சென்னை: சட்ட கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பித்துள்ள ஓராண்டு சட்ட முதுகலைப் பட்டதாரிகளின் விண்ணப்பங்களை நிராகரிக்கக் கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
தமிழகத்தில் உள்ள அரசு சட்டக் கல்லூரிகளில் காலியாகவுள்ள உதவிப் பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப ஆசிரியர் தேர்வு வாரியம் ஆன்லைனில் விண்ணப்பங்களை பெற்று வருகிறது.இது தொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த ஜன.24 அன்று வெளியிட்டுள்ள அறிவிப்பாணையில், உதவிப் பேராசிரியர் பணிக்கு விண்ணப்பிக்க ஓராண்டு முதுகலை சட்டப்படிப்பை தகுதியாக கருத முடியாது என்றும், இரண்டு ஆண்டுகள் முதுகலை சட்டப்படிப்பை நிறைவு செய்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம் என்றும் கூறப்பட்டிருந்தது.
இதை எதிர்த்து ஆண்டாள், செய்யது அன்சாரி உள்ளிட்ட பலர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த வழக்கு நீதிபதி சி.வி.கார்த்திகேயன் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர்கள் தரப்பில், “அரசு சட்டக்கல்லூரி உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கு ஒராண்டு சட்ட முதுகலைப் படிப்பை முடித்தவர்களும் தகுதியானவர்களே” என்று வாதிடப்பட்டது.
இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, “ஓராண்டு சட்ட முதுகலை படிப்பில் பட்டம் பெற்றுள்ள மனுதாரர்களிடமும் இப்பணியிடங்களுக்கு ஆன்லைனில் விண்ணப்பங்களைப் பெறலாம். ஒருவேளை அவர்கள் ஏற்கெனவே விண்ணப்பித்திருந்தால் அவர்களின் விண்ணப்பங்களை நிராகரிக்கக் கூடாது என இடைக்கால உத்தரவு பிறப்பித்தார். மேலும் இதுதொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரியம், தமிழக அரசின் உயர் கல்வித்துறை, சட்டத்துறை ஆகியவை பதில்மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை மார்ச் 13-ம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளார்.