ரூ.4,081 கோடி மதிப்பில் கேதார்நாத் ரோப்கார் திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

உத்தராகண்ட்டில் கேதார்நாத் மற்றும் ஹேம்குந் சாகிப் ரோப்கார் திட்டம், கால்நடை சுகாதாரம் மற்றும் நோய் கட்டுப்பாடு திட்டத்தில் மாற்றம் ஆகியவற்றுக்கு மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்தது.

மத்திய அமைச்சரவை கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில் பல திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இது குறித்த ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறியதாவது:

உத்தராகண்ட் மாநிலத்தில் சோன்பிரயாக் முதல் கேதார்நாத் வரை 12.9 கிலோ தூரத்துக்கு ரூ.4,081 கோடி மதிப்பில் ரோப்கார் திட்டம் அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. பொதுத்துறை மற்றும் தனியார் துறை ஒத்துழைப்புடன் இத்திட்டம் அமைக்கப்படுகிறது. இதன் மூலம் நாள் ஒன்றுக்கு 18,000 பக்தர்கள் கேதார்நாத் செல்ல முடியும். வழக்கமாக இந்த மலைப்பாதையில் பக்தர்கள் நடைபயணமாகவும், குதிரைகள் மூலமாகவும் செல்ல 8 முதல் 9 மணி நேரம் ஆகும். இங்கு ரோப் கார் அமைப்பதன் மூலம் பக்தர்கள் 36 நிமிடங்களில் பயணிக்க முடியும். இத்திட்டத்தால் இங்கு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா வளர்ச்சியடையும்.

இதேபோல் உத்தராகண்ட் மாநிலத்தின் சமோலி மாவட்டத்தில் கோவிந்காட் முதல் ஹேம்குந்த் சாகிப் வரை உள்ள 12.9 கி.மீ தூரத்துக்கு ரூ.2,730 கோடி மதிப்பில் ரோப் கார் திட்டம் அமைக்கப்படுகிறது.

கால்நடை சுகாதாரம்: கால்நடை சுகாதாரம் மற்றும் நோய் கட்டுப்பாடு திட்டத்தில் கொண்டுவரப்பட்ட மாற்றத்துக்கு மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் வழங்கியது. கால்நடைகளுக்கான தீவிர நோய் தடுப்பு திட்டம், கால்நடை மருத்துவமனைகளை வலுப்படுத்தும் திட்டம், நடமாடும் கால்நடை மருத்துவமனை, கால்நடைகளுக்கான நோய்களை கட்டுப்படுத்த மாநிலங்களுக்கு உதவி போன்ற மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.

கால்நடை மருந்தகம் என்ற புதிய திட்டமும் இதில் சேர்க்கப்பட்டுள்ளது. இத்திட்டத்துக்காக 2 ஆண்டுகளுக்கு ரூ.3,880 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. கால்நடை மருந்தகம் திட்டத்தின் கீழ் ரூ.75 கோடி மதிப்பில் தரமான மருந்துகள் வழங்கப்படவுள்ளன.

கோமாரி நோய், தோல் கழலை நோய் உட்பட பலவித நோய்களால் கால்நடை உற்பத்தியில் பாதிப்பு ஏற்பட்டது. தடுப்பு மருந்துகள் மூலம் இந்த நோய்களை தடுத்து கால்நடை உற்பத்தியை அதிகரிக்க இந்த மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. நடமாடும் கால்நடை மருத்துவமனைகள் மூலம் வீடுகளுக்கே சென்று கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் விவசாயிகளுக்கு ஏற்படும் பொருளாதார இழப்பு தடுக்கப்படும். இவ்வாறு அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.