டமாஸ்கஸ்: மத்திய கிழக்கு நாடான சிரியாவில் அந்த நாட்டின் பாதுகாப்புப் படையினர் மற்றும் முன்னாள் அதிபர் ஆசாத் ஆதரவாளர்கள் இடையே ஏற்பட்ட கடும் மோதலில் இரு தினங்களில் மட்டும் பொதுமக்கள் உள்பட 1,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இது அந்த நாட்டு வரலாற்றில் மோசமான உள்நாட்டு வன்முறை சம்பவங்களில் ஒன்றாக அமைந்துள்ளது.
முன்னாள் அதிபர் ஆசாதுக்கு ஆதரவாக இருந்த அலவைட் சிறுபான்மை பிரிவினருக்கு எதிராக கடந்த வியாழக்கிழமை அன்று அந்த நாட்டின் தற்போதைய அரசு ஆதரவாளர்கள் துப்பாக்கி சூடு நடத்தியது இந்த கலவரத்துக்கு காரணமாக அமைந்துள்ளது என்ற தகவல் கிடைத்துள்ளது. இதற்கு பதில் தாக்குதலை ஆசாத் ஆதரவாளர்கள் கொடுத்துள்ளனர். இதை சர்வதேச செய்திகளை வெளியிடும் ஊடக நிறுவனங்கள் களத்தில் இருந்து உறுதி செய்துள்ளன.
கடந்த ஆண்டு டிசம்பரில் துருக்கி ஆதரவு பெற்ற ஹயாத் தஹ்ரிர் அல் ஷாம் (எச்டிஎஸ்) கிளர்ச்சி படை சிரியாவை கைப்பற்றியது. அதையடுத்து அப்போது அதிபராக இருந்த ஆசாத் வெளிநாட்டுக்கு தப்பினார். இந்நிலையில், துப்பாக்கிச் சூடு சம்பவத்தை அடுத்து அந்த நாட்டின் வடமேற்கில் உள்ள கடலோர பகுதிகளான டார்டஸ் மற்றும் லடாகியா மாகாணங்களில் சிரியா பாதுகாப்பு படை மற்றும் ஆசாத் ஆதரவாளர்களுக்கு இடையே மோதல் வெடித்தது.
அங்கு நிலவும் அசாதாரணச் சூழலை கட்டுப்படுத்த கூடுதல் படைகளை அந்தப் பகுதிக்கு அனுப்பியது அந்த நாட்டின் இடைக்கால அரசு. அதன் பலனாக தற்போது வன்முறைச் சம்பவம் கட்டுக்குள் வந்துள்ளதாக அந்த நாட்டின் அரசு ஊடகம் தெரிவித்துள்ளது. சிரியாவின் வடமேற்கில் உள்ள கடலோர பகுதிகளுக்கு செல்லும் சாலைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஊரடங்கு உத்தரவும் அமலில் உள்ளது.
இரு தரப்புக்கும் இடையே இரண்டு நாட்களாக நடந்த மோதலில் 1,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களில் 745 பேர் பொதுமக்கள், 125 பேர் பாதுகாப்பு படையினர், 148 பேர் ஆசாத் ஆதரவாளர்கள் என்பதை சிரியாவின் மனித உரிமைகள் கண்காணிப்பகம் உறுதி செய்துள்ளது.
முந்தைய அதிபர் ஆசாத் ஆட்சியில் தற்போது குறி வைக்கப்பட்டுள்ள அலவைட் சிறுபான்மை பிரிவினர் அரசின் பல்வேறு முக்கிய பொறுப்புகளில் இருந்துள்ளனர். தற்போது அங்கு புதிய ஆட்சி அமைந்துள்ள நிலையில், அவர்களை பழிவாங்கும் நடவடிக்கைகளை இடைக்கால அரசு ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த மோதல் சம்பவத்தால் லடாகியா பகுதியில் மின்சாரம், குடிநீர் போன்ற அத்தியாவசிய சேவைகள் துண்டிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஆசாத் ஆதரவு சிறுபான்மையினரின் வீடுகள் சூறையாடப்பட்டதாகவும், தீ வைக்கப்பட்டதாகவும் தகவல்கள் கூறுகின்றன. சிலர் லெபனானுக்கு தப்பி உள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பெண்கள் சுட்டுக் கொல்லப்படுவதற்கு முன்பு ஆடையை அகற்றி நிர்வாணமாக வீதியில் அழைத்து செல்லப்பட்ட அவலமும் அரங்கேறியதாக அதிர்ச்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன. உயிரிழந்தவர்களின் உடல்கள் அப்படியே வீதிகளில் கேட்பாரற்று இருப்பதாகவும், தாக்குதலுக்கு அஞ்சி உடல்களை யாரும் கொண்டு செல்ல முன்வரவில்லை எனவும் தெரிகிறது.
பின்னணி என்ன? – சிரியாவில் ஷியா பிரிவை சேர்ந்த முன்னாள் அதிபர் ஆசாத்துக்கும் சன்னி பிரிவை சேர்ந்த கிளர்ச்சிக் குழுக்களுக்கும் இடையே சுமார் 14 ஆண்டுகளாக உள்நாட்டுப் போர் நடைபெற்று வந்தது. துருக்கி ஆதரவு பெற்ற ஹயாத் தஹ்ரிர் அல் ஷாம் (எச்டிஎஸ்), சிரியா தேசிய படை, அமெரிக்க ராணுவத்தின் ஆதரவு பெற்ற பிரீ சிரியா படை உள்ளிட்ட பல்வேறு கிளர்ச்சிக் குழுக்கள் சிரியா அரசுக்கு எதிராக போரிட்டு வந்தன.
ஆசாத்துக்கு ரஷ்யாவும் ஈரானும் ஆதரவு அளித்து வந்தன. இந்தச் சூழலில் துருக்கி ஆதரவு கிளர்ச்சி குழுக்கள் கடந்த ஆண்டு டிசம்பரில் சிரியா தலைநகர் டமாஸ்கஸை கைப்பற்றியது. அதையடுத்து ஆசாத் வெளிநாட்டுக்கு தப்பினார். தற்போது அங்கு இடைக்கால அதிபராக அகமது அல்-ஷரா உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.