சென்னை: தமிழர் முன்னேற்றக் கழகத்தினர், நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் முன்னிலையில், அக்கட்சியுடன் தங்களை இணைத்துக் கொண்டனர்.
நாம் தமிழர் கட்சியில் 2009 முதல் 2011 ஜனவரி மாதம் வரை சென்னை மாவட்ட பொறுப்பாளராக இருந்து வந்த க.அதியமான், அப்போது ஏற்பட்ட மனகசப்பின் காரணமாக வெளியே தமிழர் முன்னேற்றக் கழகம் என்ற கட்சியை ஆரம்பித்து நடத்தி வந்தார். தமிழினம் சார்ந்து போராட்டங்களை முன்னெடுத்து வந்த தமிழர் முன்னேற்றக் கழகம் கட்சி, தற்போது நாம் தமிழர் கட்சியுடன் மீண்டும் இணைந்துள்ளது.
அதன்படி தமிழர் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் க.அதியமான் தலைமையில், 120-க்கும் மேற்பட்ட கட்சி நிர்வாகிகள், சென்னை போரூரில் உள்ள நாம் தமிழர் கட்சி தலைமை அலுவலகத்தில், அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் முன்னிலையில் நாம் தமிழரில் தங்களை நேற்று இணைத்துக் கொண்டனர். இந்நிகழ்வில் தமிழர் முன்னேற்றக் கழக பொருளாளர் தீபன், துணைப் பொதுச்செயலாளர் சேகர் உள்ளிட்டோரும் உடனிருந்தனர்.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் க.அதியமான் கூறுகையில், “ தமிழினம் சார்ந்த அரசியலை நடத்திக் கொண்டிருக்கும் நாம் தமிழர் கட்சியை எப்படியாவது வீழ்த்திவிட வேண்டும் என ஆளுகின்ற திமுக கட்சி முனைப்போடு செயல்பட்டு வருகிறது. அதற்கு இடம் கொடுக்கக்கூடாது என்ற வகையில் எங்களது கட்சியினர் ஒன்றாக சேர்ந்து பேசி, நாம் தமிழர் கட்சியை பலப்படுத்துவோம் என்ற வகையில் தமிழர் முன்னேற்றக் கட்சியை இணைந்துள்ளோம்.” என்று தெரிவித்தார்.