IPL 2025: 2025ஆம் ஆண்டு ஐபிஎல் தொடர் வரும் மார்ச் 22ஆம் தேதி தொடங்குகிறது. இறுதிப்போட்டி மே 25ஆம் தேதி வரை நடைபெறுகிறது. சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, ராஜஸ்தான் ராயல்ஸ், பஞ்சாப் கிங்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ், குஜராத் டைட்டன்ஸ், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் உள்ளிட்ட 10 அணிகள் ஐபிஎல் தொடரில் பங்கேற்கின்றன.
IPL 2025: அணிகளின் கேப்டன்கள் யார்?
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ருதுராஜ் கெய்க்வாட், மும்பைக்கு ஹர்திக் பாண்டியா, கேகேஆர் அணிக்கு ரஹானே, ஹைதராபாத் அணிக்கு பாட் கம்மின்ஸ், ஆர்சிபி அணிக்கு ரஜத் படிதார், ராஜஸ்தான் அணிக்கு சஞ்சு சாம்சன், டெல்லி அணிக்கு கேஎல் ராகுல், குஜராத் அணிக்கு சுப்மன் கில், லக்னோ அணிக்கு ரிஷப் பண்ட், பஞ்சாப் அணிக்கு ஷ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் கேப்டன்ஸி பொறுப்பை பெற்றுள்ளனர்.
IPL 2025: சிஎஸ்கேவின் நீண்ட கால கேப்டன் தோனி
அந்த வகையில், சிஎஸ்கே அணியில் கடந்த சில ஆண்டுகளாகவே தோனியே கேப்டனாக இருந்தார். இடையிடையே சில போட்டிகளில் ரெய்னா கேப்டனாக இருந்துள்ளார். அடுத்த 2022 சீசனில் ஜடேஜா கேப்டனாக நியமிக்கப்பட்டார். இருப்பினும் அந்த சீசனிலேயே தோனி மீண்டும் கேப்டன்ஸியை பெற்று, 2023இல் சிஎஸ்கேவுக்கு 5வது கோப்பையை பெற்றுக்கொடுத்தார்.
IPL 2025: கடந்தாண்டு கேப்டனான ருதுராஜ் கெய்க்வாட்
அப்படியிருக்க யாரும் எதிர்பார்க்காத வகையில், கடந்த சீசன் தொடங்குவதற்கு ஒருநாளுக்கு முன் சிஎஸ்கே கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் அறிவிக்கப்பட்டார். ஐபிஎல் தொடங்குவதற்கு முன் சென்னையில் நடைபெற்ற கேப்டன்கள் போட்டோஷூட்டின் மூலம்தான் ருதுராஜ் கெய்க்வாட் சிஎஸ்கேவின் நியமிக்கப்பட்டதே தெரியவந்தது. அதன்பின்னரே அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர்.
IPL 2025: தோனி என்னிடம் கூறியது என்ன?
இந்நிலையில், சிஎஸ்கேவின் கேப்டன்ஸியை ருதுராஜ் கெய்க்வாட்டிடம் தோனி கொடுத்தபோது என்ன சொல்லியிருப்பார் என்ற கேள்வி அனைவர் மத்தியிலும் இருந்தது. அதற்கான விடை இன்று ருத்ராஜ் கெய்க்வாட் மூலமே தெரிந்துள்ளது.
கடந்தாண்டு ஐபிஎல் தொடர் தொடங்குவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பு, எம்.எஸ். தோனி என்னிடம் வந்து, ‘இந்த வருடம் நான் தலைமை தாங்கவில்லை, நீங்கள் தான் பார்க்கப்போகிறீர்கள்…’ என்றார். நான் அதிர்ச்சியடைந்து, ‘முதல் ஆட்டத்தில் இருந்தேவா…? உறுதியாக கூறுகிறீர்களா…?’ என்று கேட்டேன். தயாராக சில நாட்கள் மட்டுமே இருந்ததால், அது மிகப்பெரிய தகவலாக இருந்தது என்றார்.
“ஆனால் அவர் எனக்கு உறுதியளித்தார், ‘இது உங்கள் அணி. நீங்களே முடிவுகளை எடுங்கள். பீல்டிங் அமைப்பு குறித்து அங்கங்கு தேவைப்படும்போது தவிர, நான் வேறு விஷயங்களில் தலையிட மாட்டேன். அதேபோல், என் ஆலோசனையை பின்பற்ற வேண்டும் என கட்டாயமில்லை’ என கூறினார். அந்த நம்பிக்கை எனக்கு நிறைய அர்த்தத்தை கொடுத்தது” என்றார்.