போபால்: கட்டாய மத மாற்றத்தில் ஈடுபடுவோருக்கு மரண தண்டனை விதிக்க வகை செய்யும் சட்டம் இயற்றப்படும் என்று மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ் தெரிவித்துள்ளார்.
மத்திய பிரதேசத்தில் பாஜக ஆட்சி நடத்தி வருகிறது. அந்த மாநில அரசு சார்பில் சுமார் 1.27 கோடிக்கும் மேற்பட்ட பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1,250 உதவித் தொகை வழங்கப்படுகிறது. மகளிர் தினத்தையொட்டி மாநில தலைநகர் போபாலில் நேற்று பெண்களுக்கு உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாநில முதல்வர் மோகன் யாதவ் பேசியதாவது:
மகளிர் தினத்தையொட்டி இன்றைய தினம் எனது பாதுகாப்பு மற்றும் அனைத்து அலுவல்களையும் பெண் அதிகாரிகளே மேற்கொள்கின்றனர். கார் ஓட்டுநர் முதல் செய்தியாளர் சந்திப்பு வரை அனைத்து நிகழ்ச்சிகளையும் பெண்களே மேற்கொண்டு வருகின்றனர். பெண்களின் முன்னேற்றத்துக்காக மத்திய பிரதேச அரசு பல்வேறு திட்டங்களை வெற்றிகரமாக செயல்படுத்தி வருகிறது. இன்றைய தினம் மத்திய பிரதேசம் முழுவதும் 1.27 கோடிக்கும் மேற்பட்ட பெண்களுக்கு ரூ.1,552.73 கோடி உதவித் தொகை வழங்கப்பட்டு உள்ளது. அவரவர் வங்கிக் கணக்குகளில் நேரடியாக பணம் வரவு வைக்கப்பட்டிருக்கிறது.
மாநிலத்தின் சில பகுதிகளில் அப்பாவி இளம்பெண்கள் ஏமாற்றப்பட்டு, கட்டாய மதமாற்றம் செய்யப்பட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படுகின்றனர். இதுபோன்ற கொடுமைகளை ஒருபோதும் சகித்துக் கொள்ள முடியாது. இத்தகைய குற்றங்களில் ஈடுபடுவோர், உயிர் வாழ தகுதி அற்றவர்கள். மத்திய பிரதேசத்தில் ஏற்கெனவே மத சுதந்திர சட்டம் அமலில் உள்ளது. இந்த திட்டத்தில் திருத்தங்கள் செய்து, கட்டாய மதமாற்றத்தில் ஈடுபடுவோருக்கு மரண தண்டனை விதிக்க வழிவகை செய்யப்படும். இவ்வாறு முதல்வர் மோகன் யாதவ் பேசினார்.
இதுகுறித்து மத்திய பிரதேச அரசு வட்டாரங்கள் கூறியதாவது: கடந்த 2021-ம் ஆண்டு மார்ச் மாதம் மத்திய பிரதேச சட்டப்பேரவையில் மத சுதந்திர சட்டம் நிறைவேற்றப்பட்டது. இந்த சட்டத்தின்படி ஒருவர் மதம் மாற விரும்பினால் 60 நாட்களுக்கு முன்பாக மாவட்ட ஆட்சியரிடம் விண்ணப்பிக்க வேண்டும். சம்பந்தப்பட்ட மதபோதகரும் 60 நாட்களுக்கு முன்பு மாவட்ட நிர்வாகத்திடம் முறைப்படி தகவல் தெரிவிக்க வேண்டும்.
கட்டாயப்படுத்தியோ, ஏமாற்றியோ மதமாற்றம் செய்தால் 3 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும், ரூ.50,000 அபராதமும் விதிக்கப்படும். ஒன்றுக்கும் மேற்பட்டோரை கட்டாயப்படுத்தியோ, ஏமாற்றியோ மதமாற்றம் செய்தால் 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும், ரூ.1 லட்சம் வரை அபராதமும் விதிக்கப்படும். கட்டாய மத மாற்ற திருமணங்கள் ரத்து செய்யப்படும். இவை உட்பட பல்வேறு கடுமையான விதிகள் மத சுதந்திர சட்டத்தில் இடம்பெற்றுள்ளன.
தற்போது மகளிர் தினத்தையொட்டி முதல்வர் மோகன் யாதவ் வெளியிட்ட அறிவிப்பின்படி மத சுதந்திர சட்டத்தில் பல்வேறு திருத்தங்கள் செய்யப்பட உள்ளன. இதன்மூலம் கட்டாய மதமாற்றத்தில் ஈடுபடுவோருக்கு மரண தண்டனை விதிக்க வகை செய்யும் புதிய விதிகள் சேர்க்கப்படும். விரைவில் சட்டத் திருத்த மசோதா, பேரவையில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்படும்.
இவ்வாறு மத்திய பிரதேச அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.