துபாய்,
9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடந்து வருகிறது. இதில் துபாயில் நேற்று நடைபெற்ற முதலாவது அரையிறுதியில் இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் மோதின. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 49.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 264 ரன்கள் எடுத்தது.
ஆஸ்திரேலியா தரப்பில் அதிகபட்சமாக ஸ்டீவ் ஸ்மித் 73 ரன் எடுத்தார். இந்தியா தரப்பில் முகமது ஷமி 3 விக்கெட் வீழ்த்தினார். தொடர்ந்து 265 ரன் என்ற இலக்கை நோக்கி களம் புகுந்த இந்தியா 48.1 ஓவரில் 6 விக்கெட்டை மட்டும் இழந்து 267 ரன்கள் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
இந்நிலையில் இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்ற பின் இந்திய கேப்டன் ரோகித் சர்மா அளித்த பேட்டியில் கூறியதாவது, முதல் பாதி முடிந்ததும் இது ஓரளவு சவாலான ஸ்கோர் தான் என்று நினைத்தோம். அதை விரட்டிப்பிடிக்க உண்மையிலேயே மிகச்சிறந்த பேட்டிங்கை வெளிப்படுத்த வேண்டி இருந்தது. குறிப்பாக பதற்றமின்றி பொறுமையாக செயல்பட வேண்டி இருந்தது.
அதை செய்து காட்டியுள்ளோம். அணியில் 6 பந்து வீச்சாளர்கள் இருக்க வேண்டும் என்று விரும்பினோம். மேலும், பேட்டிங்கையும் வலுப்படுத்திக் கொண்டோம். கோலியின் பேட்டிங் அபாரமாக இருந்தது. அணிக்காக பல ஆண்டுகளாக இத்தகைய பங்களிப்பை அளித்து வருகிறார். இவ்வாறு அவர் கூறினார்.