மினி உலகக் கோப்பை என அழைக்கப்படும் சாம்பியன்ஸ் டிராபி தொடர் தற்போது இறுதி கட்டத்தை எட்டி இருக்கிறது. இத்தொடரின் இறுதி போட்டி நாளை மறுநாள் (மார்ச் 09) துபாயில் நடைபெறுகிறது. இரு அணிகளும் பலமான அணி என்பதால் கடைசி வரை விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது என்பதில் சந்தேகம் இல்லை. மேலும், வெற்றி பெற போவது யார்? என்பதில் ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு உள்ளது.
டிரா ஆனால் என்ன ஆகும்?
இந்த நிலையில், ஒருவேளை போட்டி டிரா ஆனால் என்ன நடக்கும். எந்த மாதிரியான விதியை ஐசிசி வைத்துள்ளது என்பதை நாம் கண்டிபாக தெரிந்துகொள்ள வேண்டும். கடந்த 2002ஆம் ஆண்டு நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதி போட்டியில் இந்தியா – இலங்கை அணிகள் மோதின. ஆனால் அப்போட்டி எவ்வித முடிவும் இன்றி மழையால் கைவிடப்பட்டது. இதன் காரணமாக இரு அணிகளும் கோப்பையை பகிர்ந்து கொண்டது. அப்படி ஒருவேளை மழை பெய்தாலோ அல்லது போட்டி டிரா ஆனாலோ ஐசிசி விதியின் படி எந்த மாதியான முடிவு எட்டப்படும் என்பதை பார்க்கலாம்.
ஒருநாள் போட்டிகள் டிரா ஆனால் என்ன செய்ய வேண்டும் என்பது ஒவ்வொரு தொடரை நடத்தும் அமைப்புகளும் முடிவு செய்து கொள்ளலாம். அந்த வகையில் சாம்பியன்ஸ் டிராபி தொடரை நடத்தும் ஐசிசி சர்வதேச கிரிக்கெட் அமைப்பு, போட்டி டிரா ஆனால் சூப்பர் ஓவர்களை நடத்த விதி வகுக்கப்பட்டுள்ளது.
மேலும் படிங்க: ரோகித் சர்மா, கவுதம் கம்பீர் இருவருக்கும் சவுக்கடி கொடுத்த சுனில் கவாஸ்கர்..!
அப்படி இந்தியா – நியூசிலாந்து போட்டி டிரா ஆனால் சூப்பர் ஓவர் நடத்தப்படும். அதாவது இரண்டு அணிகளும் முடிவு எட்டப்படும் வரை தொடர்ந்து சூப்பர் ஓவர்களை விளையாட வேண்டும். ஒரு சூப்பர் ஓவர் டிரா ஆனால், அடுத்தடுத்து தொடர்ந்து முடிவு எட்டப்படும் வரை சூப்பர் ஓவர் விளையாட வேண்டும்.
சர்ச்சையை கிளப்பிய விதி
முன்னதாக 2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஒருநாள் உலகக் கோப்பை தொடரின் இறுதி போட்டியில் இங்கிலாந்து – நியூசிலாந்து அணிகள் விளையாடியது. இப்போட்டி டிரா ஆனதால் சூப்பர் ஓவர் நடத்தப்பட்டது. ஆனால் சூப்பர் ஓவரும் டிரா ஆனதால், எந்த அணி அதிக பவுண்டரிகள் அடித்ததோ அந்த அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி இங்கிலாந்து அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இந்த விதி அப்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அத்துடன் அந்த விதி நீக்கப்பட்டு விட்டது. அப்போது முதல் ஐசிசி அமைப்பு நடத்தும் தொடர்களில் எல்லாம் தொடர்ந்து சூப்பர் ஓவர்கள் நடத்தும் முறையே அமலில் உள்ளது. அதுவே இந்த முறையும் தொடரும்.
இந்த சூப்பர் ஓவர்கள் விதிப்படி, முதல் சூப்பர் ஓவர் டிரா ஆனால், அதில் விக்கெட்டை இழந்த பேட்ஸ்மேன்கள் இரண்டாவது சூப்பர் ஓவரில் பேட்டிங் செய்ய இயலாது. அதேபோல் முதல் சூப்பர் ஓவரில் பந்து வீசியவர் அடுத்த சூப்பர் ஓவரில் கலந்து கொள்ள முடியாது.
மழை பெய்தால் என்ன ஆகும்?
ஒருவேளை போட்டியின் போது மழை பெய்தால் போட்டி நடைபெறும் அன்று இரு அணிகளுக்கும் தலா 25 ஓவர்கள் பேட்டிங் செய்வதகான அவகாசம் கொடுக்கப்பட வேண்டும். அப்படி போட்டி நாள் அன்று மழை பெய்து போட்டியானது தடைப்பட்டால், ரிசர்வ் டே அறிவிக்கப்பட்டுள்ளது. மறுநாள் போட்டி நடைபெறும். ஒருவேளை ரிசர்வ் டே அன்றும் மழையால் போட்டி தடைப்பட்டால், இரு அணிகளும் கோப்பையை பகிர்ந்து கொள்ளும்.
மேலும் படிங்க: IND vs NZ Final: ஹர்திக் பாண்டியா வெளியே.. அவருக்கு பதில் யார்? இந்தியாவின் பிளேயிங் XI என்ன?