புதுமைப்பெண் திட்டத்தில் 5 லட்சம் மாணவிகள் பயன்: அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தகவல்

புதுமைப்பெண் திட்டத்தில் 4.97 லட்சம் மாணவிகள் பயன்பெற்றுள்ளதாக அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: அரசு பள்ளிகள் மற்றும் முழுமையாக அரசு உதவி பெரும் தமிழ் வழிப் பள்ளிகளில் பள்ளிப்படிப்பை முடித்து, உயர்கல்வி பயிலும் மாணவ மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 தடையற்ற நிதியுதவி வழங்கும் வகையில் புதுமைப்பெண் மற்றும் தமிழ்ப்புதல்வன் திட்டங்கள் தமிழக அரசின் சார்பில் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த திட்டங்களின் நடைமுறையாக்கத்தை தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறையின் தமிழ்நாடு மின் ஆளுமை நிறுவனம் செம்மைப்படுத்தி வருகிறது.

அதன்படி திட்டம் தொடங்குவதற்கு முன்பு தகுதியான மாணவர்களை கண்டறிய முன்கணிப்பு பகுப்பாய்வு செய்தல், மாறுபாடுகள் மற்றும் தாமதங்களை நீக்கும் காகிதமற்ற ஆன்லைன் செயல்முறை, துல்லியமான தரவு சரிபார்ப்புக்காக எமிஸ் தளம், ஆதார் மற்றும் என்பிசிஐ (நேஷனல் பேமெண்ட் கார்ப்பரேஷன்) கழகத்துடன் தடையற்ற ஒருங்கிணைப்பை வழங்குதல், தகுதியான எந்த மாணவரும் விடுபடாமல் இருப்பதை உறுதிசெய்ய, கள ஆய்வு மற்றும் மேல்முறையீட்டு வழிமுறையை கையாளுதல் உள்ளிட்ட புத்தாக்க அணுகுமுறைகளை தமிழ்நாடு மின் ஆளுமை நிறுவனம் கையாண்டு வருகிறது.

அதேபோல் சிக்கல்களை நிகழ் நேரக் கண்காணிப்பு செய்யவும், திறம்படத் தீர்வு காணவும் ஆன்லைன் குறைதீர்க்கும் அமைப்பையும் உருவாக்கியிருக்கிறது. அந்தவகையில், இதுவரை தமிழ்நாடு மின்ஆளுமை நிறுவனம் வாயிலாக உயர்கல்வி பயிலும் 4.97 லட்சம் மாணவிகள் புதுமைப்பெண் திட்டத்தின் கீழும், 4.16 மாணவர்கள் தமிழ்ப்புதல்வன் திட்டத்தின் மூலமும் பயனடைந்துள்ளனர். இவ்வாறு முற்போக்கான கல்வி முறைக்கு டிஜிட்டல் மேம்பாடுகள் மூலம் தமிழக அரசு வழிவகுத்து வருகிறது. இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.