கள் குவித்துள்ளார். மேலும் இந்த ஃபார்மெட்டில் இவரது சராசரி 56.74ஆக உள்ளது.
அதேபோல் இவர் 67 டி20 போட்டிகளில் விளையாடி உள்ளார். அதில் 5 அரைசதங்களுடன் 1,094 ரன்கள் அடித்துள்ளார். அதிகபட்சமாக 90 ரன்கள் குவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிங்க: Champions Trophy 2nd Semi Final: நியூசிலாந்து vs தென்னாப்பிரிக்கா.. வெல்லப்போவது யார்? போட்டி எங்கே, எப்போது?