டமாஸ்கஸ்: மத்திய கிழக்கு நாடான சிரியாவில் பாதுகாப்புப் படையினர், முன்னாள் அதிபர் ஆசாத் ஆதரவாளர்கள் இடையிலான மோதலில் பொதுமக்கள் உட்பட சுமார் 300-க்கும் மேற்பட்டோர் பலி ஆகியுள்ளனர்.
கடந்த ஆண்டு டிசம்பரில் துருக்கி ஆதரவு பெற்ற ஹயாத் தஹ்ரிர் அல் ஷாம் (எச்டிஎஸ்) கிளர்ச்சி படை சிரியாவை கைப்பற்றியது. அதையடுத்து அப்போது அதிபராக இருந்த ஆசாத் வெளிநாட்டுக்கு தப்பினார். இந்நிலையில், அந்த நாட்டின் வடமேற்கில் உள்ள கடலோர நகர பகுதிகளில் சிரியா பாதுகாப்பு படை மற்றும் ஆசாத் ஆதரவாளர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. அங்கு தங்கள் படை பலத்தை அதிகரிக்கும் வகையில் கூடுதல் படையினரை அனுப்பியது இடைக்கால அரசு.
இரு தரப்புக்கும் இடையிலான மோதலில் பொதுமக்கள் உட்பட 300-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். கடந்த வியாழக்கிழமை அந்த நாட்டில் உள்ள டார்டஸ் மற்றும் லடாகியா மாகாணங்களில் அமைந்துள்ள சோதனைச் சாவடிகள், பாதுகாப்புப் படைகள் மற்றும் ராணுவ நிலைகள் மீது ஆசாத் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தினர். இந்த நிலையில் மீண்டும் அந்த பகுதிகள் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளதாக சனிக்கிழமை அன்று சிரியா பாதுகாப்பு படை தகவல் அளித்துள்ளது. இதை அந்த நாட்டின் அரசு தரப்பு செய்தி நிறுவனம் உறுதி செய்துள்ளது. பாதுகாப்பு படையினர் மீது தனிப்பட்ட நபர்கள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடி தரும் வகையில் அங்கு கூடுதலாக பாதுகாப்பு படையினர் பணி அமர்த்தப்பட்டுள்ளதாக தகவல்.
மேலும், சிரியாவின் வடமேற்கு பகுதியில் ஊரடங்கு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த பகுதி ஆசாத் ஆதரவாளர்கள் அதிகம் இருக்கும் பகுதியாக அறியப்படுகிறது. மோதலை அடுத்து அந்தப் பகுதியில் வசித்து வந்த மக்கள் வெளிநாட்டு நிர்வகித்து வரும் முகாமில் தஞ்சம் அடைந்துள்ளனர்.
இந்த மோதலை அடுத்து சிரியாவின் இடைக்கால அதிபர் அகமது அல்-ஷரா வெள்ளிக்கிழமை அன்று வன்முறையில் ஈடுபடுபவர்கள் தங்கள் ஆயுதங்களைக் கீழே போட்டுவிட்டு சரணடைய வேண்டும் என்று வலியுறுத்தினார். மேலும், மக்களை சிறைப்படுத்த வேண்டாம் என்றும் கூறியிருந்தார். இந்த மோதலில் பாதுகாப்பு படையினரும் உயிரிழந்துள்ளனர்.
சிரியாவில் ஷியா பிரிவை சேர்ந்த முன்னாள் அதிபர் ஆசாத்துக்கும் சன்னி பிரிவை சேர்ந்த கிளர்ச்சிக் குழுக்களுக்கும் இடையே சுமார் 14 ஆண்டுகளாக உள்நாட்டுப் போர் நடைபெற்று வந்தது. துருக்கி ஆதரவு பெற்ற ஹயாத் தஹ்ரிர் அல் ஷாம் (எச்டிஎஸ்), சிரியா தேசிய படை, அமெரிக்க ராணுவத்தின் ஆதரவு பெற்ற பிரீ சிரியா படை உள்ளிட்ட பல்வேறு கிளர்ச்சிக் குழுக்கள் சிரியா அரசுக்கு எதிராக போரிட்டு வந்தன. ஆசாத்துக்கு ரஷ்யாவும் ஈரானும் ஆதரவு அளித்து வந்தன. இந்த சூழலில் துருக்கி ஆதரவு கிளர்ச்சி குழுக்கள் கடந்த ஆண்டு டிசம்பரில் சிரியா தலைநகர் டமாஸ்கஸை கைப்பற்றியது. அதையடுத்து ஆசாத் வெளிநாட்டுக்கு தப்பினார்.