பீஜிங்,
அமெரிக்க நாடாளுமன்றத்தில் நடைபெற்ற காங்கிரஸ் கூட்டுக் கூட்டத்தில் உரையாற்றிய அதிபர் டொனால்ட் டிரம்ப், பரஸ்பர வரிகள் குறித்து கடுமையான கருத்துக்களை தெரிவித்தார். அமெரிக்காவிற்கு எதிராக மற்ற நாடுகள் அதிக வரிகளை விதித்து வருவதாக டிரம்ப் கூறினார்.
இப்போது அந்த நாடுகளுக்கு எதிராக அவற்றை பயன்படுத்த வேண்டும் என்று குறிப்பிட்ட அவர், ஏப்ரல் 2-ந்தேதி முதல் இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளின் பொருட்கள் மீது அமெரிக்காவின் பரஸ்பர வரிகள் உடனடியாக அமலுக்கு வரும் என்று அறிவித்தார்.
இதன்படி, சீனப் பொருட்களுக்கு முன்னர் விதிக்கப்பட்ட 10 சதவீத வரிகளை 20 சதவீதமாக டிரம்ப் உயர்த்தியுள்ளார். மேலும், அமெரிக்காவிற்குள் பென்டானில்(Fentanyl) உள்ளிட்ட வீரியமிக்க போதை மருந்துகள் கடத்தப்படுவதைத் தடுக்க சீனா போதுமான நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்றும் டிரம்ப் குற்றம் சாட்டினார்.
இந்த நிலையில், அமெரிக்கா போரை விரும்பினால், போரிட தயாராக இருப்பதாக சீனா பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து சீன வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ ‘எக்ஸ்’ வலைதள பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள பதிவில் கூறப்பட்டுள்ளதாவது;-
“பென்டானில் பிரச்சினை என்பது சீன இறக்குமதிகள் மீதான அமெரிக்க வரிகளை உயர்த்துவதற்கான ஒரு அற்பமான காரணமாகும். சீனாவின் உரிமைகள் மற்றும் நலன்களைப் பாதுகாப்பதற்கான எதிர் நடவடிக்கைகள் முற்றிலும் சட்டபூர்வமானவை மற்றும் அவசியமானவை.
அமெரிக்காவின் பென்டானில் நெருக்கடிக்கு அமெரிக்காவே பொறுப்பு. மனிதாபிமானம் மற்றும் அமெரிக்க மக்கள் மீதான நல்லெண்ண உணர்வின் அடிப்படையில், இந்த பிரச்சினையை கையாள்வதில் அமெரிக்காவிற்கு உதவ நாங்கள் உறுதியான நடவடிக்கைகளை எடுத்துள்ளோம்.
எங்கள் முயற்சிகளை அங்கீகரிப்பதற்கு பதிலாக, சீனா மீது அமெரிக்கா பழி சுமத்த முயன்றுள்ளது. மேலும் வரி உயர்வுகள் மூலம் அழுத்தம் கொடுக்கவும், அச்சுறுத்தவும் முயல்கிறது. அவர்ளுக்கு உதவியதற்காக எங்களை தண்டித்து வருகின்றனர். இது அமெரிக்காவின் பிரச்சினையை தீர்க்கப் போவதில்லை.
மிரட்டல் மூலம் எங்களை பயமுறுத்த முடியாது. மிரட்டல் எங்களிடம் வேலை செய்யாது. சீனா மீது அதிகபட்ச அழுத்தத்தை பயன்படுத்த நினைப்பது தவறான கணக்கீடு. அமெரிக்கா உண்மையிலேயே பென்டானில் பிரச்சினையை தீர்க்க விரும்பினால், அதற்கான சரியான வழி சீனாவுடன் கலந்தாலோசிப்பதே ஆகும்.
ஆனால் அமெரிக்கா போரை விரும்பினால், அது வரிப் போராக இருந்தாலும் சரி, வர்த்தகப் போராக இருந்தாலும் சரி அல்லது வேறு எந்த வகையான போராக இருந்தாலும் சரி, நாங்கள் இறுதிவரை போரிட தயாராக இருக்கிறோம்.”
இவ்வாறு அதில் பதிவிடப்பட்டுள்ளது.