மக்களிடம் ஓட்டு கேட்பதற்கு முன்பாக கடமைகளை காங்கிரஸார் நிறைவேற்ற வேண்டும்: ராகுல் காந்தி

மக்களிடம் ஓட்டு கேட்பதற்கு முன்பாக காங்கிரஸார் தங்களை கடமைகளை நிறைவேற்ற வேண்டும் என மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி அறிவுரை வழங்கியுள்ளார்.

குஜராத்தில் வட்டார அளவிலான காங்கிரஸ் தலைவர்களுடன் ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் ராகுல் காந்தி கலந்து கொண்டு பேசியதாவது:

குஜராத்தில் காங்கிரஸ் ஆட்சியை இழந்து சுமார் 30 ஆண்டுகள் ஆகிவிட்டது. நான் இங்கு வரும்போதெல்லாம் சட்டப்பேரவை தேர்தல்கள் குறித்து ஆலோசிக்கிறோம். நாம் நமது கடமைகளை நிறைவேற்றும்வரை, குஜராத் மக்கள் நம்மை தேர்தலில் வெற்றிபெற வைக்கமாட்டார்கள். நாமும் ஓட்டுப்போடுங்கள் என மக்களிடம் கேட்க கூடாது. நாம் நமது கடைமைகளை நிறைவேற்றும்போது, குஜராத் மக்கள் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு அளிப்பது நிச்சயம்.

இந்தியாவின் சுதந்திர போராட்ட இயக்கத்தை வழிநடத்தியதில் குஜராத்துக்கு முக்கிய பங்கு உண்டு. ஆங்கிலேயர்களை காங்கிரஸ் கட்சி எதிர்கொண்டபோது, எங்கும் முக்கிய தலைவர்கள் இல்லை. இந்திய மக்களின் பிரதிநிதியாக காங்கிரஸ் கட்சிதான் இருந்தது. தலைவர் எங்கிருந்து வந்தார்? தென் ஆப்பிரிக்காவில் இருந்துதான் தலைவர் வந்தார். அவர்தான் மகாத்மா காந்தி. அவரை நமக்கு கொடுத்தது யார்? தென் ஆப்பிரிக்கா கொடுக்கவில்லை. குஜராத் மாநிலம்தான் காங்கிரஸ் கட்சிக்கு உண்மைான தலைவரை கொடுத்தது. அந்த தலைவர்தான் சிந்திக்க, போராட, வாழும் வழியை காட்டினார்.

காந்திஜி இல்லாமல், காங்கிரஸ் கட்சி சுதந்திரம் பெற்றிருக்க முடியாது. குஜராத் இல்லையென்றால், காந்திஜி இருந்திருக்கமாட்டார். இந்தியாவுக்கு வழிகாட்டிய மாநிலமே குஜராத்தான். காந்திஜியிடம் 5 மிகப் பெரிய தலைவர்கள் இருந்தனர். அவர்கள் இருவர் குஜராத்தைச் சேர்ந்தவர்கள்.

ஆனால் குஜராத் தற்போது சிக்கி கொண்டுள்ளது. அதனால் வழி காண முடியவில்லை. குஜராத் முன்னேற விரும்புகிறது. நான் காங்கிரஸ் கட்சி உறுப்பினர். குஜராத் காங்கிரஸ் கட்சியால் வழிகாட்ட முடியவில்லை என வெட்கத்துடன் கூறவில்லை. அச்சத்துடன் கூறுகிறேன். நம்மால் குஜராத்துக்கு வழிகாட்ட முடியவில்லை. கடந்த 30 ஆண்டுகளாக குஜராத்தின் எதிர்பார்ப்புகளை நம்மால் நிறைவேற்ற முடியவில்லை.

குஜராத்தின் முதுகெலும்பே சிறு வணிகர்கள்தான். அவர்களின் வாழ்க்கை போராட்டமாக உள்ளது. புதிய தொலைநோக்குக்காக விவசாயிகள் குரல் எழுப்புகின்றனர். காங்கிரஸ் கட்சியால் அந்த தொலைநோக்கை தரமுடியும். முதலில் நாம் நமது கட்சியை வலுப்படுத்த வேண்டும். குஜராத்தில் எதிர்க்கட்சிக்கு 40 சதவீத ஓட்டுகள் உள்ளன. வெற்றிக்கு 5 சதவீத ஓட்டுக்கள்தான் தேவை. தெலங்கானாவில் ஓட்டு சதவீதத்தை நாம் 22 சதவீதம் அதிகரித்துள்ளோம். அதேபோல் குஜராத்திலும் நம்மால் ஓட்டு சதவீதத்தை அதிகரிக்க முடியும். ஆனால், கட்சியில் சிலரை வடிகட்டாமல் இது நடைபெறாது.

மக்களுடன் தொடர்பை ஏற்படுத்தி எனது உறுதிப்பாட்டை தெரியபடுத்துங்கள். நான் குஜராத்தை புரிந்துகொள்ள விரும்புகிறேன். குஜராத் மக்களுடன் தொடர்பை மீண்டும் ஏற்படுத்த நான் விரும்புகிறேன். நம்பிக்கை உங்களுக்குள் உள்ளது. அதை வெளிக்கொண்டுவருவதுதான் எனது வேலை.

இவ்வாறு ராகுல் உணர்ச்சி பொங்க பேசினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.