கடந்த மாதம் தொடங்கிய சாம்பியன்ஸ் டிராபி தொடர் கிட்டத்தட்ட முடிவுக்கு வந்துள்ளது. மொத்தம் எட்டு அணிகள் பங்கேற்ற இந்த தொடரில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் இறுதிப் போட்டிக்கு தேர்வாகியுள்ளன. பாகிஸ்தான் 29 ஆண்டுகளுக்கு பிறகு ஒரு ஐசிசி தொடரை நடத்தினாலும் அரை இறுதிக்கு தகுதி பெறவில்லை. வரும் ஞாயிற்றுக்கிழமை துபாயில் இந்தியா மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையே பைனல் போட்டி நடைபெறுகிறது. அரையிறுதியில் இந்தியா ஆஸ்திரேலியா அணியையும், நியூசிலாந்து தென்னாபிரிக்கா அணியையும் வெளியேற்றியது. இரண்டு அணிகளும் மிகவும் சிறப்பாக விளையாடி வருவதால் யார் கோப்பையை அடிக்க போகிறார்கள் என்று எதிர்பார்ப்பு அதிக அளவில் உள்ளது.
@ImRo45 becomes the first Captain to lead his team to the final of all four major ICC men’s tournaments.#TeamIndia pic.twitter.com/FXzPwNO3Xu
— BCCI (@BCCI) March 6, 2025
ஹர்திக் பாண்டியா காயம்
சாம்பியன்ஸ் டிராபி தொடர் முழுவதும் ஹர்திக் பாண்டியா பேட்டிங் மற்றும் பவுலிங்கில் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். இந்திய அணி 4 ஸ்பின்னர்களுடன் விளையாடி வருவதால் பவர் பிளேயில் பந்து வீசக்கூடிய வேகப்பந்து வீச்சாளராக ஹர்திக் பாண்டியா உள்ளார். 2023 ஒரு நாள் உலக கோப்பையில் பாதியில் காயம் காரணமாக இவர் வெளியேறியதால் இந்திய அணி சற்று தடுமாறியது. இதனாலும் கோப்பையை இழந்தது என்று சொல்லலாம். தற்போது சாம்பியன்ஸ் டிராபி பைனலிலும் ஹர்திக் பாண்டியா காயம் காரணமாக விளையாட மாட்டாரா என்ற அச்சம் வெளியாகி உள்ளது.
ஏனெனில் அரை இறுதியில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான போட்டியில் ஹர்திக் பாண்டியாவிற்கு காலில் காயம் ஏற்பட்டது. இரண்டாவது இன்னிங்ஸில் 47 வது ஓவரில் ஆடம் சாம்பா வீசிய பந்தை கவர் திசையில் ஹர்திக் பாண்டியா அடித்தார், இரண்டு ரன்கள் ஓட முயன்ற போது கேஎல் ராகுல் ஒரு ரன் போதும் என்று சொன்னதால், கிரீஸ்க்கு ஓடி வந்தார் ஹர்திக். அப்போது அவருக்கு தசைப் பிடிப்பு ஏற்பட்டது. இதனால் பேட்டிங் செய்யவும் மிகவும் சிரமப்பட்டார். காலில் அதிக வலி இருந்த போதிலும் 24 பந்துகளில் 3 சிக்ஸர்கள் மற்றும் 1 பவுண்டர் உட்பட 28 ரன்கள் அடித்து அணியின் வெற்றிக்கு உதவினார். இந்நிலையில் இந்த காயம் காரணமாக இறுதிப்போட்டியில் விளையாடுவாரா மாட்டாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
தற்போது வரை பிசிசிஐ தரப்பிலிருந்து ஹர்திக் பாண்டியாவின் காயம் குறித்து எந்த ஒரு அப்டேட்டும் வெளியாகவில்லை. காயம் குணமாகவில்லை என்றால் வேறு ஒரு வீரரை வைத்து பைனலில் விளையாட வேண்டிய சூழ்நிலை உருவாகும். இது அணியின் ஒட்டுமொத்த திட்டத்தையும் பாதிக்கும். எனவே ஹர்திக் எப்படியாவது விளையாட வேண்டும் என்று பலரும் எதிர்பார்த்து வருகின்றனர். ஹர்திக் பாண்டியா வெளியேறினால் அர்ஷ்தீப் சிங் அல்லது ஹர்ஷித் ராணா அணியில் இடம் பெறுவார்கள்.