சென்னை: பேராசிரியை வீட்டில் நகை, பணம் திருட்டு… போலீஸில் சிக்கிய மாணவி!

சென்னை, அசோக்நகர், 19-வது அவென்யூ பகுதியில் வசித்து வருபவர் கலாவதி (74). இவர், கல்லூரியில் பேராசிரியையாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரின் கணவர் மணி. உடல்நலம் பாதிக்கப்பட்ட மணியை கவனித்துக் கொள்ள விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த பச்சையம்மாள் (18) என்பவரை பணியமர்த்தினார் கலாவதி. முதியவர் மணியை கவனித்துக் கொண்டே பச்சையம்மாள், கல்லூரியில் படித்து வந்தார். இந்த நிலையில் மணி கடந்த சில மாதங்களுக்கு முன்பு உயிரிழந்து விட்டார். அதனால் வேலையிலிருந்து பச்சையம்மாளை கலாவதி நிறுத்திவிட்டார்.

நகைகள்

அதன் பிறகு கணவர் மணியின் வங்கி அக்கவுன்ட்டை கலாவதி ஆய்வு செய்திருக்கிறார். அப்போது அதில் மணியின் தேவையைத் தவிர்த்து பத்து லட்சம் ரூபாய் எடுக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. மேலும் வீட்டில் பீரோவில் வைத்திருந்த 17.5 சவரன் தங்க நகைகளும் மாயமாகியிருந்தன. அது தொடர்பாக கலாவதி, கே.கே.நகர் காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதன்பேரில் போலீஸார் கலாவதியிடம் விசாரித்தனர். அப்போது அவர், மாணவி பச்சையம்மாளை வேலைக்கு அமர்த்தியதும் அவரை நம்பி ஏ.டி.எம். கார்டைக் கொடுத்து பணம் எடுக்க சொன்னதையும் கூறினார். இதையடுத்து பச்சையம்மாள் மீது போலீஸாரின் சந்தேக பார்வை விழுந்தது.

மாணவி பச்சையம்மாளை ஆதாரத்துடன் பிடிக்க போலீஸார் முடிவு செய்தனர். மணியின் ஏ.டி.எம் கார்டை எப்போதெல்லாம் மாணவி பச்சையம்மாள் பயன்படுத்தினார் என்ற விவரத்தை போலீஸார் முதலில் சேகரித்தனர். அதன் பிறகு ஏடிஎம் மையங்களில் உள்ள சி.சி.டி.வி கேமரா பதிவுகளை போலீஸார் ஆய்வு செய்தனர். அதோடு வங்கிக்குச் சென்று மணியின் வங்கி பணப் பரிவர்த்தனை தகவலையும் சேகரித்தனர். சி.சி.டி.வி ஆதாரங்கள், வங்கி ஆதாரங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் மாணவி பச்சையம்மாளிடம் போலீஸார் விசாரித்தனர். முதலில் மணி எடுக்கச் சொன்ன பணத்தை மட்டுமே ஏடிஎம்மில் எடுத்துக் கொடுத்தேன், கூடுதலாக பணத்தை எடுக்கவில்லை என சமாளித்த பச்சையம்மாளிடம் சிசிடிவி கேமரா பதிவுகளை காண்பித்த போது அவர் அமைதியாகிவிட்டார். அதைத் தொடர்ந்து பச்சையம்மாளிடம் நகைகள் குறித்து போலீஸார் விசாரித்தனர். விசாரணையில்…, பச்சையம்மாளை முழுமையாக நம்பிய கலாவதி, வீட்டில் இல்லாத சமயத்தில் நகைகளை கொஞ்சம் கொஞ்சமாக திருடியிருக்கிறார் பச்சையம்மாள். பின்னர் அதை தன்னுடைய வீட்டில் மறைத்து வைக்கிறார். ஏ.டி.எம். கார்டுகளிலிருந்து கலாவதி கூறியதைவிட கூடுதலாக பணம் எடுத்த பச்சையம்மாள் அந்தப் பணத்தில் ஆடம்பரமாக வாழ்ந்திருக்கிறார். இவர், பத்து லட்சம் ரூபாய் வரை பணம் எடுத்திருப்பது விசாரணையில் தெரியவந்தது.

பணம்

விசாரணைக்குப் பிறகு பச்சையம்மாளை போலீஸார் கைது செய்தனர். அவரிடமிருந்து 3,63,000 ரூபாயை போலீஸார் பறிமுதல் செய்தனர். பச்சையம்மாள் இந்த குற்றச் செயலில் ரொம்பவே புத்திச்சாலித்தனமாக செயல்பட்டிருப்பதாக கே.கே.நகர் போலீஸார் தெரிவித்தனர்.

இதுகுறித்து கே.கே.நகர் போலீஸார் கூறுகையில், “மாணவி பச்சையம்மாளை நம்பி பணம் எடுக்க மணி, தன்னுடைய ஏடிஎம் கார்டை கொடுத்தனுப்பிய போது அவர், மணி கூறியதைவிட கூடுதலாக பணத்தை எடுத்திருக்கிறார். உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த மணியிடம் அவர் கூறிய தொகையை கொடுத்திருக்கிறார். ஆனால் கூடுதல் பணம் எடுத்ததற்கான எஸ்.எம்.எஸை மணியின் செல்போனிலிருந்து டெலீட் செய்திருக்கிறார். அதனால்தான் மணிக்கு, மாணவி பச்சையம்மாள் மீது எந்த சந்தேகமும் வரவில்லை. திருடிய நகைகள், பணத்தை பச்சையம்மாள் எப்படி செலவழித்தார் என்று விசாரித்துக் கொண்டிருக்கிறோம்” என்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.