புதுடெல்லி: உத்தரப் பிரதேச மாநிலத்தின் எக்ஸ்பிரஸ்வே மற்றும் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகள் மற்றும் பார்களை மார்ச் 13ம் தேதிக்குள் அகற்ற முதல்வர் யோகி ஆதித்யாநாத் உத்தரவிட்டுள்ளார்.
பாஜக ஆளும் உ.பியின் முதல்வரான துறவி யோகி, உ.பி மாநில சாலைகள் பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தைக் கூட்டினார். இதில் சாலை விபத்துக்களுக்கு காரணமான பல பிரச்சனைகளை தீர்ப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டன. இதையடுத்து அவர் இன்று தனது நிர்வாகத்தில் சில புதிய உத்தரவுகளை பிறப்பித்துள்ளார். இதில் முக்கியமாக மது விற்பனையில் பல புதிய மாற்றங்கள் வெளியாகி உள்ளன.
முதல்வர் யோகியின் புதிய உத்தரவில் கூறியிருப்பதாவது: ”பல இடங்களில் மதுபானங்கள் தொடர்பான விளம்பரங்கள் மிகப்பெரிய பேனர்களில் வைக்கப்பட்டுள்ளன. இனி இவை பெரிதாக அன்றி, சிறிய அளவுகளில் வைக்கப்பட வேண்டும். எக்ஸ்பிரஸ்வே சாலைகள் மற்றும் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகள் மற்றும் பார்களை அகற்ற வேண்டும். இந்த மாற்றங்கள் ஹோலி பண்டிகைக்கு (மார்ச் 13) முன்பாக செய்யப்பட வேண்டும்.
சாலைகளில் மது அருந்தி வாகனம் ஓட்டுதல், அதிவேகம், தடைசெய்யப்பட்டப் பாதைகளில் செல்வது, கைப்பேசிகளில் பேசியபடி ஓட்டுதல், சிக்னல்களை மதிக்காமை போன்றவற்றால் விபத்துக்கள் ஏற்படுகின்றன. இதை தடுப்பதற்கான விழிப்புணர்வை பொதுமக்களிடம் ஏற்படுத்துவது அவசியம். சாலைகளில் ஆம்புலன்ஸ் வசதி மற்றும் மாவட்ட தலைநகரங்களில் பயிற்சிபெற்ற மருத்துவ பணியாளர்களுடனான மருத்துவமனைகள் உறுதி செய்யப்பட வேண்டும்.” இவ்வாறு யோகி ஆதித்யாநாத் தெரிவித்துள்ளார்.