மும்பை: பஞ்சாயத்து தலைவர் கொலை வழக்கு விவகாரத்தில் மகாராஷ்டிர அமைச்சரான தனஞ்செய் முண்டே நேற்று ராஜினாமா செய்தார்.
மகாராஷ்டிர மாநிலம் பீட் மாவட்டத்த்தைச் சேர்ந்த பஞ்சாயத்து தலைவர் சந்தோஷ் தேஷ்முக் என்பவர் கடந்த டிசம்பர் மாதம் படுகொலை செய்யப்பட்டார். இவரது கொலை விவகாரம் மகாராஷ்டிர மாநில அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பீட் மாவட்டத்தில் பிரபலமான பஞ்சாயத்துத் தலைவராகவும், மக்களின் நன்மதிப்பைப் பெற்றவராகவும் சந்தோஷ் தேஷ்முக் இருந்ததால் அவரது கொலை வழக்கு ஆளும் கட்சிக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தியது.
கொலையுண்ட பஞ்சாயத்து தலைவர் சந்தோஷ் தேஷ்முக்கை, கடந்த டிசம்பர் 9-ம் தேதி 6 பேர் கொண்ட கும்பல் கடத்திச் சென்று சித்ரவதை செய்துள்ளது. படுகாயமடைந்து சுயநினைவிழந்த நிலையில், அவரை மீட்ட போலீஸார் மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அதற்குள் அவர் இறந்துவிட்டார்.
விசாரணையில், சந்தோஷ் தேஷ்முக்கை, இரும்புத் தடியால் மர்ம நபர்கள் அடித்து சித்ரவதை செய்துள்ளனர். பின்னர் அவர் முகத்தில் அந்த கும்பலைச் சேர்ந்தவர்கள் சிறுநீர் கழித்து கொடுமைப்படுத்தியுள்ளனர். மேலும் இதை வீடியோவாகவும், புகைப்படமாவும் அந்த கும்பல் எடுத்து வைத்துள்ளது. சுமார் 6 பேர் கொண்ட கும்பல் இந்தக் கொலையை அரங்கேற்றியுள்ளது என போலீஸார் குற்றப்பத்திரிகையில் தெரிவித்துள்ளனர்.
இந்த கொலைக்கும் மாநில அமைச்சர் தனஞ்செய் முண்டேவுக்கும் தொடர்பு இருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின.
இதையடுத்து சிறப்பு புலனாய்வுப் பிரிவு (சிஐடி) விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. சிஐடி நடத்திய விசாரணையின் அடிப்படையில் தேசியவாத காங்கிரஸ் கட்சியை (என்சிபி) சேர்ந்த மாநில அமைச்சர் தனஞ்செய் முண்டேவின் நெருங்கிய கூட்டாளி வால்மிக் கராட் முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து, புனேவில் உள்ள காவல்துறை குற்றப் புலனாய்வுப் பிரிவு (சிஐடி) அலுவலகத்தில் கடந்த ஜனவரி மாதம் வால்மிக் சரணடைந்தார்.
இதனிடையே, அமைச்சர் தனஞ்செய் முண்டே பதவி விலகவேண்டும் என்று எதிர்க்கட்சியினர் போராட்டம் நடத்தி வந்தனர்.
மகாராஷ்டிர அரசுக்கு அழுத்தம் அதிகரித்த நிலையில், பாஜகவின் கூட்டணிக் கட்சியான தேசியவாத காங்கிரஸின் தலைவரும் துணை முதல்வருமான அஜித் பவாருடன் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் நேற்று முன்தினம் இரவு ஆலோசனை நடத்தினார்.
இந்த ஆலோசனைக்கு பிறகு முண்டேவை பதவி விலகுமாறு முதல்வர் பட்னாவிஸ் கேட்டுக் கொண்டதன் அடிப்படையில் அமைச்சர் பதவியை தனஞ்செய் முண்டே நேற்று ராஜிநாமா செய்துள்ளார்.
இதையடுத்து, அமைச்சர் முண்டேவின் ராஜிநாமாவை ஏற்றுக் கொண்டதாக அறிவித்த முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், ஆளுநருக்கு ராஜிநாமா கடிதத்தை அனுப்பி உள்ளதாக அறிவித்துள்ளார்.