மகாராஷ்டிர சட்டப்பேரவை வளாகத்தில் முகலாய அரசர் அவுரங்கசீப்பை புகழ்ந்து பேசியதற்காக சமாஜ்வாதி கட்சி எம்எல்ஏ அபு ஆஸ்மி கூட்டத்தொடரில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
மகாராஷ்டிர சட்டப்பேரவையில் தற்போது பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், சத்ரபதி சிவாஜியின் மகனும் மராட்டிய பேரரசருமான சம்பாஜியின் வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி இந்தியில் வெளியான ‘ஸாவ்வா’ திரைப்படம் குறித்து ஊடகத்துக்கு சமாஜ்வாதி எம்எல்ஏ அபு ஆஸ்மி பேரவை வளாகத்தில் பேட்டியளித்தார்.
அப்போது அவர் கூறும்போது, ‘முகலாய அரசர் அவுங்கசீப்புக்கும் அரசர் சம்பாஜிக்கும் இடையேயான மோதல் அரசியல் ரீதியானது. ஆனால் அவுரங்கசீப் ஆட்சிக் காலத்தில் உலக மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) இந்தியாவின் பங்கு 24 சதவீதமாக இருந்தது. இந்தியாவை தங்கக்கிளி என அழைக்கும் அளவுக்கு பொருளாதாரம் வலுவாக இருந்தது. அவர் ஒரு மிகச்சிறந்த நிர்வாகியாக இருந்தார். சிறந்த அரசராக திகழ்ந்தார். கோயில்களையும் அவர் கட்டினார்’ என்ற ரீதியில் அவுரங்கசீப்பை புகழ்ந்து பேசினார்.
இதையடுத்து எம்எல்ஏ அபு ஆஸ்மியின் கருத்துக்கு மகாராஷ்டிர பேரவை மற்றும் மேலவை என 2 அவைகளிலும் ஆளும் கூட்டணி கட்சி எம்எல்ஏக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
குறிப்பாக, துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே உள்ளிட்ட சில உறுப்பினர்கள், எம்எல்ஏ அபு ஆஸ்மியை பேரவைத் தொடரிலிருந்து சஸ்பெண்ட் செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பேரவையில் தொடர்ந்து வலியுறுத்தி பேசினர். எம்எல்ஏ அபு ஆஸ்மியை தேசத்துரோகி என்றும் வசைபாடினார் துணை முதல்வர் ஷிண்டே. இதையடுத்து, நேற்று முன்தினம் முழுவதும் மகாராஷ்டிர பேரவையின் இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன.
இந்நிலையில், நேற்று காலை மகாராஷ்டிர சட்டப்பேரவைக் கூட்டம் கூடியவுடன், எம்எல்ஏ அபு ஆஸ்மியை சஸ்பெண்ட் செய்வதற்கான தீர்மானத்தை மகாராஷ்டிரா சட்டப்பேரவை விவகாரத்துறை அமைச்சர் சந்திரகாந்த் பாட்டீல் கொண்டுவந்தார்.
இதனைத் தொடர்ந்து, பட்ஜெட் கூட்டத்தொடர் முழுவதும் அபு அசீமை சஸ்பெண்ட் செய்யும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதனிடையே மதரீதியான உணர்வுகளை புண்படுத்தியதாக எம்எல்ஏ அபு அசீம் ஆஸ்மி மீது, நவ்பாடா போலீஸ் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.
அபு ஆஸ்மிக்கு உ.பி. முதல்வர் கண்டனம்: உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் நேற்று கூறியதாவது: மகாராஷ்டிர எம்எல்ஏ அபு ஆஸ்மியை சமாஜ்வாதி கட்சியிலிருந்து நீக்கிவிட்டு உ.பி.க்கு அனுப்புங்கள். அவருக்குத் தேவையான சிகிச்சையை நாங்கள் கொடுக்கிறோம். சத்ரபதி சிவாஜி மகராஜின் பாரம்பரியம் குறித்து தெரியாமல், அவுரங்கசீப்பை கொண்டாடுகிறார் அபு ஆஸ்மி. அவருக்கு நம் நாட்டில் தங்குவதற்கு உரிமை இருக்கிறதா? இந்த விவகாரத்தில் சமாஜ்வாதி கட்சி பதில் சொல்லவேண்டும். இவ்வாறு அவர் கூறினார்