புதுடெல்லி: பிரயாக்ராஜின் மகா கும்பமேளாவில் ஒரு படகோட்டி குடும்பம் ரூ.30 கோடி ஈட்டியதாக முதல்வர் யோகி ஆதித்யநாத் பாராட்டி இருந்தார். இந்த படகோட்டியின் லாபம் மீது விசாரணைக்கு வலியுறுத்தி உள்ளார் சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ்.
ஜனவரி 13-ல் துவங்கி 45 நாட்கள் நடைபெற்ற மகா கும்பமேளா பற்றி முதல்வர் யோகி தொடர்ந்து பெருமிதப்பட்டு வருகிறார். அந்தவகையில் அவர் இரண்டு தினங்களுக்கு முன் மகா கும்பமேளாவில் ஒரு படகோட்டி குடும்பம் 130 படகுகள் மூலம் ரூ.30 கோடி ஈட்டியதாகவும் தெரிவித்திருந்தார்.
பிண்ட்டு மெஹ்ரா எனும் அந்த படகோட்டி குடும்பம், பிரயாக்ராஜின் குற்றப் பின்னணி கொண்டவர்கள் எனத் தெரியவந்துள்ளது. இதை அறிந்தோ, அறியாமலோ அவரை உ.பி முதல்வர் பாராட்டியது அந்த மாநிலத்தில் சர்ச்சையாகி விட்டது.
இந்நிலையில், உ.பியின் முக்கிய எதிர்க்கட்சியான சமாஜ்வாதி கட்சியின் தலைவர் இப்பிரச்சனையில் உ.பி அரசு விசாரணை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தி உள்ளார். படகோட்டி பிண்ட்டு மெஹ்ரா ரூ.30 கோடி லாபம் ஈட்டியது எப்படி என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது குறித்து உ.பியின் முன்னாள் முதல்வரான அகிலேஷ் யாதவின் சமூகவலைதள பதிவில் குறிப்பிட்டிருப்பதாவது: “மகா கும்பமேளாவில் ரூ.30 கோடி லாபம் சம்பாதித்த படகோட்டியின் குடும்பம் குற்றப் பின்னணி கொண்டது. இவரை முதல்வர் யோகி சட்டப்பேரவையில் பாராட்டியுள்ளார்.
இந்த சம்பவத்தின் உண்மைப் பின்னணி கண்டறியப்பட வேண்டும். இந்த படகோட்டி உண்மையிலேயே ரூ.30 கோடி ஈட்டினார் எனில் அதற்காக அவர் செலுத்திய ஜிஎஸ்டி தொகை எவ்வளவு?
இந்த குற்றவாளி படகோட்டியுடன் ஒப்பந்தம் இட்டுக்கொண்டு அவரை முதல்வர் பாராட்டியுள்ளார். இதுபோன்ற நடவடிக்கைகளால் உ.பி பாஜக ஆட்சியில் கிரிமினல்களுக்கு தைரியம் வளர்ந்து பெருகியுள்ளனர்.” எனத் தெரிவித்துள்ளார்.
கடந்த 2019 கும்பமேளா முதல் படகுகளை வைத்துள்ள அரேலி பகுதியின் பிண்ட்டு மெஹ்ரா குடும்பம் தொழில் செய்யத் தொடங்கி உள்ளது. இவர்களிடம் இருந்த 60 படகுகளுடன் மகா கும்பமேளாவுக்காக மேலும் 70 படகுகளை வாங்கி இயக்கியதில் ரூ.30 கோடி சம்பாதித்ததாகத் தெரிவித்துள்ளனர்.