ஆன்லைன் கேம்ஸ் விளையாடுவதை குடும்பத்தினர் கண்டித்ததால் ஆத்திரமடைந்த கல்லூரி மாணவர் ஒருவர் தனது பெற்றோர் மற்றும் சகோதரியை கற்களால் தாக்கி கொலை செய்தார்.
ஒடிசாவின் ஜகத்சிங்பூர் மாவட்டம், ஜெயபடா சேத்தி சாகி பகுதியை சேர்ந்த பிரசாந்த் சேத்தி என்கிற காளியா (65), அவரது மனைவி கனகலதா (62), மகள் ரோசலின் (25) ஆகிய மூவரும் நேற்று காலையில் தங்கள் வீட்டில் படுகொலை செய்யப்பட்டு கிடந்தனர். கிராம மக்கள் அளித்த தகவலின் பேரில் போலீஸார் விரைந்து சென்று சடலங்களை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
காளியாவின் மகனான 21 வயது கல்லூரி மாணவர் சூர்யகாந்த் சேத்தியை காணவில்லை. பிறகு கிராமத்துக்கு அருகில் பதுங்கியிருந்த அவரை போலீஸார் பிடித்து விசாரித்தனர். இதில் மூவரையும் கொலை செய்ததாக சூர்யகாந்த் ஒப்புக் கொண்டுள்ளார்.
இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், “சூர்யகாந்த் ஆன்லைன் விளையாட்டுகளுக்கு அடிமையாகியுள்ளார். அவர் தனது மொபைல் போனில் நீண்ட நேரம் ஆன்லைன் கேம்ஸ் விளையாடுவதை அவரது பெற்றோரும் சகோதரியும் கண்டித்து வந்துள்ளனர். இதனால் ஆத்திரம் அடைந்த சூர்யகாந்த் செவ்வாய்க்கிழமை அதிகாலை 3 மணிக்கு தனது பெற்றோர் மற்றும் சகோதரியை கற்கள் மற்றும் கடினமான பொருட்களால் தலையில் தாக்கி கொலை செய்துள்ளார். அவருக்கு மனநலப் பிரச்சினை இருக்கலாம் என சந்தேகிக்கிறோம். சம்பவ இடத்தில் தடயங்களை சேகரித்து விசாரணையை தொடங்கியுள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.