வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல – ஆசிரியர்.
’கேளடி கண்மணி’ திரைப்படத்திற்குத் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் ஒரு தனியிடம் உண்டு. ராதிகாவுடன் எஸ்.பி.பி நடித்திருந்த அப்படத்தில், அவர் கடற்கரையில் மூச்சடக்கிப் பாடும் பாடல் பலரின் ஃபேவரைட்களில் ஒன்று. ரசிகர்கள் மீண்டும் மீண்டும் விரும்பிக் கேட்டு ஆச்சரியத்தில் திளைத்தார்கள்.
மீண்டும், மீண்டும் கேட்டு ரசித்தார்கள்! எஸ்.பி.பி-யால் மட்டுமே இப்படியெல்லாம் பாட முடியுமென்று ஒரு கோஷ்டி கொடி பிடித்தது. இன்றைக்கும் அந்தப் பாட்டை கேட்டாலே ஓர் ஆனந்தம் இதயத்தில் இழையோடும்!

இளையராஜா மற்றும் கங்கை அமரன் ஆகியோரின் மூத்த சகோதரரான பாவலர் வரதராஜனால் எழுதப்பட்ட அந்தப் பாடல் ரெகார்டிங் நடக்க இருக்கையில், படத்தின் இசையமைப்பாளராகிய இசைஞானி அவசரமாக வெளியே செல்ல வேண்டி இருந்ததால், தம்பி கங்கை அமரனிடம் பொறுப்பை ஒப்படைத்து விட்டுச் சென்றாராம். பாடல் நாமனைவரும் பலமுறை கேட்டு ரசித்ததுதான்!
மண்ணில் இந்தக் காதலன்றி யாரும் வாழ்தல் கூடுமோ!
என்று தொடங்கும் அந்தப் பாடலில்…
வெண்ணிலவும் பொன்னி நதியும் கன்னியின் துணையின்றி…
என்ன சுகம் இங்குப் படைக்கும் பெண்மயில் சுகமின்றி…
சந்தனமும் சங்கத் தமிழும் பொங்கிடும் வசந்தமும்…
சிந்தி வரும் பொங்கும் அமுதம் தந்திடும் குமுதமும்…
கன்னி மகள் அருகே இருந்தால் சுவைக்கும்…
கன்னித்துணை இழந்தால் முழுதும் கசக்கும்…
விழியினில் மொழியினில் நடையினில் உடையினில்…
அதிசய சுகம் தரும் அனங்கிவள் பிறப்பிதுதான்…
என்ற வரிகளைக் கடற்கரை மணலில் நடந்தபடி, மூச்சை இழுத்து அடக்கிப் பாடுவதாக நமக்குக் காட்டினார்கள். பாடி விட்டு மூச்சு வாங்குவார் எஸ்.பி.பி. மேலும் சில வரிகளையும் அது போலப் பாடியிருப்பார்.
உண்மையில் ரெகார்டிங்கில் சில புதுமைகளைப் புகுத்தியே அவ்வாறு செய்ததாகவும், மூச்சையடக்கியெல்லாம் பாடவில்லை என்றும், பின்னாளில் இதனை பாலுவே அறிவித்துள்ளதாகவும் தற்போது ஒரு நிகழ்ச்சியில் பாலு சாரின் மகன் சரண் தெரிவித்துள்ளார்.
அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கங்கை அமரனும், அந்த ரெகார்டிங்கின் போது, அவரும் பாலுவுமே இருந்ததாகவும், இந்த நுணுக்கத்தையெல்லாம் பாலுதான் செய்தார் என்றும் கூறியுள்ளார்.

இசைக்கு மயங்காதவர்கள் இவ்வுலகில் எவரும் இலர். அது எப்படியென்றால் மணிமேகலை சாலையில் நடந்து போனால் ஆடவர்கள் அனைவருமே அவள் பின்னால் செல்வார்களாம். அப்படி யாராவது அவளைக் கண்டு கொள்ளாமல் போனால் அவர் பேடியாகத்தான், அதாவது பைத்தியமாகத்தான் இருப்பார் என்பது சுந்தரனாரின் கை வண்ணம்!
ஆடவர் கண்டால் அகறலுமுண்டோ?
பேடியரன்றோ பெற்றியின் நின்றிடின்!…
என்ற மணிமேகலை காப்பிய வரிகள்தான் ஞாபகத்திற்கு வருகின்றன.
சரி! கதைக்கு… சாரி! பாடலுக்கு வருவோம். மோசடி என்பதற்குப் பிறரை ஏமாற்றி தனக்கு ஆதாயம் தேடுவது என்றே பொருள் கூறுகிறார்கள். ஆனால் இந்த இசை மேதைகளின் ஸ்கேமோ, எவ்வளவு இனிய இசையையும், வரலாற்றுச் சிறப்பு மிக்க பாடலையும் நமக்கு வழங்கி, கேட்குந்தோறும்… இல்லையில்லை… கேட்டதை நினைக்கும்போது கூட நம்மை இனிய இன்பத்தில் ஆழ்த்தி விடுகிறதல்லவா?
மண்ணில் இந்தப் பாடலின்றி யாரும் வாழ்தல் கூடுமோ?!
– ரெ.ஆத்மநாதன்,
கூடுவாஞ்சேரி.
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்…
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க – [email protected] என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்… நடந்துகொண்டிருக்கலாம்… நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், காணொளி, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.
Vikatan WhatsApp Channel
இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்… CLICK BELOW LINK
https://bit.ly/VikatanWAChannel
