புதுடெல்லி: “ராகுல் காந்திக்கு வழிகாட்ட 20 ஆண்டுகளாக நான் தயாராக இருக்கிறேன். ஆனால், அவருக்கு என்னைப் பிடிக்கவில்லை” என்று மூத்த காங்கிரஸ் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான மணி சங்கர் ஐயர் தெரிவித்துள்ளார்.
தனியார் தொலைக்காட்சி நேர்காணல் நிகழ்ச்சியில் செய்தியாளரின் பல்வேறு கேள்விகளுக்கு மணி சங்கர் ஐயர் பதிலளித்தார். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் படித்துக்கொண்டிருந்தபோது படிப்பில் அவர் தோல்வி அடைந்தது பற்றி குறிப்பிட்டிருந்தார். இது சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில், நேர்காணல் தொடங்குவதற்கு முன்பாக, “நான் உங்களிடம் என்ன சொன்னாலும், அது பாஜகவால் திரிக்கப்பட்டு பயன்படுத்தப்படும் என்பது எனக்குத் தெரியும். அவர்களால் அதைச் செய்ய முடியும்.
மேலும், எனது கருத்துகள் காங்கிரஸின் கருத்துகள் அல்ல என்றும், நான் எந்த வகையிலும் காங்கிரஸைப் பிரதிநிதித்துவப்படுத்தவில்லை என்றும் காங்கிரஸ் தகவல் தொடர்புத் தலைவர் பவன் கேரா ஏற்கெனவே எனக்கு சான்றிதழ் வழங்கியுள்ளார் என்பதில் நான் நிம்மதியடைகிறேன். எனவே, நான் சொன்னாலும் அனைத்தையும் நீங்கள் காட்டுங்கள். யாராவது அதைத் திரிக்க விரும்பினால், திரிக்கட்டும்” என்று மணிசங்கர் ஐயர் கூறினார்.
இந்திரா காந்தி குடும்பத்துடனான அவரது உறவு குறித்த கேள்விக்கு பதில் அளித்த மணி சங்கர் ஐயர், “நட்பு தொடர்கிறது. அவர்கள் என்னை எதிரியாகப் பார்ப்பதில்லை. ஆனால், நான் மிகவும் வயதானவன் என்று ராகுல் காந்தி நினைக்கிறார். இதற்கு நான் விதிவிலக்கு. நான் வயதானவன் அல்ல. நீங்கள் என்னை கட்சியில் விரும்பாததற்கும், என்னிடம் ஆலோசனை கேட்க விரும்பாததற்கும் வேறு காரணத்தை தேட வேண்டும்” என்று கூறினார்.
ராகுல் காந்திக்கு வழிகாட்டவும், காங்கிரஸை மீட்டெடுக்கவும் நீங்கள் தயாராக இருக்கிறீர்களா என்ற கேள்விக்கு பதில் அளித்த மணி சங்கர் ஐயர், “அவருக்கு வழிகாட்ட நான் 20 ஆண்டுகளாக நான் தயாராக இருக்கிறேன். ஆனால், எனது வழிகாட்டலை அவர் விரும்பவில்லை. அவருக்கு என்னைப் பிடிக்கவில்லை. என் கருத்தை அவர் மீது திணிக்க நான் யார்? ராகுல் காந்தியிடம் சென்று சிலர் என்னைப் பற்றி புகார் செய்கிறார்கள். அதை அவர் எடுத்துக்கொள்கிறார் என்பது எனக்கு புரிகிறது” என கூறினார்.
ராகுல் காந்தியை நேரில் சந்தித்து தவறான புரிதல்களை நீக்க ஏன் முயலக் கூடாது என்ற கேள்விக்கு பதில் அளித்த மணி சங்கர் ஐயர், “என்னைச் சந்திக்க அவர் விரும்பவில்லை என்றால் நான் எப்படி அவரைச் சந்திக்க முடியும்? கடந்த 2004-ஆம் ஆண்டு ராகுல் காந்தியுடனான ஒரு உரையாடலின்போது, அவரது பாதுகாப்பு குறித்துப் பேசினோம். அப்போது எனது மனைவி சுனீத் மணி அய்யர், ராகுல் காந்தியிடம், மணி சங்கர் ஐயரின் பேச்சைக் கேட்க வேண்டாம் என்று கூறினார். அதற்கு ராகுல், ‘நான் எப்போதும் அவர் கூறுவதைக் கேட்பேன். ஏனென்றால் அவர் என் தந்தையின் நண்பர். என் தந்தை எப்போதும் அவர் பேச்சைக் கேட்பார்’ என்று கூறினார்.
ஆனால், அவர் (ராகுல் காந்தி) இப்போது என்னைச் சந்திப்பதில்லை. பிரியங்காவும் என்னை சந்திப்பதில்லை. சோனியா காந்திக்கோ உடல்நிலை நிலை சரியில்லை. எனவே, நான் யாரையும் சந்திக்க முடியாது. நான் ஏன் அவர்களைத் தொந்தரவு செய்ய வேண்டும்? நான் போய் ஒரு எம்.பி. பதவியைக் கேட்க வேண்டுமா?” என்று குறிப்பிட்டார்.
முந்தைய நேர்காணல் ஒன்றில் ராஜீவ் காந்தி குறித்த கேள்விக்கு பதில் அளித்த மணி சங்கர் ஐயர், “அவர் ஒரு விமானி. அவர் மாணவராக இருந்தபோது, இரண்டு முறை தோல்வியடைந்துள்ளார். நான் அவருடன் கேம்பிரிட்ஜில் இருந்தேன். அங்கு அவர் தோல்வியடைந்தார். கேம்பிரிட்ஜில் தோல்வியடைவது மிகவும் கடினம். முதல் வகுப்பில் தேர்ச்சி பெறுவது எளிது. ஏனென்றால் பல்கலைக்கழகம் அதன் இமேஜை தக்க வைத்துக் கொள்ளவே விரும்பும். அதோடு, அனைவரும் குறைந்தபட்சம் தேர்ச்சி பெறுவதை உறுதி செய்ய முயலும்.
இந்த தோல்வியை அடுத்து ராஜீவ் காந்தி, லண்டனில் உள்ள இம்பீரியல் கல்லூரியில் சேர்ந்தார். அங்கும் தேர்வில் தோல்வியடைந்தார். அப்படிப்பட்ட ஒருவர் எப்படி பிரதமராக முடியும் என்று நான் நினைத்தேன்?” என குறிப்பிட்டிருந்தார். பின்னர் இது குறித்து விளக்கம் அளித்த மணி சங்கர் ஐயர், இரண்டரை மணி நேர நேர்காணலின் ஒரு சிறிய பகுதியை மட்டும் எடுத்து எனக்கு எதிராக பாஜகவினர் பரப்பிவிட்டனர் என்று வேதனைப்பட்டார்.