புதுடெல்லி: உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் ஜனவரி 13-ம் தேதி தொடங்கி 45 நாட்கள் நடைபெற்ற மகா கும்பமேளாவில் பக்தர்கள் தங்குவதற்கு கூடார நகரம் அமைக்கப்பட்டது. இதில் நட்சத்திர விடுதிகளின் வசதிகளை உ.பி. அரசு செய்திருந்தது. மாநில சுற்றுலா கழகத்தின் திரிவேணி சங்கம கரை காலனியில் 2,100 கூடாரங்கள், 110 தனிக்குடில்கள் கட்டப்பட்டிருந்தன. இவற்றில் தங்குவதற்கு இந்தியர்கள் மற்றும் வெளிநாட்டினர் இணையதளத்தில் முன்பதிவு செய்தனர்.
சர்வதேச தரத்தில் நவீன வசதிகளுடன் கூடாரங்களின் அறைகள், குடில்கள் இருந்ததால், லட்சக்கணக்கான வெளிநாட்டினரும் இங்கு வந்து தங்கினர். இந்நிலையில், தங்கும் கூடாரங்கள், உணவு விடுதிகள் என மாநில சுற்றுலா கழகத்துக்கு மட்டும் சுமார் ரூ.100 கோடி வருவாய் கிடைத்துள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. மேலும் மகா கும்பமேளா நடைபெற்ற 45 நாட்களில் தனியார் கூடாரங்களுக்கும் ரூ.73 கோடி வருவாய் கிடைத்துள்ளது. இந்த தொகை இறுதி கணக்கீட்டுக்கு பிறகு மேலும் உயரும் என்று தெரிகிறது.
இதுபோன்ற நடவடிக்கைகளால் முதல் முறையாக, பிரயாக்ராஜ் நகர் சர்வதேச சுற்றுலா வரைபடத்தில் இடம் பெற்றுள்ளது. மேலும் மகா கும்பமேளாவால் உலக சுற்றுலா நிகழ்ச்சிகளின் அனைத்து சாதனை களும் முறியடிக்கப்பட்டுள்ளது. சுமார் 55 லட்சம் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் மகா கும்பமேளாவுக்கு வந்துள்ளனர்.
கடந்த 144 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெறும் மகா கும்பமேளா என்பதால், பல வழிகளில் வரலாறு படைத்துள்ளது. இங்கு 73 நாடுகளின் தூதர்கள், 116 நாடுகளின் பக்தர்கள் திரிவேணி சங்கமத்தில் புனித நீராட வந்தனர். நேபாளம், அமெரிக்கா, பிரிட்டன், இலங்கை, கனடா, வங்கதேசம், ரஷ்யா, ஜப்பான், ஜெர்மனி, பிரான்ஸ், பிரேசில், மலேசியா, நியூசிலாந்து, இத்தாலி, தாய்லாந்து உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்தவர்களும் இடம்பெற்றிருந்தனர்.
கும்பமேளாவுக்கு வந்த வெளிநாட்டினர் அருகில் உள்ள வாராணசி, அயோத்தி, சித்ரகூட், மதுரா மற்றும் கோரக்பூருக்கும் விஜயம் செய்தனர். இதனால் அங்கும் உணவு விடுதிகள், வழிகாட்டிகள், தனியார் போக்குவரத்து மற்றும் உள்ளூர் வணிகர்கள் அதிக வருவாய் ஈட்டியுள்ளனர். உ.பி.யின் சீதாபூர் மாவட்டத்தில் உள்ள நைமிஷாரண்யம் மற்றும் பிரயாக்ராஜ் ஆகியவை மத்திய அரசின் ‘சுதேசி தர்ஷன்-2’ திட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. இது இந்தியாவின் கலாச்சார சுற்றுலாவை புதிய உயரத்துக்கு கொண்டு செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.